Last Updated : 06 Jun, 2017 09:30 AM

 

Published : 06 Jun 2017 09:30 AM
Last Updated : 06 Jun 2017 09:30 AM

ராமனும் பசுவும்!

இந்தியாவில் ஏனைய கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, ஏனைய கட்சிகள் அதிகாரத்தை நோக்கி நகர அணித்திரட்டலில் (mobilization) நம்பிக்கை வைத்திருக்கின்றன; பாஜகவோ எதிர்அணிதிரட்டலில் நம்பிக்கை வைத்திருக்கிறது (counter mobilization). பாஜக முன்வைக்கும் இந்துத்வ அரசியலை எதிர்கொள்ள மிக மிக முக்கியமானது இந்தப் புள்ளி இந்தப் புரிதல்.

ஏனைய கட்சிகளை எதிர்கொள்ளும், ஏனைய அரசியலை எதிர்கொள்ளும் அதே வழிமுறை பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ளப் பயன்படாது. ஏனென்றால், அது தன்னுடைய அணித்திரட்டலின் பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான இந்துச் சமூகம் ஏனைய சமூகங்களைப் போல ஒரு மதமாகச் சிந்திக்கவில்லை; மாறாக, சாதியச் சமூகமாக அவர்கள் சிந்தித்துப் பழகியிருக்கின்றனர்! இந்துக்கள் ஏனைய தளங்களில் முழுக்க சாதியமயப்பட்டிருந்தாலும், அரசியல் தளத்தில் சாதியிலிருந்தும் விடுபட்டு பொது அடையாளம் நோக்கிச் செல்லவே பெருமளவில் விரும்புகிறார்கள் சாதியைத் தாண்டிய பிரச்சினைகளுக்கே அவர்கள் பிரதான கவனம் அளிக்கவும் முற்படுகிறார்கள். மாறாக, பாஜக அவர்களை மதமயமாகச் சிந்திக்க வைப்பதைச் செயல்திட்டமாகக் கொண்டிருக்கிறது!

இந்துச் சமூகம் எப்போது மதமாகச் சிந்திக்கிறது? அதன் உணர்வுகள் தூண்டிவிடப்படும் போதும் சீண்டிவிடப்படும்போதும்! இதில் தூண்டி விடப்படுவதனால் ஏற்படும் விளைவைக் காட்டிலும் சீண்டிவிடப்படும்போது கிடைக்கும் அனுகூலம் பாஜகவுக்கு அதிகம். அணித்திரட்டலைக் காட்டிலும் எதிர் அணித்திரட்டல் விரைவான கூடுதல் பலன்களைத் தருவதாலேயே இந்துக்களைத் திரட்ட பெரும்பாலும் இரண்டாவது வழியையே அது தேர்ந்தெடுக்கிறது. இந்த இடத்திலேயே ராமரோ, பசுவோ அதற்குத் தோதான வாகனங்கள் ஆகிவிடுகின்றனர்; எதிர்க்கட்சிகள் வழுக்கி விழுகின்றனர்.

ராமனும் ராவணனும்!

இந்தியாவில் ராமர் கோயில் இல்லாத மாநிலம் எங்கே இருக்கிறது? இதுதான் ராமர் வந்து சென்ற பாதை என்றும் செதுக்கப்பட்ட கல் சிற்பத்தை ‘ராமர் பாதம்’ என்றும் சுட்டிக்காட்டாதவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்த நாடு முழுக்க விரவிக் கடக்கும் இதிகாசம் ராமாயணம். ஆனால், ஒடிஸா ஆதிவாசிகளின் ராமாயணமும் மஹாராஷ்டிர சித்பவன் பிராமணர்களின் ராமாயணமும் ஒன்றல்ல. விளைவாகவே ராம நவமி மாதிரியே ராவண நவமியும் இருக்கிறது. ஒவ்வொரு மண்ணுக்கும் ஏற்ப கதை மாறுகிறது என்றாலும், ராமன் என்பவன் ஏக பத்தினி விரதன். சகல புருஷ லட்சணங்களுக்குமான உதாரண மனுஷன். பிராமணர்களின் ராமனும் அப்படித்தான்; ஆதிவாசிகளின் ராமனும் அப்படித்தான்! ஆனால், ராவணனை எப்படியும் விரிக்கலாம். தென்னாட்டில் ராவணன் அசுரன் திராவிடன்; வட நாட்டில் ராவணன் பிராமணன் ஆரியன்! கதையையும் எப்படியும் விரிக்கலாம், யாரை வேண்டுமானாலும் ராவணனாக மாற்றலாம். ராமனுடைய அம்புகளை யார் பக்கம் வேண்டுமானாலும் திருப்பலாம். நாடெங்கும் விரிந்து கிடக்கும் மக்களின் மனதில் புராணிகமாகப் பொதிந்து கிடக்கும் ராமனை நவீன அரசியலின் தொன்மமாக்குதல் என்பது வெற்றிகரமான, அதேசமயம் மிக நுட்பமான ஒரு உத்தி!

இருவேறு ராம ராஜ்ஜியங்கள்

காந்தி அந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார். இந்த நாட்டை ஆளும் அரசு ஒரு ராம ராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்றார் அவர். அந்த ராம ராஜ்ஜியம் எப்படியானது? 1920-ல் ‘நவஜீவன்’ பத்திரிகையில் எழுதுகிறார்: “ஒரு அரசன், தனது பிரஜைகளிலேயே மிகவும் பலவீனமான தரப்பினரின் சிரமங்களை உணர்ந்தவனாக இருந்தால் அவனது ராஜ்ஜியம்தான் ராம ராஜ்ஜியம்! அது மக்களின் ஆட்சியாக இருக்கும். இதனை நவீன கால அரசுகளில் - அது பிரிட்டிஷ் அரசோ, இந்திய அரசோ, கிறிஸ்தவ அரசோ, முஸ்லிம் அரசோ, இந்து அரசோ எதுவாக இருந்தாலும் அவற்றிடமிருந்து - எதிர்பார்க்க முடியாது. இன்று நாம் எந்த ஐரோப்பாவைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றத் தயாராக இருக்கிறோமோ அந்த ஐரோப்பாவும் முரட்டுத்தனமான பலத்தையே வழிபட்டுக்கொண்டிருக்கிறது. இதுவும், பெரும்பான்மையினரின் கருத்துகள் எப்போதும் சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொள்ளாது என்பதும், பெரும்பான்மையினர், உறுதியாக எப்போதும் சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொள்ளவே மாட்டார்கள் என்பதும் ஒன்றுதான்!”

சங்கப்பரிவாரங்களும் அந்த உத்தியைக் கையாள்கின்றனர். ஆனால், அவர் முன்வைக்கும் ராம ராஜ்ஜியத்தின் அடிப்படை என்ன? அது நமக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால், காந்தியின் ராம ராஜ்ஜியத்துக்கு நேர் எதிரான இயல்பை அடிப்படையாகக் கொண்டது அது! இப்போதைய பிரதான பிரச்சினை இதுவல்ல; ராமர் உயிர்ப்போடு இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வியே இன்றைய பிரதான பிரச்சினை. அதாவது, “மக்களின் மனதில் பொதிந்து கிடக்கும் புராணிகங்களை நவீன அரசியலின் தொன்மமாக்குதல் எனும் உத்தி இன்றும் துடிப்போடு இருக்கும் ஒரு வெற்றிகரமான அரசியல் உத்தியாக இருக்கிறதா, இல்லையா?” என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் எப்படி முகம் கொடுக்க விரும்புகின்றன என்பதே பாஜகவின் இந்துத்துவ அரசியலின் உயிர் நாடி அடங்கியிருக்கும் இடம்!

தாராளர்கள் இதை மறுக்க விரும்பலாம்; உண்மை இதுதான்: புராணிகங்களை நாம் தீண்டும்போது அவை உயிர்த்தெழுகின்றன! அவர்களைத் துதிப்பவர்களைக் காட்டிலும் சீண்டுபவர்களாலேயே அவை அதிகம் உயிர்த் துடிப்பைப் பெறுகின்றன! ராமனும் அப்படித்தான்; கோமாதாவும் அப்படித்தான்!

வலையை எப்படி விரிக்கிறார்கள்?

அதனாலேயே பாஜக எப்போதெல்லாம் இந்துக்களைத் திரட்ட நினைக்கிறதோ அப்போதெல்லாம் ராமனையோ, மாட்டு வடிவில் உள்ள கோமாதாவையோ அதன் எதிரிகள் சீண்டும் இடத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது. ராமனையோ, மாட்டையோ ஜோடித்து தெருவில் கொண்டுவந்து நிறுத்துவதோடு அதன் ஜோலி முடிந்தது. மிச்சத்தை தன்னுடைய எதிரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று அது நினைக்கிறது. அது நினைப்பதுபோலவே எதிர்வினைகள் வந்தடைகின்றன.

என் அண்டை வீட்டு அனுபவம் இது. கட்சி சார்பற்ற ஒரு சாமானிய பிரஜை அவர். “இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை” என்ற செய்தி வந்த நாளிலிருந்து மோடி அரசாங்கத்தைத் திட்டிக்கொண்டிருந்தார். மாட்டிறைச்சிக்கான போராட்டம் என்ற பெயரில், கேரளத்தின் கண்ணூரில் பொதுவெளியில், ஒரு கன்றுக்குட்டியைப் போராட்டக்காரர்கள் வெட்டியதற்கு மறுநாள் அப்படியே அவர் குரல் மாறியது. பாஜக வலையில் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எப்படிச் சிக்குகின்றன என்பதற்கான ஒரு சாமானிய உதாரணம் இது.

அப்படியென்றால், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்’ என்று பாஜக அறிவித்தால், அதை வாயை மூடிக்கொண்டு எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்திருக்க வேண்டுமா? “கோமாதா குடிகொண்டிருக்கும் கோயில் பசு அதை இறைச்சியாக்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிப்போம்” என்று சங்கப்பரிவாரங்கள் வெறிப்பிடித்து ஆடினால், அதற்கெதிராகப் போராடாமல் கை கட்டி அமைதி காக்க வேண்டுமா?

அப்படி இல்லை. பாஜக செல்லும், பாஜக அமைக்கும் அதே தளத்தில் சென்று எதிர்க்கட்சிகள் இந்த யுத்தத்தை வெல்ல முடியாது என்று கூற விரும்புகிறேன். “நாடு முழுக்க இருக்கும் கோயில்கள் போதாதா? அயோத்தியின் இன்றைய முக்கியத் தேவை அரசு மருத்துவக் கல்லூரியா, ராமருக்கு மேலும் ஒரு கோயிலா? நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை நல்லிணக்கமா, மத வெறியா?” என்று கேட்பது வேறு. “அயோத்தியில்தான் ராமன் பிறந்தான் என்பதற்குப் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா?” என்று கேட்பது வேறு. “மாட்டிறைச்சி எங்கள் உணவுரிமை!” என்று போராட்ட முழக்கமிடுவது வேறு; “இன்றிரவு கோமாதா பிரியாணி” என்று ஃபேஸ்புக்கில் பதிவிடுவது வேறு. மதவுணர்வற்றவர்களும்கூட மத அரசியலை மதவுணர்வற்ற நிலையில் அணுக முடியாது. மதவுணர்வற்றவர்கள் எல்லாம் கூடிப் பேசுவதாலேயே மத நம்பிக்கை கொண்டவர்களின் பசுவை மத நம்பிக்கையிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்த நிதர்சனத்தில் நின்றே போரைத் தொடங்க வேண்டும்.

பசு என்பது விலங்கு மட்டும் இல்லை!

இந்தியாவில் பசு வெறும் விலங்கு இல்லை. நிச்சயமாக, கணிசமான மக்கள் இடத்தில் அதற்கு இன்னொரு இடம் இருக்கிறது. ஒரு இந்திய விவசாயி பசுவை வளர்க்கிறார் அவரே அதனிடமிருந்து பாலைக் கறக்கிறார் அவரே பாலைப் பருகுபவராகவும் இருக்கிறார் அவரே அதை வழிபடுபவராகவும் இருக்கிறார் அவரே அதை அடிமாட்டுக்கு அனுப்புபவராகவும் இருக்கிறார் அவரே வேறொரு பசுவின் இறைச்சியைச் சாப்பிடுபவராகவும்கூட இருக்கிறார். இதில் எந்தவொரு நிலையையும் மற்றொரு நிலையோடு அவர் குழப்பிக்கொள்வதில்லை. சிக்கல் எங்கே இருக்கிறது என்றால், இந்த ஆறு நிலைகளில் ஒரு நிலையாக வரும், அவர் அதை வழிபடும் நிலையில் இருக்கிறது. அந்த நிலையை ஏனைய நிலைகளோடு எவரேனும் குழப்ப முற்படும் சூழலில் வருகிறது. இந்திய ஆன்மாவில் பசுவுக்கு அப்படியும் ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் கைப்பிடியில்லாத கத்தியின் கைப்பிடியாக அமையும் கூரிய இடம். அந்த இடத்தை ஏனைய கட்சிகளின் கைகளில் திணிப்பதே பாஜகவின் செயல்திட்டம். கத்தியைப் பிடிப்பதில் ஏனைய கட்சிகள் எவ்வளவு இறுக்கத்தைக் கொடுக்கின்றனவோ அவ்வளவு ரத்தத்தை பாஜகவின் வளர்ச்சிக்கு அவை அளிக்கின்றன.

( உணர்வோம்…)

-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x