Last Updated : 12 Sep, 2016 09:32 AM

 

Published : 12 Sep 2016 09:32 AM
Last Updated : 12 Sep 2016 09:32 AM

இந்தியாவை நிரந்தர உறுப்பினராக ஐ.நா. சபை அறிவிக்குமா?

ஐ.நா. சபையின் பொது அவைத் தலைவர் பீட்டர் தாம்ஸன் நேர்காணல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுஅவையின் அடுத்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. அதன் தலைவராக பிஜி நாட்டைச் சேர்ந்த பீட்டர் தாம்ஸன் பதவியேற்கவுள்ளார். பிரதமர் மோடியைச் சந்திக்க டெல்லி வந்தபோது அவர் அளித்த நேர்காணலின் பகுதிகள்...

அடுத்து நடக்க உள்ள பொதுஅவைக் கூட்டம் முக்கியமானது. கடந்த கூட்டத்தில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு அவை பற்றிய சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவுக்கு இருந்தது. ஆனால், ஏமாற்றமே கிடைத்தது. அது தொடர்பாக, பிரதமர் மோடியிடம் என்ன பேசினீர்கள்?

முக்கியமான விஷயங்களை நான் மோடியிடம் பேசினேன். உலக மக்களின் மேம்பாட்டுக்காக ஐ.நா. உருவாக்கிய ‘நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள்’களை நிறைவேற்றுவது பற்றி நாங்கள் விவாதித்தோம். இதுதான் எனது அடிப்படையான பணி. நடக்க உள்ள 71-வது கூட்டத்திலும் இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றும் பணிகளுக்குத்தான் எனது முழு சக்தியைப் பயன்படுத்துவேன்.

இந்தியாவும் எனது அலுவலகமும் இணைந்து இதற்கான பணிகளைச் செய்யும். நீங்கள் ஊகித்ததுபோல, ஐ.நா. பாதுகாப்பு அவை சீர்திருத்தங்கள், சர்வதேச பயங்கரவாதம் பற்றியும் பேசினோம்.

இவை தொடர்பாக இந்தியாவுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை எனது அலுவலகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் என மோடிக்கு உறுதி அளித்தேன்.

இந்தியாவின் சலிப்பு பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். பாதுகாப்பு அவை சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, ஐ.நா.வின் 70-வது ஆண்டு நிறைவின்போதே பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைத்துவிடும் என்று மோடி எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. அது நடப்பதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றன?

ஒரு நாடுகூடச் சீர்திருத்தத்தை எதிர்க்கவில்லை. என்ன வகையான சீர்திருத்தம் நடக்கும், அதனால் பாதுகாப்பு அவை எப்படி மாற்றமடையும் என்றுதான் கேட்கப்படுகிறது. ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கிற 193 நாடுகளோடும் ஆலோசனை செய்ய வேண்டும். சீர்திருத்தங்களைச் செய்வதற்கு எதிராகச் சில நாடுகள் இருந்தால்கூட, அடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் எதையும் செய்ய முடியாது.

ஒருமனதான முடிவுக்குத் தயாராக இருந்தாலும் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றன இத்தாலி போன்ற நாடுகள். பாதுகாப்பு அவையின் உறுப்பினர்களாக வேண்டும் என்ற கோரிக்கையோடு காத்திருக்கின்றன இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய பெரிய நாடுகள். தற்போது நிரந்தர உறுப்பினர்களாக இருக்கிற நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என எல்லா நாடுகளையும் இணைத்துக்கொண்டு நான் செயல்பட வேண்டும்.

இந்தியா மற்ற மூன்று நாடுகளோடு சேராமல் தனியாகத் தனக்கு மட்டுமே நிரந்தர உறுப்பினர் பதவியைக் கேட்டிருக்க வேண்டுமா? ஜி 4 நாடுகளில் ஒன்றாக இருப்பது இந்தியாவின் தவறு என்று நினைக்கிறீர்களா?

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள நாடுகளின் தன்மைக்கேற்ப அவை குழுக்களாகப் பிரிந்துகொள்கின்றன. உதாரணமாக, குரூப் 77 என்றால் அணி சாரா நாடுகள் என்று அர்த்தம். ஐ.நா. பாதுகாப்பு அவையின் சீர்திருத்தங்களுக்கான ஏதேனும் ஒரு குழுவில் நீங்கள் உறுப்பினராக இருந்தால், இன்னொரு குழுவில் நீங்கள் இருக்கக் கூடாது என்று அர்த்தம் அல்ல. ஒரு விவாதத்தை நடத்தவே நீங்கள் ஒரு குழுவாக இருக்கிறீர்கள். எந்தவொரு விவாதத்திலும் பத்துக்கு ஒன்பது முறைகள் ஒருமனதான முடிவுகள்தான் உருவாகியுள்ளன. அதற்குப் பிறகு எல்லாரும் ஒரே அணியாகத்தான் இருக்கிறோம்.

ஜி 4 நாடுகளில் இந்தியாவும் ஜப்பானும் இருக்கின்றன. அவை ஆசியாவில் சீனாவின் போட்டி நாடுகள். சீனாவுக்கு இந்தச் சீர்திருத்தங்கள் மீது பெரிய அக்கறை இல்லை. நீங்கள் தற்போது சீனாவுக்குப் போய்விட்டு இந்தியா வந்திருக்கிறீர்கள். சீனாவின் நிலை பற்றி ஏதாவது பேச்சுவார்த்தைகள் நடத்தினீர்களா?

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதில் ஒரு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. விவாதத்தின் ஒரு பக்கத்தில் சீனா இருக்கிறது. மறுபக்கத்தில் இந்தியா இருக்கிறது. எல்லோரும் சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இறுதியாக என்ன மாதிரியான சீர்திருத்தம் உருவாகும் என்பதுதான் பிரச்சினை. ஐ.நா. தொடர்பான எந்த நடைமுறையிலும் கருத்தொற்றுமையை உருவாக்கவே முடியாது என்றுதான் தோன்றும். ஆனால், கடைசியில் கருத்தொற்றுமையோடு அது செய்து முடிக்கப்படும்.

எப்போது சீர்திருத்தம் நடக்கும் என்று காலக்கெடு விதிக்க வேண்டிய தேவை இருக்கிறதா?

சாதாரணமாக, சீர்திருத்தத்துக்குக் காலக்கெடு தேவைப் படும்தான். உண்மையில் எல்லோருமே சீர்திருத்தத்துக் காகத்தான் இருக்கிறோம். அது தாமதமாகுமா என்று கேட்கலாம். சீர்திருத்தங்களுக்காக நாம் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். எவ்வளவு காலம் ஆகும் என்பது முக்கியம் அல்ல.

1996 முதல் ஐ.நா. சபை நடத்துகிற சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான கூட்டங்களிலும் இந்தியாவுக்கு ஏமாற்றம் இருக்கிறதே?

ஆமாம். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான கூட்டங் களைச் சரியான திசையில் கொண்டுபோக முயல்கிறோம். இது விஷயத்தில் பிரதமர் மோடியிடம் நான் உறுதி அளித்துள்ளேன்.

உலகளவில் பயங்கரவாதம் ஓய்ந்துவிடவில்லை. மோச மாகிக்கொண்டுதான் இருக்கிறது. அதை ஒழிப்பதற்கான வழிமுறைகளை நாம் காணத்தான் வேண்டும். பயங்கர வாதத்தை எதிர்கொள்வதற்கான சரியான வழிமுறைகளை ஐ.நா. சபை ஏற்றுச் செயல்படுத்துவதற்குப் பொதுஅவையின் தலைவர் என்ற முறையில் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.

ஐ.நா. சபை பல விஷயங்களைத் தாமதம் செய்துகொண்டி ருக்கிறது. சர்வதேசப் பயங்கரவாதம் என்பது ஒரு உதாரணம் தான். இன்றைய உலகுக்கு ஐ.நா. சபை தேவைப்படவில்லையா?

ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்போம். ஐ.நா. சபைக்கான மாற்று எதுவும் இல்லை. அது நம்மை சொர்க்கத்துக்குக் கொண்டுபோவதற்காக உருவாக்கப்படவில்லை. ஆனால், நரகத்துக்குப் போகாமல் நம்மை அது தடுக்கும்.

மனித குலத்தின் நீடித்த வளர்ச்சிக்கான குறிக் கோள்களை ஐ.நா. சபை உருவாக்கியிருப்பது ஒரு பெரிய சாதனை. 193 உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமைப்பு இது. மனிதகுலத்துக்கான குறிக்கோள்களை உருவாக்கி, அதன் 169 உறுப்பினர்களுக்கு 169 இலக்குகளை நிர்ணயித்து, அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறோம். இது சாத்தியமே இல்லை என்றார்கள். ஆனால், நாங்கள் செய்திருக்கிறோம்.

மனித உரிமைகள் விஷயத்தில் நாங்கள் நன்றாகச் செயல்படுகிறோம். நாங்கள் போர்களைத் தடுத்து நிறுத்த வில்லை. ஆனால், அமைதிப் பணிகளைச் செய்கிறோம். ஐ.நா. சபை இல்லையென்றால், தற்போதைய நிலைமையைவிட உலகின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கும்.

நீடித்த வளர்ச்சிக்காக ஐ.நா. உருவாக்கிய 17 குறிக்கோள்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட 169 இலக்குகள் பற்றி நீங்கள் பேசினீர்கள். இதற்குப் பணம் ஒதுக்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? எல்லா நாடுகளாலும் அந்த அளவு செலவழிக்க முடியாது.

இந்த குறிக்கோள்களை மக்களிடம் கொண்டுசென்று புரியவைப்பது சவாலான பணி. உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகவும் நாம் இதை மக்களிடம் கொண்டுபோகலாம். பாருங்கள், ஐ.நா. சபை முன்வைத்துள்ள குறிக்கோள்களை நிறைவேற்றாவிட்டால் உலகளாவிய நிதி முறைமையும் சீர்குலைந்துவிடும். உதாரணமாக, குறிக்கோள் எண் 13 சுற்றுச்சூழல் மாற்றம் பற்றிப் பேசுகிறது. சுற்றுச்சூழல் மாறுவதைத் தடுக்கவில்லை என்றால், காப்பீட்டுத் துறையே செயல்படாமல் போய்விடும்.

நீங்கள் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறீர்கள். காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகள் பற்றிய விவகாரத்தை எழுப்புவோம் என்கிறது பாகிஸ்தான். நிறைய கடிதங்களையும் எழுதியிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு தூதுக் குழுக்களையும் அனுப்பியுள்ளது. வருகிற ஐ.நா. சபைக் கூட்டத்தின் போக்கை பாகிஸ்தானின் இந்தச் செயல்பாடுகள் பாதிக்குமா?

பாதிக்காது. ஒவ்வொரு அரசின் தலைவரும் அதன் பிரதிநிதிக் குழுவும் அவர்கள் விரும்புகிற விவகாரத்தை ஐ.நா. சபைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், டெல்லியில் நான் பங்கேற்ற கூட்டங்களில் இது பற்றிய விவகாரங்கள் எழவில்லை.

பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி ஏதேனும் இங்கே விவாதித்தீர்களா?

கிடையவே கிடையாது. நாளிதழ்களில் இதுபற்றிய விவரங்களைப் படித்தேன். ஆனால், டெல்லியில் நான் நடத்திய கூட்டங்களில் இது பற்றிய பேச்சு எதுவும் வரவில்லை.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x