Last Updated : 15 Nov, 2013 12:00 AM

 

Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

பிரான்ஸுக்கு எதிரான சதி

‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’ என்கிற சர்வதேசச் சான்று நிறுவனம் பிரான்ஸின் ‘கடன் பெறு திறனை’ குறைத்துக் காட்டி, அதைக் கீழே இறக்கியது. கடந்த வாரம் இதுதான் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி. பிரான்ஸ் கடும் நெருக்கடியில் சிக்கிவிட்டதாகப் பலர் பேசத் தொடங்கிவிட்டனர். சந்தைகள் சோம்பல் முறித்துக் கொட்டாவிவிட்டன. பிரான்ஸ் நாட்டிலோ வட்டி வீதத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அப்படியானால், என்னதான் நடந்தது அங்கே?

நிதிச் சிக்கன நடவடிக்கை

‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’ நிறுவனத்தின் சான்று ரைக்குப் பின்னால், வழக்கம்போலப் பெரிய அரசியலே இருக்கிறது. நிதிச் சிக்கன நடவடிக்கை என்ற கொள்கையை பிரான்ஸ் கடுமையாக அனுசரிப்பதுதான் இதற்கெல்லாம் காரணம். அதாவது, அரசியல்தான் - பொருளாதாரம் அல்ல - இதற்குக் காரணம். இது பிரான்ஸுக்கு எதிரான சான்று அல்ல, சதி! என்னடா… இவன் இப்படி எழுது கிறானே என்று பார்க்கிறீர்களா, உண்மை அதுதான்.

ஐரோப்பாவிலும் அமெரிக்கா போலத்தான். யாரும் அரசின் நிதி நிலையைக் கறாராகப் பராமரிக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்கள். வருவாய் பற்றாக்குறையாக இருந்தாலும், பட்ஜெட் பற்றாக்குறையாக இருந்தாலும், இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆனால், பிரான்ஸ் அதற்கு மாறாக இருப்பதால் இந்தப் பொறாமைகள், ஆர்ப்பாட்டங்கள்.

ஐரோப்பாவின் இதயத்தில் ‘டைம்-பாம்’

இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். ஓராண்டுக்கு முன்னால் ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகை ‘‘பிரான்ஸை, ஐரோப்பாவின் இதயத்தில் இருக்கும் ‘டைம்-பாம்’ எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அளவுக்கு ஆபத்தானது’’ என்று வர்ணித்தது. ‘‘பிரான்ஸின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டால் கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஆகியவற்றின் பொருளாதார நெருக்கடிகள் ஒன்றுமில்லை’’ என்றுகூட எழுதியது. 2013 ஜனவரியில், ‘சி.என்.என். மனி’ தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் பேசும்போது, பிரான்ஸ் அதலபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது என்றும் பிரெஞ்சுப் புரட்சியின்போது நேரிட்ட பாஸ்டில் சிறை உடைப்பு போல - பொருளாதாரத்திலும் - ஏற்படப்போகிறது என்றெல்லாம் வர்ணித்தார். இதேபோலத்தான் பலரும் பிரான்ஸ் குறித்து எழுதினார்கள்.

இந்தச் சொல்லாடல்களையெல்லாம் கேட்டு விட்டு, பிரான்ஸுக்கு ஏதோ பெரிய கேடு வந்து விட்டது என்று நினைத்து, அதன் பொருளாதார நிலைகுறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தோம். அது பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தது. எந்த நாட்டுக்குத்தான் பொருளாதார நெருக்கடி இல்லை? ஆனால், அதன் வரவு செலவு விவரங்களைப் பார்க்கும்போது, ஜெர்மனியைத் தவிர்த்து - ஜெர்மனி ஒரு விதிவிலக்கு - பிற ஐரோப்பிய நாடுகளைவிட பிரான்ஸ் நல்ல நிலையிலேயே இருந்தது.

கடன்பெறும் தகுதி ‘ஏஏஏ’

பிரான்ஸின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்தமாக இருந்தது. ஆனால், நெதர்லாந்தைவிட அதிகம். நெதர்லாந்துக்கு இன்னமும் கடன்பெறும் தகுதி ‘ஏஏஏ’ ஆகவே இருக்கிறது.

ஜெர்மானியத் தொழிலாளர்களைவிட, பிரெஞ்சுத் தொழிலாளர்கள் உற்பத்தித்திறன் அதிகம் பெற்றவர்கள். 12 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல - இப்போதும் அதே நிலைதான். பிரெஞ்சு அரசின் வரவு செலவு விவரங்களைப் பார்க்கும்போது, அதுவொன்றும் அப்படி அலறியடிக்கும் அளவுக்கு ஆபத்தானதாக இல்லை. 2010 முதலே பட்ஜெட் பற்றாக்குறை கடுமையாகக் குறைந்துவருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பிரான்ஸின் கடனுக்கும் அதன் மொத்த உற்பத்தி மதிப்புக்கும் உள்ள விகிதம் நிலையாக - கட்டுப்படுத்தக்கூடிய அளவில் - இருக்கும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியமே (ஐ.எம்.எஃப்) மதிப்பிட்டிருக்கிறது.

மூப்படைந்துவரும் பிரெஞ்சு மக்கள்தொகை யால், நீண்டகாலப் பொருளாதாரச் சுமை என்பது தவிர்க்க முடியாது. ஆனால், இது எல்லா பணக்கார நாடுகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதானே? பிற ஐரோப்பிய நாடுகளைவிட, பிரான்ஸிஸ்தான் குழந்தைப் பிறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது. இது அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விளைவு. குழந்தைகள் பிறப்பதை பிரெஞ்சு அரசு ஊக்குவிக்கிறது. வேலைக்குச் செல்லும் மகளிரின் சுமையை அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. எனவே, பிற ஐரோப்பிய நாடுகளைவிட, பிரான்ஸில் இளைய சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அரசே வழிசெய்துள்ளது. இது ஜெர்மனியைவிட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

மட்டம் தட்ட வேண்டிய அவசியமில்லை

பிரான்ஸ் நாட்டில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு அம்சம், அதன் சுகாதார சேவைத் திட்டம். உலகிலேயே பிரான்ஸில்தான் மிகக் குறைந்த செலவில் மிகத் தரமான மருத்துவ சேவையை மக்கள் பெறுகிறார்கள். இதனால் விளையக்கூடிய சமுதாயப் பயன் மிக அதிகமாக இருக்கப்போகிறது. பிற காரணிகளை வைத்துப் பார்த்தாலும், பிரான்ஸை இந்த அளவுக்கு மட்டம்தட்ட வேண்டிய அவசியமே இல்லை. அப்படியானால், ஏன் இந்தக் கூத்து?

பதில் இதோ: பொருளாதார - நிதி நடவடிக்கை களுக்கான ஐரோப்பிய கமிஷனர் ஓல்லி ரென் பிரான்ஸ் நாட்டின் சிறப்பான நிதிக் கொள்கைகளைக் கடுமையாகக் குறைகூறினார். அவர் எல்லா நாடுகளும் செலவுகளைக் குறைத்து, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர். செலவுகளைக் குறைக்கா மல் வரிகளை உயர்த்தினால் நன்மை ஏற்படாது. மாறாக, நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்; புதிய வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் என்று கூறிவந்தார்.

பிரான்ஸோ செலவுகளைக் குறைக்காமல், வரிகளை உயர்த்தியது. வரிகளை உயர்த்த அரசுக்குத் துணிவு வேண்டும். ஏனென்றால், மக்கள் வரி உயர்வை விரும்ப மாட்டார்கள். அதே சமயம், அரசின் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரம் முடங்கிவிடும். அதுவே, ஏழைகளுக்கு மேலும் தீங்குகளை விளைவிக்கும் என்பதால், பிரெஞ்சு அரசு வரிகளை உயர்த்தி வருவாயைப் பெருக்கியது. தான் கூறுவதற்கு எதிராகச் செய்யும் நாட்டை ஓல்லி ரென்னால் சகித்துக்கொள்ள முடியுமா? அவரைப் போன்றவர்கள்தான் ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூரி’லும் இருக்கின்றனர். பிரெஞ்சு அரசின் நடவடிக்கைகள் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டாது என்பதால், அதன் கடன் பெறும் தகுதியைக் குறைத்திருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

வரிகளை உயர்த்தாதே; செலவுகளைக் குறை

வரியை உயர்த்துவதைவிட, செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்பதற்கு நல்ல ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’ நிறுவனம் பேசும் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு மாறாக, பொருளாதார மந்தநிலை காலத்தில் செலவுகளை அல்லது அரசின் பற்றாக்குறையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகளால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடையும் என்றே பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளது.

அமைப்பு ரீதியாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பண்டிதர்கள் உபதேசம் செய்தால், அதைக் கவனமாகக் கேளுங்கள். 1990-களிலும் 2000-களிலும் இப்படி அமைப்புரீதியாகச் சீர்திருத்தம் செய்த அயர்லாந்து நாட்டை இவர்களெல்லாம் வாயாரப் புகழ்ந்தார்கள். இப்போது பிரிட்டனில் நிதியமைச்சராக இருக்கும் ஜார்ஜ் ஆஸ்பர்ன் அப்போது அயர்லாந்தை, “நல்ல உதாரணம்” என்று பாராட்டினார். இன்று அயர்லாந்தின் நிலைமை என்ன?

நான் என்ன சொல்லவருகிறேன் என்று அமெரிக்க வாசகர்களுக்குப் புரிந்திருக்கும், புரிய வேண்டும். அமெரிக்க அரசு செலவுகளைக் குறைத்து, பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர்கள்கூட, சுகாதாரத்துக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் அரசு செய்யும் செலவுகளைத்தான் அதிகம் வெட்டச் சொன்னார்கள். மாற்று யோசனைகளை அவர்கள் கூறவில்லை. ஐரோப்பிய ‘சிக்கன’ ஆலோசகர்களும் அதைத்தான் கரடியாகக் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பிரான்ஸ் நாடுதான் தன் நாட்டு ஏழைகள், நடுத்தர வர்க்கம் சுமைகளைத் தாங்காமலிருக்க வரிகளை உயர்த்தி ‘பாவம்’ செய்தது. அந்தப் பாவத்துக்கு அதை யாராவது தண்டிக்க வேண்டாமா? அதனால்தான் ‘ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்’ நிறுவனம் அதன் கடன்பெறும் திறனைக் குறைத்துச் சான்று வழங்கியிருக்கிறது!

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x