Published : 19 Sep 2013 07:33 AM
Last Updated : 19 Sep 2013 07:33 AM

இளங்குற்றவாளிகள் யார்

இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பு மறுநிர்ணயம் தொடர்பாக இந்தியாவில் குரல்கள் வலுவடையும் இதே காலகட்டத்தில் அமெரிக்காவிலும் இது தொடர்பான விவாதம் பரவலாகிவருகிறது. வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவில் இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 18-லிருந்து 16-ஆகக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் 16-லிருந்து 18-ஆக உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

பொதுவாகவே, அமெரிக்காவில் நீதி வழங்கலில் சில நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன. இளம் சிறார்கள் மரண தண்டனைக்கு உரிய குற்றங்களைப் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2005-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து, 2012-ல் ‘மில்லர் எதிர் அலபாமா அரசு’ வழக்கில், "குற்றம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், பரோல் சலுகையற்ற ஆயுள் தண்டனையைக்கூட விதிக்கக் கூடாது" என்று கூறிவிட்டது.

"இளம் குற்றவாளிகள் வயது முதிர்ந்தவர்களைப் போல மனரீதியாகக் குற்றச் சிந்தனையில் ஊறியவர்கள் அல்ல; எதையோ நினைத்து எதையோ செய்துவிடுகிறவர்கள், தாங்கள் செய்யும் செயலின் விளைவுகளை முழுக்கச் சிந்திக்காதவர்கள். எதிர்காலத்தில் அவர்கள் தங்களுடைய செயலுக்கு வருந்தவும் தங்களைத் திருத்திக்கொள்ளவும் கூடும். இள வயதிலேயே அவர்களுடைய கைவிரல் ரேகைகளைப் பதிவுசெய்து, படங்களைக் கோப்பில் சேர்த்து குற்றவாளி முத்திரை குத்திவிட்டால், அவர்கள் மேலும் குற்றச் செயல்களில் ஊறி அந்த வாழ்க்கைக்கே தள்ளப்படுவார்கள்" என்று அந்தத் தீர்ப்புக்குக் காரணம் சொன்னது நீதிமன்றம்.

அமெரிக்காவில், இளங்குற்றவாளிகள் என்று வரையறுப்பதற்கான வயது வரம்பு மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடுகிறது. ஒருவரை இளம் குற்றவாளி என்று நிர்ணயிக்க அதிகபட்ச வயது நியூயார்க்கிலும் வடக்கு கரோலினாவிலும் 16; வேறு 11 மாகாணங்களில் 17; வாஷிங்டனிலும் 37 மாகாணங்களிலும் 18. நியூயார்க்கில் மட்டும் ஆண்டுதோறும் 16 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்படுகின்றனர். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில்தான் இப்படியொரு விவாதம் அமெரிக்காவில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு தீர்ப்பளிக்கும் முன் இளம் குற்றவாளிகளின் வயது, குடும்பப் பின்னணி, அவர்களின் உளப்பாங்கு போன்ற 14 அம்சங்களைக் கவனித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அலபாமா நீதிபதி. சிறாருக்கான தண்டனையைப் பற்றிப் பேசுமுன் அவர்களைக் கொடூரமான குற்றங்களைச் செய்யத் தூண்டும் சமூகச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்வதுதான் நாகரிக சமூகத்துக்கு அழகு என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

அமெரிக்க நியாயம் இந்தியாவுக்கும் பொருந்தும்தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x