Published : 23 Sep 2016 10:07 AM
Last Updated : 23 Sep 2016 10:07 AM

அறிவியல் அறிவோம்: ‘கள்ளி’யிலே தொழில்நுட்பம் கண்டான்!

பெரிய விஞ்ஞானிகளின் நானோ தொழில்நுட்ப அறிவை மேம்படுத் திக்கொள்ள உதவியிருக்கிறது சாதாரண கள்ளிச் செடியின் முள்.

‘அதெப்படி?’ என்ற கேள்விக்கு முன், கள்ளிச் செடியைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். தாவரங்கள் அவை வாழ்கிற இடத்துக்கேற்றபடி சில தகவமைப்புகளைப் பெற்றிருக்கும் என்பது நாம் அறிந்ததுதான். செழிப்பான இடங்களில் வாழும் தாவரங்களில் இலை மிகப்பெரியதாகவும், வறட்சிப் பகுதியில் வாழும் தாவரங்களின் இலைகள் மிகமிகச் சிறியதாகவும் இருக்கும். இலை பெரிதாக இருந்தால், நீர்ச்சத்து அதிகமாக நீராவியாகிவிடும் என்பதால், தாவரத்துக்கு இயல்பாகவே அமைந்துள்ள தகவமைப்பு இது. ‘மழையே பெய்யாத பகுதியில் வாழும் கள்ளிச் செடிகளின் இலைகள், முட்களாகவே மாறிவிட்டன’ என்பது தாவரவியல் ஆய்வாளர்களின் அரதப்பழசான கண்டுபிடிப்பு. அப்படியென்றால், புதிய கண்டுபிடிப்பு எது என்கிறீர்களா? அந்த முள், தவிக்கிற வேருக்கு எப்படித் தண்ணீர் தருகிறது என்பதுதான்.

பாலைவனத்தில் பகலெல்லாம் வெப்பம் தகித்தாலும், அதிகாலையில் அவ்வப்போது பனிமூட்டம் தலைகாட்டும். பனிமூட்டத்தைக் குறைப்பிரசவ மழை என்று சொல்லலாம். காற்றில் உள்ள நீராவி குளிர்ந்து மிகமிகச் சிறிய நீர்க்கூறுகளாக மாறுவதே பனிமூட்டம். அந்த நீர்க்கூறுகள் ஒன்று சேர்ந்து துளியாகிவிட்டால், அதுதான் மழை.

இந்தப் பனிமூட்டத்தில் இருக்கிற தண்ணீரை முள் எப்படி நீர்த்துளியாக்குகிறது? சக்திவாய்ந்த நுண்ணோக்கியைக் கொண்டு, கள்ளிச் செடியிலுள்ள முள்ளின் கூம்புபோன்ற பகுதியை ஆராய்ந்தார்கள். ஓடுகளை அடுக்கிக் கூரை வேய்ந்ததுபோல, முள்ளின் மேற்பரப்பு ஆயிரக்கணக்கான செதில்களால் உருவாகியிருப்பது தெரிந்தது. பனிக் காற்றில் இருக்கும் நீர்க்கூறுகள் இந்த முள்ளின் செதில் போன்ற அமைப்பில் பட்டதும் ஒட்டிக்கொள்ளும்.

இரண்டு செதில்களுக்கு இடையே நுண்ணிய இடைவெளி உள்ளதால், அங்கே ‘தந்துகிக் கவர்ச்சி விசை’ செயல்படத் தொடங்கும். குளிர்பான டம்ளரில் ஸ்ட்ராவைப் போட்டால், டம்ளரின் மட்டத்தைவிட ஸ்ட்ராவில் குளிர்பானம் கொஞ்சம் ஏறி நிற்குமே அதுதான் தந்துகிக் கவர்ச்சி விசை.

இப்படி நிறைய நீர்க்கூறுகள் முள்ளின் நுனிக்கு நகர நகர.. அங்கே எல்லாம் சேர்ந்து நீர்த்துளி உருவாகிறது. துளி பெரிதானதும், எடை காரணமாக அது கள்ளிச் செடியின் மீது ஒழுகி அடிப்பாகத்தை அடையும். அப்புறம் என்ன? கள்ளிச்செடி அதை உறிஞ்சிக்கொள்ளும்.

ஆக, பனிமூட்டத்தில் இருந்து தனக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள் கிறது கள்ளிச் செடியின் முள். இந்த நுட்பத்தை அறிவியல் வளர்ச்சியில் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித் திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். உதாரணமாக, தற்போது பயன்பாட்டில் உள்ள ஜெட் பிரிண்டரில் இப்படித்தான் சிறுகூறாக மை சிதறடிக்கப்படுகிறது. அதனை திவலையாகப் படியச் செய்தால் இன்னும் நேர்த்தியான தெள்ளத் தெளிவான பிரிண்ட் கிடைக்கும் என்பது விஞ்ஞானிகளின் ஊகம்.

பிரிண்டர் மட்டுமல்ல, டிஎன்ஏ பகுப்பாய்வு, நுண் எரிசக்தி உள்ளிட்ட பல விஷயங்களிலும் இந்த நுட்பம் பயன்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. எனவே, ஆய்வு தொடர்கிறது.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x