Last Updated : 03 Jan, 2016 09:44 AM

 

Published : 03 Jan 2016 09:44 AM
Last Updated : 03 Jan 2016 09:44 AM

ஆகமங்களை மாற்றவே முடியாதா?

தமிழக மக்கள் காளஹஸ்தியிலுள்ள (சித்தூர்) சிவனைத் தரிசித்தாலும் அங்கு அர்ச்சனை செய்யும் உரிமை குறிப்பிட்ட வகுப்பினரை மட்டுமே சார்ந்தது. தமிழகத்திலுள்ள வைணவ மற்றும் சிவத்தலங்களிலும் இப்படியான ‘மரபு’ உண்டு. அதாவது, குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர, ஏனையோர் பூஜை செய்தால் மாசு ஆகிவிடும்; வழிபாட்டுத் தலத்திற்குக் களங்கம் ஏற்பட்டுவிடும். இப்படிச் சொல்வது எதுவென்றால், ஆகமங்கள் என்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல வட இந்தியக் கோயில் களில் பக்தர்களே உருவச் சிலையைத் தொட்டுப் பூஜைசெய்ய அனுமதி உண்டு. மேலும், தேவையென்றால்தான் பண்டாக்களைப் பூஜைக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்றும் உண்டு.

மேற்கண்ட இரு விஷயங்களை ஒப்பிட்டுப்பாருங்கள், வட இந்திய உருவச் சிலைகளைத் தொடுவதால் தீட்டு இல்லை; தென்னிந்தியாவில் உருவச் சிலைகளைத் தொட்டால் புனிதம் குறைந்துவிடும்; இந்தியா முழுவதற்குமான இந்து மதம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறதா, இல்லையா? இந்தப் பின்னணியில் திருக்கோயில்களில் அர்ச்சகராக யார் பணிபுரியலாம் என்பதை முடிவுசெய்ய சட்டமன்றங்களுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் ஆதி சைவ சிவாச்சாரியர்கள் போட்ட வழக்கில் கூறியிருப்பதை எப்படி அணுகுவது?

திராவிடர் கழகங்கள் ஏற்படுத்திய குழப்பம்

திராவிடக் கழகத் தலைவர் வீரமணி இத்தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார். பெரியார் திராவிடக் கழகத்தினரோ இத்தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகின்றனர். குழப்பம் ஏற்படுகிறது அல்லவா?

ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றைச் சமூகச் சீர்திருத்தம் கருதி மாற்றியமைக்க முடியுமா? இதைத் தெரிந்து கொண்டால்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சிவாச்சாரியார்கள் பெற்றிருக்கும் வெற்றி மதச் சீர்திருத்தத்தை எந்த அளவிற்குப் பின்தள்ளியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

காந்தியின் முன்முயற்சி

ஒடுக்கப்பட்டவர்களும் இந்து கோயில்களில் கடவுளைத் தரிசிக்க ‘அரிசன சேவா சங்கம்’ மூலம் சுதந்திரத்துக்கு முன்பே காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை எடுத்தது. காந்தி தலித் மக்களை நுழையவிடாத கோயில்களில் தானும் நுழைய மறுத்தார். எனினும், காங்கிரஸ் தன் செயல்திட்டங்களில் ஒன்றாக அதை அறிவிக்கவில்லை.

கண்டதேவி நாட்டார்களுடன் காந்தியின் சந்திப்பைப் பற்றி தி.சே.சௌ. ராஜன் ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்: “நாட்டார்களுக்குள் நாட்டாண்மைக்காரர்கள் உண்டு. அப்படி முக்கியமானவர்களில் நூறு பேரைக் காந்திஜி தேவகோட்டையில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்கள். தமிழ்நாட்டில் செய்த பிரசங்கங்களில் அன்று தேவகோட்டை வட்டம் நாட்டார்களுக்குச் செய்த உபதேசந்தான் முதன்மையானது. சொல்வன்மை மட்டுமல்ல. ஆத்ம உணர்ச்சி, ஜீவகாருண்யம், தயை, தர்ம நியாயம் இவைகளெல்லாம் ஒருங்கே திரட்டி, சிறு குழந்தைகளுக்குக் கூடப் புலப்படும்படியான முறையில் அன்று முக்கால் மணி நேரம் ஹரிஜனங்களின் சார்பாகப் பேசினார்கள். ஆனால் நாட்டார்களோ மனம் கரைந்ததாகத் தெரியவில்லை. வழக்கத்தை விட முடியாது என்பதுதான் அவர்கள் முடிவு.”

அந்தச் சுற்றுப்பயணத்தின்போது (1934) காந்தி தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்கும் இதே காரணத்திற்காகச் செல்ல மறுத்துவிட்டார். இன்றும் கண்டதேவி நாட்டார்களிடம் மாற்றம் ஏதுமில்லை. உயர் நீதிமன்றத்தின் கட்டளை அங்கே செயல்படுத்தப்படாமலேயே இருக்கிறது. ஆனால் 1937-ல் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவை மதராஸ் ஆலயப் பிரவேசச் சட்டத்தை உருவாக்கி தலித்துகளும் ஆலயங்களில் வழிபடும் உரிமையை அறிவித்தது.

கோயில்கள் நிர்வாகம் யார் உரிமை?

தென்னிந்தியக் கோயில்களைக் கட்டியதும், அதைப் பின்னர் விரிவுபடுத்தியதும் சேர, சோழ பாண்டியர்களும், பின்னர் வந்த விஜயநகரப் பேரரசின் நாயக்கர்களும் என்பது யாவரும் அறிந்ததே. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், காலனியாதிக்கத்தின்போதும் கோயில் நிர்வாகங்கள் யாரிடம் இருந்தன? இதுபற்றி பி.சி.பிள்ளை ‘ஆலயப் பிரவேச உரிமை’ ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார்: “1810ஆம் ஆண்டு வங்காள மாகாணத்திலும், 1817ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திலும், இந்து மற்றும் மொகலாய சமயங்களைச் சேர்ந்த பொது அறக்கட்டளைகளை, ஆங்கிலேய அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

…1863-ம் ஆண்டு இந்த அறக்கட்டளைகளின் பொறுப்புகளிலிருந்து நீங்குவதே உகந்ததெனக் கருதி அவற்றின் கட்டுப்பாடுகளையும், பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட சமயத்தினரிடமே மீண்டும் கொடுத்துவிட்டது. 1863-ம் ஆண்டின் ‘சட்டம் 20’-ன்படி அரசாங்கத்திடமிருந்த அதிகாரம் சில குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட குழுக்களின் மேலாளர்கள், அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டனர்… இந்து அறக்கட்டளைகளைப் பொறுத்தவரை, அரசிடமிருந்த அதிகாரம் இந்துக்களுக்குப் பொதுவாக மாற்றப்பட்டதே தவிர, இந்து சமயத்தைச் சேர்ந்த எந்த ஒரு தனிப்பட்ட பிரிவுக்கும் மாற்றப்படவில்லை.”

திருப்பதி கோயில் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற சுப்பிரமணி அய்யர் மற்றும் டேவிஸ் நீதிபதிகள் அமர்வு கூறியிருப்பதைப் பார்ப்போம்:

“வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வேரா ஆலயம் மிகப் பழமையானது. இங்கு இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இக்கோயிலின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் மூன்று இலட்ச ரூபாய்களாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்கு முன், இக்கோயிலின் நிர்வாகம், அப்போதிருந்த ஆட்சியாளர்களிடமிருந்தது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் கோயில் நிர்வாகம் கிழக்கிந்தியக் கும்பெனிக்குச் சென்றது.

1817-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் ஏழாவது பிரிவின் கீழ் கோயில் நிர்வாகம் வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் நிர்வாகம் நடத்தப்பட்டது. 1841-ம் ஆண்டு கோயில் நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற்றப்பட உத்தரவிடப்பட்டது. அரசின் பொறுப்பிலிருந்த ஆலய நிர்வாகம் 1843-ம் அண்டு ‘ஹத்தி ராம்ஜி’ மடத்தின் தலைவர் சேவாதாஸ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இந்த மடம் திருப்பதி நகரத்தில் திருமலையின் அடிவாரத்தில் இயங்கிவருகிறது. நிர்வாக மாற்ற ஆணையான ‘சன்னத்’ என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவாதாஸ் அவர்களுக்குப் பின், மடத்தின் பொறுப்பிற்கு யார் வருகிறார்களோ, அவர்களிடமே கோயிலின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். நிர்வாக அதிகாரி, விசாரணை கர்த்தா அல்லது கோயில் மேலாளர் என்று அழைக்கப்பட்டார்.

அதே தீர்ப்பில் மேலும் இவ்வாறு சொல்லப்பட்டது: “சில கோயில்கள் மடாதிபதிகளிடமும், பரம்பரை அறங்காவலர்களிடமும் ஒப்படைக்கப்பட்டன. இவர்க ளெல்லாம் யார்? ஞானிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோர் அனைவரும் ஞானிகளல்லர். அவர்கள் ஆச்சாரியார்கள். பூசாரிகள் அல்லது பரிசாரகர்கள். ஸ்மிருதிகளில் உள்ள விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்ட பூசாரிகளின் வழித்தோன்றல்களை அதே பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பது சரியான முறையாகாது. ஒரு வாயில் காப்பாளனை, அறங்காவலர் பதவிக்குத் தேர்ந்தெடுப்பது போன்றதுதான் அதுவும்.

அரசால் ஆரம்ப காலத்தில் நியமிக்கப்பட்டவர்தான் அறங்காவலர். பொறுப்பில் உள்ள ஏனைய அனைவரும் பணியாளர்கள்தான். அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியம் பெற்றுக்கொள்கிறார்கள். பொறுப்பிலுள்ள தனியாரும் பணியாளர்களே. யாருடைய நன்கொடையில் ஓர் அறநிலையம் ஏற்படுத்தப்பட்டதோ அந்த அறநிலையத்திற்கு அவர்தான் அறங்காவலர்; அவரது வழித்தோன்றல்களை அறங்காவலர்களாக ஏற்றுக்கொள்ளலாம். கோயில்களைக் கட்டிய அரசுகளும், குடும்பங்களும் இப்போது இல்லை. காலப்போக்கில் அந்த அரசுகளும் அழிந்துவிட்டன; குடும்பங்களும் அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டன. ஆனால் அந்த கோயில்களின் பூசாரிகளும், பரிசாரகர்களும் தொடர்ந்து இருந்துவருகிறார்கள். அவர்களே கோயில்களின் உரிமையாளர்கள் என்று உரிமை கோருகிறார்கள்.” (ஐ.எல்ஆர். 28 மதராஸ் 379)

விவேகானந்தர் சொல்லும் வரலாறு

கோயில் நிர்வாகங்களைப் பூசாரிகள் கைப்பற்றிய வரலாற்றை சுவாமி விவேகானந்தரைவிட வேறு யாரும் சிறப்பாகக் கூற முடியாது: “வேதத்திலுள்ள புருச சூக்தத்தின் தத்துவத்தின்படி, சாதி பரம்பரையானது அல்ல... அதற்கும் மேலாக, அரச்சகர்கள் எழுதிவைத்துள்ள நூலில்தான் சாதிகுறித்து அவ்வாறு சொல்லப்படுகிறது; கடவுள் வெளிப்படுத்திய நூலில் அல்ல. அர்ச்சகர்கள் அவர்களது முன்னோரது கனிகளான வெற்றிகளை நுகர்ந்து மகிழட்டும். நான் கடவுளது வார்த்தைகளைப் பின்பற்றுகிறபோது, எனக்கான நன்மை நலன் அங்கே இருக்கிறது. அப்படியென்றால் அர்ச்சகர் வகுப்பினரைச் சாதி அமைப்பைத் திட்டமிட்டு உருவாக்க உந்தியது அல்லது செயலூக்கியது எதுவாக இருக்கும்?

… எந்த ஒரு சமூகம் மிகவும் சலுகைகளைப் பெற்றதாக மாறுகிறதோ, அது தனது சொந்த நலன்களைத் தற்காத்துக்கொள்ள முனையும். இதற்கான செயல்முறையில் தனக்கான சுரண்டல் அமைப்புக்கு ஆதரவாக மெய்யியலையும் இறையியலையும் விளக்குவதற்கான முனைப்பான முயற்சியைத் தன்னுணர்வுடன் மேற்கொள்ளும்.” (விவேகா னந்தரது முழுமையான நூல்கள், 1921.)

ஆகமங்கள் உருவான வரலாறு

கோயில் தொடர்பான ஆகமங்கள் எப்படி உருவாயின என்பதை வரலாற்றுப் பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்கார் தனது ‘தமிழர்களின் வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார்: “வைதிகச் சடங்குகளின்படி மக்களை நான்கு வர்ணத்தார்களாகப் பிரிக்க வேண்டியிருந்தது. அவர்களில் கடைசி வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் வேதங்களையும், வேதாந்தங்களையும் படிப்பதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர். மக்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்ததினால் வர்ணாஸ்ரம தர்மம் அமல்படுத்தப்பட்டு அது மக்களிடையே பரவியது. அதில் முக்கியமான ஒன்று சன்யாசம். அது பிராமணர்களுக்கே உரியது. சன்யாச வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் சில பயிற்சிகளின் மூலமே ஒரு சன்யாசி மோட்சத்தை அடைய முடியும். ஆகமங்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தன…

ஆகமங்களின் கூற்றுப்படி தீண்டத்தகாதவன் எனக் கருதப்பட்ட ஒரு சண்டாளன்கூட விஷ்ணுவின் வடிவத்தையோ அல்லது சிவனின் வடிவத்தையோ பெற்று, அவர்களுக்குப் பூசையும் செய்யலாம். கீழ்சாதியைச் சேர்ந்த அடியார்கள்கூட சிவன் கோயில்களில் வழிபட்டதை சிவனடியார்களின் புராணங்கள் விவரிக்கின்றன…

ஆகமங்கள் நான்கு வர்ணங்களாக மக்களைப் பிரிப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால், வேதங்களின் முடிவு என்று சொல்லப்பட்ட வேதாந்தங்களை சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று தடை செய்திருந்தார்கள். பாதராயணர் என்பவர் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளார். சூத்திரர்கள் வைதிகச் சடங்குகளின் மூலம் தூய்மை அடைய முடியாதவர்களென்றும், அதனால் வேதம் படிப்பதிலிருந்து அவர்கள் தடை செய்யப்பட்டிருந்தார்கள் என்றும் மாறாக ஆகமங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதுடன் இன்றுகூட சிவதீட்சை பெற்றவர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) ஒரு பிராமணனுக்கு குருவாக இருந்து தீட்சையளிக்க முடியும்.”

தொடரும் சர்ச்சை

கோயில்களில் பூஜை செய்யும் உரிமை யாருக்கு உண்டு எனும் சர்ச்சை தொடர்ந்து விவாதத்தில் இருக்கிறது. கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு எவ்வித தகுதி, திறமை பற்றிய சோதனைகளும் செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்துவிட்டாலே வாரிசுரிமை மூலம் அப்பதவியைப் பெற்றுவிடலாம் என்ற நிலைமைதான் இருந்தது. அர்ச்சகர்களின் தகுதியின்மையைப் பற்றி 1899-லேயே கமுதி கோயில் வழக்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

என்னென்ன கட்டுப்பாடுகள்?

எவ்வளவோ கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன. கோயிலை ஒட்டியுள்ள வீதிகளில் உயர்சாதியினர் குடியிருப்பும் இருந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் அந்தச் சாலைகளில் சென்றுவரக் கூடாதென்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. ஆலயப் பிரவேசம் செய்து விக்ரகங்களை வழிபடும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு வழிபாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கும் விதமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சாதியினரும் இங்குண்டு. கோயிலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச் செல்லக் கூடாதென்றும், உருவ விக்ரகத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாதென்றும், உற்சவர் சிலைகள் வீதிகளில் எடுத்துவரும்போது மட்டும் தரிசிக்கலாமென்றும் கூறப்பட்டது. உற்சவர் சிலைகளைத் தேர்களில் எடுத்துவரும்போது அதைக் கட்டியிழுப்பதற்கும் தேர்வடத்தைப் பிடிப்பதற்கும் சில சாதியினருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இன்றும் கண்டதேவியில் தலித் மக்களுக்குத் தேர்வடத்தைத் தொடுவதற்குக்கூட உரிமையில்லை.

கோயிலை ஒட்டியுள்ள வீதிகளுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சென்றுவர உரிமையுண்டு என்று வைக்கத்தில் பெரியார் உட்பட பலரும் கலந்துகொண்ட போராட்டம் பின்னர் சுசீந்திரம் வரை தொடர்ந்தது. இப்படி தெருக்களில் சில சாதியினர் நுழையத் தடை இருப்பது பற்றி பணக்குடிக் கோயில் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்தது: “கோயில்களுக்கு வெளியே நடத்தப்படும் திருவிழாக்கள் சாதிகளுக்கு வெளியேயிருக்கும் மக்கள் கடவுள் சிலையைக் காண்பதற்குத்தான் என்பது தெளிவாகிறது. எனவே அந்த மக்கள் கோயில் அருகேயுள்ள சாலைகளுக்கு வரக் கூடாது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லாத அரக்கத்தனமான ஒரு செயல்.”

இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் முன்னரே (1950) கோயிலில் வழிபாட்டு உரிமை, அதன் நிர்வாகம், அரச்சகர்களின் தகுதி தொடர்பாக சர்ச்சைகளும், வழக்குகளும் நடந்தன. 1951-ல் ‘மதராஸ் இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. அதை எதி்ர்த்து ஷிரூர் மடம் போட்ட வழக்கை உயர் நீதிமன்றம் அரசமைப்பு சட்டமளித்த மதசார்பான உரிமைப் பிரிவுகளின்படி ஆராய்ந்து, அச்சட்டத்தின் பல பிரிவுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு “பொது ஒழுங்கு, நன்னெறி மற்றும் உடல்நலத்திற்குட்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சிப்படி விரும்பிய மதத்தை ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு” என்று கூறுகிறது. மேலும், “மத நடவடிக்கைகளையொட்டி வரும் நிதி, அரசியல் மற்றும் மதசார்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் கருதி பொதுவான இந்து அறநிலைய நிறுவனங்களை அனைவருக்கும் திறந்துவைக்கவும் அரசு சட்டமியற்றலாம்” என்றும் கூறுகிறது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்துசெய்யப்பட்டு, சட்டத்தின் பல பிரிவுகளும் மதத்தில் தலையிடுவதாகக் கருதப்பட முடியாது என்றும் கோயில்களை ஒழுங்குபடுத்த அறநிலையத் துறை ஆணையர் திட்டமியற்றுவதற்கு அதிகாரம் உண்டு என்றும் கூறப்பட்டது. 1959-ம் வருடம் இந்து சமய மற்றும் அறநிலையத் துறைச் சட்டம் புதிதாக இயற்றப்பட்டபோது, அச்சட்டத்தின் 55-வது பிரிவு கோயிலில் அர்ச்சகர்கள் நியமிக்கும் முறையை நிர்ணயித்தது. அர்ச்சகர்கள் நியமனத்தில் வாரிசுரிமை இல்லை என்று கூறியபோதும் எங்கெல்லாம் வாரிசு அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அது தொடரப்பட்டது.

1970-ல் இந்தச் சட்டப் பிரிவு திருத்தப்பட்டு, வாரிசுரிமை அடிப்படையிலான நியமனம் ரத்துசெய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (சேஷம்மாள் வழக்கு) அர்ச்சகர் நியமனம் தொடர்பான அதிகாரம் மதசார்புத்தன்மையற்றது என்றும், அதற்கான தகுதி, திறமைகளை அரசு நிர்ணயிக்கலாம் என்றும் குற்றமிழைத்த அர்ச்சகர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் அறநிலைத் துறை நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்தது.

ஆனால் எந்த சைவ மற்றும் வைணவக் கோயில்களில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஆகம முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. அதேசமயத்தில் அப்பதவிகளில் எவரும் வம்சாவளி உரிமை கொண்டாட முடியாது என்றும் கூறியது. தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை அது உறுதிசெய்தது.

2006-ல் இந்து அறநிலையத் துறை சார்பாக, சாதி வித்தியாசமில்லாமல் தகுதியும், பயிற்சியும் பெற்ற எவரையும் அரச்சகர்களாக நியமிக்கலாம் என்ற அரசாணையைப் பிறப்பித்தது. அதற்குப் பக்கபலமாக ஒரு அவசரச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில்தான் 9 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பின்படி, “ஆகமங்களின் அடிப்படையில் அமையப்பெற்ற கோயில்களில் அர்ச்சகர்கள் அந்த ஆகமங்களின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்” என்றும் “அவர்கள் தகுதி பெற்றவர்களா என்று வேண்டுமானால் துறை பரிசீலிக்கலாம்” என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது வெற்றியா?

ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள ஆகமவிதிகளைப் பரிசீலிக்கவும், அதன்படிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்களா என்பதை முடிவெடுக்க வேண்டியிருப் பதாலும்தான் உச்ச நீதிமன்றம் அரசாணையை ரத்துசெய்யவில்லை. இதைத்தான் வீரமணி வெற்றி என்று கொண்டாடுகிறார். ஆனால், ‘நோயாளி இறந்தார், சிகிச்சை வெற்றி’ என்பதை நாம் கொண்டாட முடியுமா?

ஆகமக் கோயில்களில் மத வழக்கப்படி ஒரு சில சாதியைச் சேர்ந்த குடும்பத்தினர் மட்டுமே அர்ச்சகராக வர முடியும் என்பதை இத்தீர்ப்பு உறுதிசெய்துள்ளது. சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக அரசு சட்டம் இயற்றலாம் என்பதையும், அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நடவடிக்கை என்று சேஷம்மாள் வழக்கில் கூறியதையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இது வேதனைக்குரிய விஷயம். வழக்கு நிலுவையிலிருக்கும்போதே 2002-ல் கேரளக் கோயில் வழக்கு ஒன்றில் பிராமணர்கள் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாவதற்குத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும், அந்த மத நடவடிக்கைகளுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 26-வது பிரிவு உறுதியளிக்கிறது என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், 25-வது பிரிவில் மத நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்ட அதிகாரம் அரசுக்கு உண்டு என்பதைப் பார்க்கத் தவறிவிட்டது. குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்றும், அதனால் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகமங்களின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதுதான் மதச்சார்பான உரிமையைப் பாதுகாப்பது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அர்ச்சகர்களாக வரத் தகுதியுள்ள சாதியினரின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற பெண்களை அர்ச்சகர்களாக பணிபுரிய அரசு சட்டம் இயற்றினால் ஏற்றுக்கொள்ளுமா? அப்படியொரு சட்டம் வரும்பொழுது அச்சட்டம் மத நம்பிக்கைக்கு விரோதமானது என்று கூறுவார்களா?

வழிபடும் உரிமைகள் மற்றும் ஆலய நுழைவு இவற்றி லிருந்த சாதிப் பாகுபாட்டைக் களைவதற்கு எடுக்கப்பட்ட சட்ட முயற்சிகள் அனைத்தும் மக்களுக்கு ஆதரவான தீர்ப்புகளாக இதுவரை வந்துள்ளன. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பு அப்படியானதாக இல்லை. சீர்திருத்தப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டு, சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுப்பதுபோல் ஆகிவிட்டது!

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x