Published : 26 Apr 2017 10:21 am

Updated : 20 Jun 2017 10:40 am

 

Published : 26 Apr 2017 10:21 AM
Last Updated : 20 Jun 2017 10:40 AM

மோடியின் காலத்தை உணர்தல்!- ஆர்எஸ்எஸ்ஸின் ஆயிரம் முகங்கள்!

நண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் உடற்பயிற்சிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்! அடுத்த சில நாட்களிலேயே இரு இளைஞர்கள் யோகா பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். நண்பரின் பிள்ளைகள் அவரிடம் வந்து கேட்டபோது, “சரி, நீங்களும் யோகா வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார். சில வாரங்கள் கழித்து அந்த இளைஞர்கள் சொன்ன கருத்துகளைக் குழந்தைகள் சொன்னபோது, வந்திருப்பவர்கள் யார் என்பதை நண்பர் புரிந்துகொண்டார்.

என்ன சொல்வது! ஜனநாயகக் களம் என்பது எண்ணிக்கைப் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுவது. காலத்துக்கேற்ப மக்களின் தேவைகளையும் மனப்போக்கையும் சமூகத்தின் கலாச்சார மாறுபாடுகளையும் உள்வாங்கிக்கொள்ளும் அரசியல் அமைப்புகளே அதிகாரத்தை வசப்படுத்த முடியும். மக்கள் மத்தியில் பணியாற்றுவோருக்கு, முக்கியமாக, தன்னார்வப் பணியில் ஈடுபடுத்திக்கொள்வோருக்கு


இந்திய அரசியல் அரங்கில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருக்கிறது.

பெரும்பான்மை மக்கள் இங்கே சித்தாந்தங்கள், நோக்கங்கள் வாயிலாக அரசியல் இயக்கங்களை அணுகுவதில்லை. மனிதர்களின் வெளிப்புறத் தோற்றங்கள், காரியங்கள் வாயிலாகவே இயக்கங்களைப் புரிந்துகொள்கிறார்கள். காந்தி ஆக்கபூர்வமான

அரசியல் உத்தியாக அறப்பணிகளைக் கையாண்டார். ஆர்எஸ்எஸ் அபாயகரமான அரசியல் கணக்குகளோடுஅதே காய்களை நகர்த்துகிறது. ஏனைய இயக்கங்கள் எல்லாம் எந்த அளவுக்கு இதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப் பெரிய பலம், அது நாடு முழுக்க நடத்திக்கொண்டிருக்கும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்திட்டங்கள். அதன் அதிகாரபூர்வமற்ற ஷாகாக்கள் இவை. வெளியில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்த முடியாத அவற்றின் முகங்கள். அது பள்ளிக்கூடமாக இருக்கலாம், முதியோர் இல்லமாக இருக்கலாம், மடமாக இருக்கலாம், கோயில் வழிபாட்டு மன்றமாக இருக்கலாம், யோகா பயிற்சிக் கூடமாக இருக்கலாம், தொழிலாளர் சங்கமாக இருக்கலாம், மாணவர் பேரவையாக இருக்கலாம்… எல்லாமே நேரடி அரசியல் தொடர்புடையவையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அவை உருவாக்கும் கலாச்சாரம் ஒரே தன்மையிலானது. அடிப்படையில் ஏதேனும் ஒரு புள்ளியிலேனும் இணைந்து பெரும்பான்மை மக்களை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரே குடைக்குள் கொண்டுவருவது.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற நாட்களில், என்னுடைய வாராணசி பயணம் அமைந்தது இன்றைய போக்கைப் புரிந்துகொள்ள ஒருவகையில் கூடுதல் உதவியாக அமைந்தது என்று சொல்லலாம். யோகி ஆதித்யநாத் இன்று அடைந்திருக்கும் இடமும் அவருடைய கடந்த கால வரலாறும் எனக்குள் நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தன. கோரக்நாத் மடாதிபதியாக ஆதித்யநாத் 22 வயதில் பொறுப்பேற்கிறார். 1998-ல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவருடைய வயது 26. இப்போது 44 வயதில் நாட்டிலேயே பெரிய மாநிலத்தின் முதல்வர். இடைப்பட்ட 18 ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிகள். 5 முறை மக்களவை உறுப்பினர். எல்லாமே பெருவாரி வாக்குகள் வித்தியாசத்தில். அப்பட்டமான ஒரு வெறுப்பரசியல்வாதி எப்படி திரும்பத் திரும்ப ஜெயிக்கிறார்? அவர் மட்டும் அல்ல; அவருடைய முன்னோடிகளும் இப்படித் தொடர்ந்து ஜெயித்திருக்கின்றனர்.

ஆதித்யநாத்தின் முன்னோடி மடாதிபதியான திக்விஜய்நாத் 1920-களில் அரசியல் செயல்பாடுகளில் அடியெடுத்துவைத்திருக்கிறார். முதலில் காங்கிரஸ். அங்கே காந்தியின் அஹிம்சை பாதை பிடிக்காமல் விலகி, பின்னர் இந்து மஹாசபையில் இணைந்திருக்கிறார். காந்தி கொல்லப்பட்ட சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் திக்விஜய்நாத்தும் ஒருவர். அயோத்தி விவகாரத்தில் ஆரம்ப நாட்களிலேயே பின்னிருந்தவர்களில் திக்விஜய்நாத்தும் ஒருவர். இவ்வளவையும் தாண்டி தொடர்ந்து தேர்தல்களில் ஜெயித்திருக்கிறார். அவருக்குப் பின் மடாதிபதியாக வந்த அவைத்யநாத்தும் அப்படியே ஜெயித்திருக்கிறார். ஆதித்யநாத் அடாவடிகளின் உச்சம். கொலை முயற்சி வழக்குகள்கூட அவர் மீது இருக்கின்றன. அவர் உருவாக்கிய இந்து யுவ வாஹினி அப்பட்டமான வன்முறைக் கும்பல் என்றே கூறுகிறார்கள். அவரும் தொடர்ந்து ஜெயிக்கிறார். வெறுப்பினாலும் வன்முறையாலும் குறுகிய கால வெற்றியைக் கைப்பற்ற முடியும். ஒரு நீண்ட காலம் அதைத் தக்கவைக்க முடியுமா?

இந்தப் பயணத்தின்போது பதில் கிடைத்தது. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான கோரக்பூர் பகுதி மக்களின் வாழ்க்கையோடும் பொருளாதாரத்தோடும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது கோரக்நாத் கோயில். இந்த மாவட்டமே கோரக்நாதரின் பெயரில்தான் அமைந்திருக்கிறது. மடத்துக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. அறக்கட்டளை நிர்வாகத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்திட்ட 50 நிறுவனங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். கட்டணம் குறைவு என்கிறார்கள். ஆதித்யநாத் 2003-ல் அமைத்த நவீன மருத்துவ

மனையில் வெளிநோயாளிக் கட்டணம் வெறும் ரூ.30. அடுத்த 15 நாட்களுக்குள் மருத்துவரைத் திரும்பப் பார்க்கச் சென்றால் அதுவும் கட்டத் தேவையில்லை என்கிறார்கள். ஒரு நாள் படுக்கைக் கட்டணம் ரூ.250. மருத்துவமனை சாப்பாட்டின் விலை ரூ.10 என்கிறார்கள். ஆக, ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், நோயாளிகளோடு நேரடியான தொடர்பில் இருக்கிறது மடம். ‘‘நீங்கள் இதனூடாகவும்தான் ஆதித்யநாத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டும்’’ என்றார்கள் உள்ளூர் ஊடக நண்பர்கள்.

மாநிலத்தில் அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இங்கே பெரிய செல்வாக்கில்லை. இப்படி ஒரு தொகுதியை வறுமைப் பின்னணியிலேயே ஏனைய கட்சிகள் அத்தனையும் எந்த அடிப்படையில் கவனிக்காமல் விட்டுவைத்தன என்ற கேள்வி எனக்கு எழுந்தது.

ஆர்எஸ்எஸ் - பாஜக பலத்தைப் பற்றிப் பேசுகையில், அதன் நேரடிக் கணக்கில் இப்படியான அமைப்புகள் வருவதில்லை. ஆனால், இவற்றையும் உள்ளடக்கியதே அது. சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகளை 1950-களில் சங்கப் பரிவாரத்தினர் தொடங்கினார்கள். இன்று வித்யா பாரதி பள்ளிகளில் மட்டும் 20 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். கலாச்சார ரீதியில் உருமாற்றம் நடந்துவிட்டால், பின்னர் தேர்வு தானாக நடக்கும் என்பது கணக்கு. காசு வாங்காமல் இல்லை, வசதிகளை அனுபவிக்காமல் இல்லை. ஆனால், நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரஸ் காரர்களும் ஏனைய மாநிலக் கட்சியினரும்கூட கல்வி நிலையங்களை நடத்துகிறார்கள். அவை எந்த நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன? அங்கே அவர்களுடைய இயக்கக் கொள்கைகளுக்கு என்ன இடம் இருக்கிறது?

மனிதர்கள் இயல்பாகவே தாங்கள் பயிற்று விக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுபவர்கள். குழந்தை களாக இருக்கும்போதே வாய்ப்பு கிடைத்தால் மேலும்

சந்தோஷம் அடைபவர்கள். மோடி ஆர்எஸ்எஸ்ஸில் சேரும்போது அவருக்கு 8 வயது. ராஜ்நாத் சிங் 13 வயதில் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தவர். ஒவ்வொரு நாளும் தனக்கேற்ற ஆட்களை ஆர்எஸ்எஸ் உற்பத்திசெய்துகொண்டே இருக்கிறது. உண்மையில் உலகில் இன்று ஆர்எஸ்எஸ்போல பல நூறு முகங்கள், பல்லாயிரம் கரங்களுடன் சமூகத்தில் கலந்திருக்கும் ஒரு இயக்கம் இல்லை. இன்றைக்கு உலகின்

மிகப் பெரிய என்ஜிஓவும் ஆர்எஸ்எஸ் என்ற தகவல் பலருக்கு வியப்பளிக்கலாம். நாட்டின் மிகப் பெரிய தொழிற்சங்கம் அது நடத்தும் பாரதிய மஸ்தூர் சங்கம். நாட்டின் மிகப் பெரிய மாணவர் இயக்கம் அது நடத்தும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி). அதன் அரசியலை வெறும் ஒற்றைப் பரிமாணத்தில், ஒரு கையால் எதிர்த்துவிட முடியும் என்று நினைப்பதைப் போல மடத்தனம் ஒன்றுண்டா?

(உணர்வோம்…)

- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in


ஆர்எஸ்எஸ்ஸின் ஆயிரம் முகங்கள்மோடியின் காலத்தை உணர்தல்யோகி ஆதித்யநாத்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x