Last Updated : 17 Mar, 2017 09:09 AM

 

Published : 17 Mar 2017 09:09 AM
Last Updated : 17 Mar 2017 09:09 AM

அந்தக் காலத்து ‘ஹிட்டர்’!

கிரிக்கெட்டைப் பற்றி மிக நன்றாக எழுதுபவர் என்ற பாராட்டைப் பெற பலரிடையே போட்டி உண்டு. யார் சிறந்த கிரிக்கெட் எழுத்தாளர் என்பதில் இப்போது சர்ச்சை கிடையாது. ஆஸ்திரேலியரான கிடியான் ஹைக்தான் அது. அவரே ஒரு வித்தியாசமான கிரிக்கெட் வீரர். (டான் பிராட்மன் ‘இன்வின்சிபிள்ஸ்’ என்ற பெயருள்ள அணியில் 1948-ல் விளையாடினார். கிடியானின் அணிப் பெயர் ‘தி வின்சிபிள்ஸ்’. பிராட்மன் அணியின் பெயருக்கு ‘வெல்ல முடியாதவர்கள்’ என்று பொருள். கிடியானின் அணியோ ‘வெல்ல முடியும்’ என்று எதிராளிக்கு நம்பிக்கை ஊட்டும் அணி!) கிரிக்கெட் விளையாட்டின் நுட்பம் குறித்து அவருக்கு ஆழ்ந்த ஞானம்.

அதைவிடவும் அதன் வரலாறு, வம்பு குறித்து மேலும் ஞானம். கிடியானுக்கு கிரிக்கெட் உலகம் நல்ல பரிச்சயம்; வெளி உலகும் அதைவிட பரிச்சயம். மெல்போர்ன் நகரின் குற்றங்கள் குறித்தும் ஒரு சமூக அமைப்பின் அலுவலகம் குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இந்த அனுபவத்தை எல்லாம் கிரிக்கெட் பற்றி எழுதவும் அவர் பயன்படுத்துகிறார்.

1950-களிலும் 1960-களிலும் நிலவிய ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் சமூக வரலாற்றைத் தனது புத்தகங்களில் எழுதியிருக்கிறார். சுழல்பந்து வீச்சாளர் ஜேக் ஐவர்சன் பற்றிய வரலாறு, ‘தி சம்மர் கேம்’ ஆகிய இரண்டும் கனமான ஆக்கங்கள். அதே சமயம் குறைந்த பக்கங்கள், ஆழ்ந்த தகவல்களை உள்ளடக்கியவை. ஷேன் வார்னே பற்றிய சிறு புத்தகம் வார்னேயின் வீசும் திறனையும் ஆளுமையையும் நன்கு வெளிக்கொணர்ந்திருந்தது.

அற்புதமான மட்டையாளர்

கிடியானின் சமீபத்திய புத்தகம் ‘ஸ்ட்ரோக் ஆஃப் ஜீனியஸ்’. 1905-ல் ‘தி ஓவல்’ திடலில் வீச்சாளர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விக்டர் ட்ரம்பர் கிரீஸிலிருந்து எகிறிக் குதித்து வெளியே வந்து அடிக்கும் அரிய புகைப்படம் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற புகைப்படம் அது. பல லட்சம் முறை அந்தப் புகைப்படத்தைப் பலர் பார்த்து ரசித்துள்ளனர். அந்தப் புத்தகத்தின் நாயகனான ட்ரம்பர், சாகா வரம் பெற்றுவிட்டார். அவரைப் புகைப்படமாக எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பெல்தாமும்தான். பெல்தாம் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்தார். பெல்தாமின் சகாவான சி.பி. ஃப்ரை என்பவரும் கிரிக்கெட் ஞானம் உள்ளவர்.

பிற்காலத்தில் வரும் டி.ஆர்.எஸ். முறை குறித்து ஃப்ரை அப்போதே கூறிவிட்டார். “பேட்ஸ்மனைத் தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் கருவி எதிர்காலத்தில் வரும்பட்சத்தில், நடுவரைவிட அதை நாடும் நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறியிருக்கிறார். கிரிக்கெட் பற்றி எழுதி பிரபலமடைந்த நெவில் கார்டஸ் என்பவரும் இவர்களுடைய சமகாலத்தவர்.

வாக்னர் என்பவரின் இசைத் திறமைக்கும் டர்னரின் கலைத் திறமைக்கும் ட்ரம்பரை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் கார்டஸ். “ட்ரம்பரின் பேட்டிங் திறமையை மறப்பேன் என்றால், கண்ணுக்கு விருந்தாக இருக்கும் சூரிய அஸ்தமனம், மேகம் சூழ்ந்த மலை முகடு, சிம்பொனி இசையின் இனிமை, ரோஜாவின் முழு மலர்ச்சி ஆகிய அனைத்தையுமே மறந்துவிடுவேன்” என்று கவித்துவமாகக் குறிப்பிட்டிருக்கிறார் கார்டஸ். கிரிக்கெட்டின் பொற்காலத்தவர் ட்ரம்பர் என்பது நெவில் கார்டஸின் கருத்து.

1890-லிருந்து முதல் உலகப் போர் மூண்ட காலம் வரையில், கிரிக்கெட்டின் பொற்காலம் என்று அவர் வர்ணிக்கிறார். டபிள்யு. ஜி. கிரேஸ் விளையாடிய காலத்தில் பொற்காலம் தொடங்குகிறது. பிறகு விக்டர் ட்ரம்பர், கே.எஸ். ரஞ்சித் சிங், பந்து வீச்சாளர்கள் வில்பிரெட் ரோட்ஸ், ஹக் ட்ரம்பிள், எஸ்.எஃப். பார்னஸ் வழியாகத் தொடர்கிறது. அப்போது ஆடியவர்கள் முழு நேர ஆட்டக்காரர்கள் அல்லர். ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அது தேசிய உணர்வின் மோதல்களாகவே இருந்தன. ஜேக் ஹாப்ஸ் இக்காலத்தில் இடம்பெறுகிறார்.

உத்வேகம் தந்த படம்

முதல் உலகப் போர் தொடங்கிய சில ஆண்டுகளுக்கெல்லாம் தன்னுடைய 37-வது வயதில் ட்ரம்பர் இறந்துவிடுகிறார். சிறந்த ஆட்டத் திறனும் நல்ல பண்புகளும் கொண்ட அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பெல்தாம் எடுத்த புகைப்படம் ட்ரம்பரை அடுத்த தலைமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தியது. 1905-ல் எடுத்த இந்த புகைப்படம், 1927-ல் சிட்னி மெயிலில் மறு பிரசுரம் ஆகும் வரை பலருக்குத் தெரியாது. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆடும் அத்தனை இடங் களிலும் ட்ரம்பரைப் பற்றிப் பேசாதவர்களே கிடையாது. டென்னிஸ் லில்லி, ஸ்டீவ் வாவ், பிராட்மன் உள்ளிட்ட மாபெரும் கிரிக்கெட் நட்சத்திரங்களின் வீடுகளைக்கூட அந்தப் புகைப்படம் அலங்கரித்தது. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து உத்வேகம் பெற்றவர்கள்தான்.

ட்ரம்பரின் ரசிகர்களில் கே.எஸ். ரஞ்சித் சிங்கும் ஒருவர். நியூசவுத் வேல்ஸ் அணிக்காக ட்ரம்பர் பேட் செய்தபோதே அவர் சிறந்த வீரராக வருவார் என்று கணித்தவர் ரஞ்சித் சிங். “வெகு விரைவிலேயே இந்த நாட்டின் மிகப் பெரிய கிரிக்கெட் வீரராக இவர் பெயரெடுப்பார்” என்று ரஞ்சித் சிங் பாராட்டினார். ட்ரம்பர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையும் குறிப்பிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஏ.இ.நைட், அவரைப் புகழ்ந்து எழுதியிருந்தார். “பந்துகளை எப்படிப் போட்டாலும் அதை எதிர்கொள்ளும் பாணி மட்டுமல்ல, அதை அடிக்கும் நேர்த்தியும் ரசிகர்களால் ஆர்வமாகப் பார்க்கப்பட்டது; வீசப்படும் பந்து அவருடைய மட்டையைத் தொட்டு, பிறகு எல்லைக் கோட்டை நோக்கி விரைவது வரை எழுந்து நின்று மெளனமாகப் பார்க்கும் ரசிகர் கூட்டம், அது எல்லையைக் கடந்த பிறகு செய்யும் ஆர்ப்பரிப்பு இருக்கிறதே, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது” என்று புகழ்ந்திருப்பார் நைட்.

இந்தப் புத்தகத்தில் ரஞ்சித் சிங்கைப் போலவே வசந்த் ராய் என்பவரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, விளையாட்டு நிகழ்வுகளையும் விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களையும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார் வசந்த் ராய். நான் படித்த கிரிக்கெட் பற்றிய முதல் சில புத்தகங்களில் ரஞ்சித் சிங்கைப் பாராட்டி வசந்த் ராய் எழுதிய புத்தகமும் அடங்கும். விக்டர் ட்ரம்பரைப் பாராட்டும் தொகுப்பு நூலையும் வசந்த் ராய் எழுதியிருக்கிறார். தான் போயே இராத ஒரு நாட்டின், பார்த்தே இராத ஒரு கிரிக்கெட் வீரரைப் பற்றி வசந்த் ராய் பெருந்தன்மையோடு புத்தகம் எழுதியிருக்கிறார்!

விக்டர் ட்ரம்பரின் பேட்டிங் திறமையைப் போலவே அவருடைய எளிமையும் அழகான நற்குணங்களும் அவருக்கு நிறைய நண்பர்களையும் ரசிகர்களையும் பெற்றுத்தந்திருக்கின்றன. “சூரியனின் ஸ்பரிசம், புல்லின் பசுமை, திறந்தவெளியின் ஓசை ஆகியவற்றில் பெருமகிழ்ச்சி அடைபவர் ட்ரம்பர். பேட் செய்வதை வெகு எளிதாகவே மேற்கொள்வார். ஆனால், ஒவ்வொரு இன்னிங்ஸையும் சாகசம்போல நிகழ்த்திவிடுவார்” என்று அவருடைய சமகாலத்தவரான ஒரு கிரிக்கெட் வீரர் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இன்னொரு பிராட்மேன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பார்வையில் பல வழிகளிலும் ட்ரம்பர், டான் பிராட்மனின் இன்னொரு பிரதிதான். “ட்ரம்பர் கவிதை என்றால், பிராட்மன் காப்பியம். ட்ரம்பர் ஏதென்ஸைச் சேர்ந்தவர் என்றால், பிராட்மன் ஸ்பார்ட்டாவைச் சேர்ந்தவர். ட்ரம்பர் எட்வர்டின் காலத்தவர், பிராட்மன் ஃபோர்ட் காலத்தவர்” என்று ஹைக் ஒப்பிடுகிறார். இங்கிலாந்தில் 1930-ல் பயணம் மேற்கொண்ட பிராட்மனின் கிரிக்கெட் சாதனைகளை ஆர்தர் மைய்லி பதிவுசெய்திருக்கிறார்.

வார்த்தைகளால் சுருக்கி எழுத முடியாதவர் ட்ரம்பர் என்று சி.பி. ஃபிரை ஒரு முறை எழுதியிருக்கிறார். ஆனால், ஹைக் அவரை நன்றாகவே எழுத்தில் வடித்திருக்கிறார். இந்தப் புத்தகம் கிரிக்கெட் வரலாறு மற்றும் கிரிக்கெட் புகைப்படம் என்ற இரண்டுக்கும் அற்புதமான பங்களிப்பைச் செய்திருக்கிறது.

கிரிக்கெட்டைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் என்றால் அது சி.எல்.ஆர். ஜேம்ஸ் எழுதிய ‘பியாண்ட் எ பவுண்டரி’ என்ற புத்தகம்தான். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள். கிடியான் ஹைக் எழுதிய ‘ஸ்ட்ரோக் ஆஃப் ஜீனியஸ்’ இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. ஹைக்கின் புத்தகம் புதியனவற்றை புதிய முறையில் கண்டு சொல்கிறது. ஒரு ஆட்டக்காரரின் ஆட்டத் திறமையையும் அவருடைய குணாதிசயத்தையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆட்டத்தையும் அதன் நுணுக்கங்களையும் விவரிக்கிறது. கொந்தளிப்பான நிலையிலிருந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு தேசத்துக்கும் கண்டத்துக்கும் அத்தகவல்களைத் தெரிவிக்கிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

கிடியானின் சமீபத்திய புத்தகம் ‘ஸ்ட்ரோக் ஆஃப் ஜீனியஸ்’. 1905-ல் ‘தி ஓவல்’ திடலில், வீச்சாளர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விக்டர் ட்ரம்பர் கிரீஸிலிருந்து எகிறிக் குதித்து வெளியே வந்து அடிக்கும் அரிய புகைப்படம் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற புகைப்படம் அது. பல லட்சம் முறை அந்தப் புகைப்படத்தைப் பலர் பார்த்து ரசித்துள்ளனர். அந்தப் புத்தகத்தின் நாயகனான ட்ரம்பர், சாகா வரம் பெற்றுவிட்டார். அவரைப் புகைப்படமாக எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பெல்தாமும்தான்!





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x