Last Updated : 24 May, 2017 09:10 AM

 

Published : 24 May 2017 09:10 AM
Last Updated : 24 May 2017 09:10 AM

ஆப்கன் விஷயத்தில் இந்தியாவுக்கு சொந்தக் கொள்கை வேண்டும்!- ஹமீத் கர்ஸாய் பேட்டி!

கடந்த பல ஆண்டுகளாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் பெயரிலான அமெரிக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து பகிரங்கமாக விமர்சித்துவருபவர் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்ஸாய். ஏப்ரல் 13-ல் அணு ஆயுதம் அல்லாத 22,000 டன் எடை கொண்ட மிகப் பெரிய வெடிகுண்டை அமெரிக்கப் படைகள் ஆப்கனில் வீசியதைத் தொடர்ந்து, அஷ்ரஃப் கனி தலைமையிலான தற்போதைய ஆப்கன் அரசையும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். தற்போதைய அரசின் மீது முதல் முறையாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். சமீபத்தில் டெல்லி வந்திருந்த அவர், இவ்விவகாரம் தொடர்பான தனது கருத்துகளுடன், எதிர்காலத்தில் ஆப்கனுடனான இந்தியாவின் பங்கு குறித்தும் இந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார். பேட்டியின் சில துளிகள்:

ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஜிபியூ/43-பி எம்.ஓ.ஏ.பி. எனும் மிகப் பெரிய குண்டை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கடுமையாக விமர்சித்தீர்கள். ஆப்கனின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று பலரும் கருதும் ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான ஐ.எஸ். கோராசான் படையினரைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

இரண்டு காரணங்களுக்காக இதை எதிர்க்கிறேன். முதலாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக நங்கர்கர் மாகாணத்தின் ஷின்வார் மாவட்டத்தில் கால் பதித்து, அங்குள்ள குகைகளைப் பயன்படுத்தி, அங்குள்ள மக்களுக்குத் தொல்லை ஏற்படுத்தி, கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றி ஏகப்பட்ட பிரச்சினைகளைச் செய்யும் வரை, எதுவுமே செய்யாமல் ஐ.எஸ். அமைப்பினரை அனுமதித்தது அமெரிக்கா. இந்தக் காலகட்டத்தில் டூரண்ட் எல்லை வழியாக ஆப்கனுக்குள் ஐ.எஸ். அமைப்பினர் ஊடுருவுவதைத் தடுக்கும் எல்லா வாய்ப்புகளும் அமெரிக்காவுக்கு இருந்தன. எல்லையைத் தொடர்ந்து கண்காணித்தும் வந்தது அமெரிக்கா. அப்படியிருக்க, ஆயுதங்களுடன் அந்தப் பகுதியை ஐ.எஸ். அமைப்பினர் கடந்துவர அமெரிக்கா அனுமதித்தது. இத்தனைக்கும் மலைப்பாங்கான அந்தப் பகுதியைக் கடந்துவருபவர்களை, குறைவான ஆட்களைக்கொண்டே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், எதையும் அமெரிக்கா செய்யவில்லை. ஐ.எஸ். படையினருக்கு எதிராக உள்ளூர் மக்கள் கிளர்ந்தெழுந்தபோது, அவர்களுக்கு உதவாமல், ஐ.எஸ். படையினருக்கு எதிரான அவர்களது தற்காப்புப் பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் மீதே அமெரிக்க விமானப் படைகள் தாக்குதல் நடத்தின.

ஆனால், அது தவறுதலாக நடந்தது என்கிறதே அமெரிக்கா?

இருக்கலாம். ஆனால், அதுபற்றி எங்களுக்குத் தெரியாது. அது தவறுதலான நடவடிக்கை போலத் தெரிகிறது. ஆனால், இந்தத் தவறுகளை எப்படித் தொடர்ந்து செய்கிறார்கள்?

யார் எதிரி என்று அவர்களுக்குத் தெரிய வேண்டாமா? மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அங்குள்ள பழங்குடியினத் தலைவர்கள் எல்லோருமே தங்கள் மக்களுடன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகு, அமெரிக்கா வந்து ஐ.எஸ். பெயரைச் சொல்லி இப்படி ஒரு தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதுவும், அணுகுண்டுக்குச் சற்றுக் குறைவான சக்தி கொண்ட மிகப் பெரிய குண்டை வீசி! இந்தத் தாக்குதலும் ஐ.எஸ்.ஸுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விஷயம் இதுதான்: ஆப்கனில் தனது குண்டைச் சோதித்துப் பார்த்திருக்கிறது அமெரிக்கா. அதன் மூலம், தனது எதிரிகளுக்கும் ஓர் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அதிபர் அஷ்ரஃப் கனியின் அரசு தேசத் துரோகம் செய்ததாகக் குற்றம்சாட்டினீர்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தேசிய ஒருமைப்பாடு அரசைப் பலவீனப்படுத்தாதா?

ஆப்கன் அரசைப் பலவீனப்படுத்த நான் விரும்பவில்லை. அதேசமயம், ஆப்கனைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்கா வீசிய குண்டு ஆப்கன் மீதான விதிமீறல்; ஆப்கன் மீதான தாக்குதல். உண்மையில், அமெரிக்கா எங்கள் நட்பு நாடாக இருக்க வேண்டியது. எங்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது அமெரிக்கா. அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் ஆப்கனை வலுப்படுத்த வேண்டும், பயங்கரவாதத்தை வீழ்த்த வேண்டும். எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆப்கன் அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், பாகிஸ்தான் விமானப் படைகள் எங்கள் எல்லையைக் கடந்துவந்து பல முறை தாக்குதல் நடத்தின. தரைப் படையினரும் ஆப்கனுக்குள் வந்திருக்கின்றன. ஆனால், அமெரிக்கா ஒன்றுமே செய்யவில்லை.

அமெரிக்காவின் முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அமெரிக்காவின் திட்டங்களில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

2002-லிருந்தே அமெரிக்காவின் நிலையில்லாத தூதரக உறவைப் பார்த்துவருகிறோம். ஒருமுறை ஆப்கன் வந்த அமெரிக்க அதிகாரிகள், பாகிஸ்தானுக்குள்ளேயே பயங்கரவாதிகள் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள் என்று சொன்னார்கள். அப்புறம், பாகிஸ்தானுக்கு நிதியாக லட்சக்கணக்கான டாலர்கள் வழங்கினார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கன் கெரில்ல அமைப்பான ‘ஹக்கானி நெட்வொர்க்’கை ஐ.எஸ்.ஐ-யின் வலதுகரம் என்று அமெரிக்கா சொன்னது. இது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளுடன் அறிக்கை வெளியிட்டார்கள். அதேசமயம், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள், நிதித் தொகையும் தொடர்ந்து வழங்கினார்கள். சமீபத்தில்கூட ‘கூட்டணி ஆதரவு நிதிய’த்தின் கீழ் சுமார் ரூ.22,000 கோடியை பாகிஸ்தானுக்கு வழங்கினார்கள். அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது.

ஆகவே, என்னைப் பொறுத்தவரை அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகரின் சமீபத்திய வருகை, எனது ஆட்சியின்போது என்ன நடந்ததோ அதையேதான் நினைவுபடுத்துகிறது. எனக்கு அடுத்து அமைந்த ஆட்சியிலும் அதுதான் தொடர்கிறது.

அமெரிக்கா இரட்டை நாக்குடன் பேசுவதாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். ரஷ்யாவும் அதைத்தானே செய்கிறது? தாலிபானைப் பாதுகாக்க முயலும் ஈரானின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரஷ்யா, இந்தியா, சீனா, ஏன் ஈரான் கூட 2002-லிருந்து ஆப்கனில் அமெரிக்காவின் செயல்பாடுகளை ஆதரித்தன. 2001-ல் நடந்த போன் மாநாட்டில் அந்நாடுகளும் பங்கேற்றிருந்தன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர், ஆப்கனில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருதல், பாகிஸ்தானின் பிரச்சினைகள் உட்பட அமெரிக்காவின் நோக்கங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தொடர்ந்தன. ஆனால், அதனால் நடந்தது என்ன? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கூட்டுறவே அந்நாடுகளுக்குள் போட்டி ஏற்பட வழிவகுத்திருக்கிறது. எனக்கு நினைவிருக்கிறது, 2008-ல் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டின்போது, ஆப்கனில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் முதன்முறையாகப் புகார் செய்தேன்.

புகார் செய்தீர்களா?

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கப் படைகள் கையாண்ட விதம், மேற்கொண்ட நடவடிக்கைகள், வான்வழித் தாக்குதல்கள், கைதுகள், சித்ரவதைகள், பாகிஸ்தானில் நடத்தப்படும் பயங்கரவாத முகாம்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கை இல்லாதது - ஆகியவற்றின் காரணமாக ஆப்கனில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருவது பற்றியும், தாலிபான்கள் பலம் பெற்றுவருவது பற்றியும் அவரிடம் எடுத்துச் சொன்னேன். உலகின் பிற பகுதிகளில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆப்கன் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவே புதின் என்னிடம் சொன்னார். ரஷ்யாவின் இந்த நிலைப்பாடு 2002 முதல் 2012 வரை தொடர்ந்தது. அதற்குப் பிறகு, ஆப்கன் தொடர்பான நிலைப்பாடு குறித்து அமெரிக்காவிடம் கேள்வி கேட்கத் தொடங்கியது ரஷ்யா. ஆப்கனில் சண்டைகள் குறையவில்லை, உயிரிழப்புகள் தொடர்ந்தன, பயங்கரவாதம் அதிகரித்தது - ஆனாலும் ஆப்கன் போருக்காகத் தொடர்ந்து நிதி ஒதுக்குவது ஏன் என்பன போன்ற கேள்விகளை ரஷ்யா எழுப்பியது.

பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் நோக்கம் என்பதுபோல், போர் ஏன் எதிர்மறை திசையை நோக்கித் திரும்பியது? 2002-ல் உலகமெங்கும் இருந்து ஆதரவைப் பெற்றிருந்தாலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் ஆப்கனில் எப்படித் தோற்றன?

ஆப்கனில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவரும் ரஷ்யாவின் முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்க அணுகுமுறை. வன்முறையைக் கைவிட விரும்பும் ஆப்கானியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ரஷ்யர்கள் மட்டுமல்ல. அமெரிக்காவும் நேரடியாகவும், பாகிஸ்தான் மூலமாகவும் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கத்தாரில் பேச்சுவார்த்தை நடந்தது எனக்குத் தெரியும். பிற நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. ஜெர்மனி பேச்சுவார்த்தை நடத்தியது. ஓஸ்லோ நகரில் தாலிபான்களுக்கும் ஆப்கன் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்புகளை நார்வே நடத்தியது. அப்படி இருக்க ரஷ்யாவை மட்டும் குறிப்பிடுவது ஏன்?

தாலிபான்களையும் பேச்சுவார்த்தையில் சேர்த்துக்கொள்வது பலன் தரும் என்று இன்னமும் நினைக்கிறீர்களா?

தாலிபான்களை எனது சகோதரர்கள் என்று இனி ஒருபோதும் அழைக்கப்போவதில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். ஆப்கன் மக்களுக்கு எதிரான அவர்களது அட்டூழியங்கள் கொடூரமானவை. அவர்கள் நடத்தும் தாக்குதல்கள் ஆப்கனில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து இருப்பதற்கே வழிவகுக்கின்றன. அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் உண்மையிலேயே நினைத்தால், ஆப்கன் அரசுடனும் மக்களுடனும் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா இன்றைக்கு அமெரிக்காவின் வலுவான கூட்டு நாடு. ஆப்கன் பாதுகாப்பில் இந்தியா பெரிய அளவில் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்கா பகிரங்கமாக அழைப்புவிடுத்திருக்கிறது. இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஆப்கனில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக அமெரிக்கா கேட்டுக்கொண்டது சரியானதுதான். நான் ஆப்கன் அதிபராக இருந்தபோதும் இந்தியாவிடம் இதைத்தான் கேட்டுக்கொண்டேன். தற்போதைய அதிபர் அஷ்ரஃப் கனியும் அதையே செய்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுப்பது சரியானது எனும் சூழலில், இந்தியா இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆப்கன் விஷயத்தில் சொந்தமான வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு வேண்டும்.

இன்றைக்கு, ஆப்கனில் இந்தியா நிறைய பங்களிப்பு செய்ய வேண்டும் என்கிறது அமெரிக்கா. நாளைக்கு அப்படிச் செய்ய வேண்டாம் என்றும் சொல்லலாம். அப்போது இந்தியா பின்வாங்கிவிடுமா? இந்தப் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சொந்தக் கருத்தின் அடிப்படையில், அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் வகையில் ஆப்கன் தொடர்பான சொந்தக் கொள்கை இந்தியாவுக்கு இருக்க வேண்டும்.

‘நிறைய செய்வது’ என்றால் என்ன அர்த்தம்? ஆப்கனில் இந்திய ராணுவத்தைக் கொண்டுவருவதா?

இல்லை. ராணுவத்தைக் கொண்டுவருவது என்பது அதற்கு அர்த்தமல்ல. எங்களுக்கு அது தேவையில்லை. ‘நிறைய செய்வது’ என்றால், ஆப்கன் தன் சொந்தக் கால்களில் நிற்கவும், ராணுவத்தைப் பலப்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடவும், டூரண்ட் எல்லை வழியாக ஆப்கனின் இறையாண்மை மீறப்படுவதைத் தடுக்கவும், ஆப்கன் ஒரு உறுதியான நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளில் உதவவும் இந்தியா பங்களிக்க வேண்டும் என்று அர்த்தம். இந்தியா ஆப்கானிஸ்தான் உறவின் அடிப்படையிலான முயற்சிகளாக இவையெல்லாம் அமைய வேண்டும். மூன்றாம் நாட்டின் கோரிக்கையின் அடிப்படையில் அல்ல. இந்தியாவிடம் அப்படி ஒரு கொள்கை இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

© ‘தி இந்து’(ஆங்கிலம்),

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x