Last Updated : 01 Sep, 2016 10:05 AM

 

Published : 01 Sep 2016 10:05 AM
Last Updated : 01 Sep 2016 10:05 AM

வேண்டாம் கட்சித்தாவல் சட்டம்!

சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மக்களவையும் மாநிலங்களவையும் தலா 14 மசோதாக்களை நிறைவேற்றின. அவற்றில் ஒன்று பொதுச் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவருவதற்கான அரசியல் சாசனத் திருத்த மசோதா. அதை நிறைவேற்ற ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எப்படி வாக்களித்தார் என்பது அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

மற்ற எல்லா மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அவைத் தலைவர் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடும்போது அதை ஆதரிக்கும் உறுப்பினர்கள் ‘ஐ’ என்று சொல்வார்கள். எதிர்ப்பவர்கள் ‘நோ’ என்பார்கள். ஆதரித்தவர்களின் குரல்கள்தான் அதிகமாக ஒலித்தன என்பதைத் தலைவர்தான் முடிவுசெய்வார். அதனால், ஒவ்வொருவரும் எப்படி வாக்களித்தனர் என்பது மட்டுமல்ல, வாக்கெடுப்பில் யார் பங்கேற்றார்கள் என்றும் நம்மால் அறிய முடியாது. பொதுவாக, வெகுசில மசோதாக்களுக்குத்தான் பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அரசியல் சாசனத் திருத்தங்களுக்குத்தான் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்குகள் தேவை. அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் ‘மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை’என்ற அளவில் வாக்குகள் தேவை என்பதால் வாக்கெடுப்புப் பதிவுசெய்யப்படுகிறது.

அமெரிக்கத் தேர்தல் முறை

கடந்த நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேறிய 179 மசோதாக்களில் 19-க்கு மட்டுமே பதிவுசெய்யப்பட்ட முறையிலான வாக்குகள் கிடைத்தன. 2004-09 காலகட்டத்தின் 14-வது நாடாளுமன்றத்தின் கதை இன்னும் மோசம். அதில் நிறைவேறிய 248 மசோதாக்களில் 8 மட்டுமே பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பைச் சந்தித்தன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கம் தனது ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடிமக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். அதனால் பதிவுசெய்யப்பட்ட வாக்குப்பதிவு முறை அவசியமானது. தாங்கள் தேர்வுசெய்த பிரதிநிதிகள் ஒவ்வொரு மசோதாவுக்கும் பிரச்சினைக்கும் எப்படி வாக்களித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்வது குடிமக்களுக்கும் அவசியம். அத்தகைய விவரங்கள் கிடைக்கவில்லை என்றால், தங்களின் பிரதிநிதிகள் வாக்களித்த விதம் பற்றி மக்கள் கேள்வி எழுப்ப முடியாது.

அமெரிக்கத் தேர்தல் முறை இத்தகைய விவரங்களை வைத்துள்ளது. அமெரிக்காவின் விவாதங்களைப் பாருங்கள். அதிபர், ஆளுநர் அல்லது வேறு எந்தப் பதவிக்கும் மறுபடியும் போட்டியிடும் ஒவ்வொரு செனட்டரும் தொலைக்காட்சி விவாதங்களில் மக்களின் கேள்விகளை எதிர்கொள்வதைப் பார்க்கலாம்.

கட்சித்தாவல் தடைச்சட்டம்

நம்முடைய கட்சித்தாவல் சட்டத்தைப் பாருங்கள். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொறடா என்ன சொல்கிறாரோ அதன்படி வாக்களிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யவில்லை என்றால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும். ஆகையால், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தன் வாக்கைப் பதிவுசெய்வது ஒரு சம்பிரதாயம்தான். ஏனென்றால், யாருக்கு வாக்களிப்பது என்பது முன்னதாகவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. இப்படி வாதிடுவது சிக்கலானதுதான். இதை நாம் நீட்டித்தால் நாடாளுமன்றத்தில் நடைபெறும் எல்லா விவாதங்களும் தேவையற்றவை. ஒவ்வொரு கட்சியின் தலைமையும் முன்னதாகவே முடிவெடுத்து வைத்துள்ளதே, அதனால், கடைசியில் அதுதானே நடக்கும் என்றும் நமக்குத் தோன்றும்.

அதற்கும் மேலாகப் போய், ஒருவர் நாடாளுமன்றமே வேண்டாம் என்றும் வாதாடலாம். ஒவ்வொரு கட்சிக்குமான பிரதிநிதிகள் கொண்ட ஒரு சின்னக் குழு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது என்றும் சொல்லலாம். ஆனால், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையே கேள்விக்கு உட்படுத்துவதாக அது அமைந்துவிடும்.

குறிப்பிட்ட எல்லைகள் கொண்ட தொகுதிகள் முறையை நாம் வைத்துள்ளோம். தொகுதி மக்களால் மக்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுகிறார். சட்டங்கள் உருவாக்குதல், அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குதல் உள்ளிட்ட பல வேலைகளை அவர் செய்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய நலனுக்குக்காக அல்லது தங்களைத் தேர்வு செய்த மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். இந்தத் தர்க்கத்தைக் கட்சித்தாவல் தடைச்சட்டம் தலைகீழாக்குகிறது. கட்சி சொல்வதைக் கேட்டு நடந்தால் போதும் என்கிறது அது.

ஆந்திரப் பிரிவினை

பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் வாக்கெடுப்பு போதுமான அளவுக்கு இல்லை என்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கேள்வி கேட்க முடியாமல் செய்கிறது. ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமே அந்த அடிப்படையை இது தாக்குகிறது. உதாரணமாக, ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான வாக்கெடுப்பைப் பற்றிப் பேசுவோம். அந்த மாநிலத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தேர்வுசெய்யப்பட்ட தொகுதிகளைப் பொறுத்துத் தங்களின் முடிவுகளை எடுப்பதில் மிகவும் பிரச்சினைகளை அனுபவித்த விவகாரம் இது. ஆனாலும், அனைத்துக் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாக்களித்திருப்பார்கள் என்று ஒருவர் அனுமானிக்கலாம். கடலோர ஆந்திரம், ராயலசீமை பகுதிகளைச் சேர்ந்தவர்களும்தான். ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் கட்சித் தலைமை சொன்னபடியே வாக்களித்திருப்பார்கள். நமக்கு உறுதியாக எதுவும் தெரியாது. ஏனென்றால், வாக்கெடுப்பு பதிவுசெய்யப்படவில்லை.

டெல்லியில் 2012-ல் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்ட ( திருத்த) மசோதா கொண்டுவரப்பட்டது. அது வாக்கெடுப்புக்கு வந்தபோது, 203 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் மக்களவையில் இருந்தனர். அந்த வாக்கெடுப்பைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வந்ததால், அது பதிவுசெய்யப்பட்டது. ஆகையால், அந்த வாக்கெடுப்பில் யாரெல்லாம் கலந்துகொள்ளவில்லை எனும் விவரங்கள் நமக்குத் தெரியும்.

மேஜையில் வாக்கு

அனைத்து வாக்கெடுப்புகளும் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆக்குவதால் என்ன கஷ்டம் வந்துவிடும்? ஒவ்வொரு மசோதாவுக்கும் அல்லது வாக்கெடுப்பு தேவைப்படுகிற நிகழ்வுக்கும் குரல் வாக்கெடுப்பு வேண்டும் என்கின்றன விதிகள். யாராவது ஒரு உறுப்பினர் அவைத் தலைவரின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கினால் அப்போது பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பு நடக்கும். ஆகையால், இத்தகைய மாற்றம் வேண்டும் என்று நினைக்கிற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவால் இதனை ஏற்படுத்திவிட முடியும். இல்லையென்றால், விதிகளைத் திருத்த வேண்டும். நமது நாடாளுமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பை நடத்துவதற்கு எளிதான கட்டமைப்பு உள்ளது. அனைத்து உறுப்பினர்களின் மேஜைகளிலும் வாக்களிக்கும் கருவி உள்ளது. அவர்கள் அதனை அழுத்தித் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தால் போதும்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முறை வேறுபட்டது. காமன்ஸ் சபையின் உறுப்பினர்கள் இரண்டு வேறுபட்ட இடங்களுக்குச் சென்று அவர்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவுசெய்ய வேண்டும். பெரும்பாலான மசோதாக்களின் மீதான வாக்களிப்புகள் அங்கே பதிவுசெய்யப்படுகின்றன. இந்தியாவிலும் அனைத்து வாக்கெடுப்புகளும் பதிவுசெய்யப்பட்டால் நல்ல மாற்றம் ஏற்படும். தங்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்குத் தங்களின் நிலைப்பாடுகளை விளக்குவதற்கான தேவையை உறுப்பினர்களுக்கு அது ஏற்படுத்தும். வாக்களிக்கச் செல்வதற்கு முன்னால் கவனமாகப் பரிசீலிக்கவும் அது தொடர்பான விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அது வலியுறுத்தும்.

பலமடையும் ஜனநாயகம்

கட்சியின் கொறடாவால் தீர்மானிக்கப்படுகிற வாக்கெடுப்புகளில் தங்களின் நிலைப்பாடுகளை எடுத்துவைக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். கட்சித்தாவல் தடைச் சட்டம் நீக்கப்பட்டால், ஜனநாயக உணர்வுகள் மேலும் பலமடையவே செய்யும். அரசாங்கம் வேறு ஏதேனும் புதுச் சட்டத்தைக் கொண்டுவர முடிவுசெய்தால், அவர்கள் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை அதற்கு இணங்கச் செய்ய வேண்டும். சில கட்சித் தலைவர்களை அல்ல. சுருக்கமாகச் சொன்னால், இந்த மாறுதல் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரத்தை மேலும் உயர்த்தும். பதிவுசெய்யப்பட்ட முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்குக் கட்சித்தாவல் சட்டத்தை மாற்ற அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும். அல்லது ஒவ்வாரு முறையும் வாக்கெடுப்பு வரும்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பைக் கோர வேண்டும். அரசியல் கடந்த முறையில் ஒன்று சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு அணி இந்த சீர்திருத்தத்தை முன்னெடுக்கலாம்.

- எம்.ஆர். மாதவன், தலைவர், பிஆர்எஸ் சட்ட ஆய்வு நிறுவனம்

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x