Published : 06 Aug 2016 10:04 AM
Last Updated : 06 Aug 2016 10:04 AM

தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்கு வழி என்ன?

வேலை பெறுவதற்கு முன்னதாகவே தொழில்பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட வேண்டும்

தொழில் கல்வியும் பயிற்சியும் அளிக்க ஆகும் செலவு, பொதுக் கல்வியளிப்புக்கான செலவைவிட அதிகம். காரணம், இது தொழில்நுட்பம் சார்ந்தது. பணியில் சேர்ப்பதற்கு முன்னால் தொழில்பயிற்சி அளிக்க வேண்டும் என்றால் அதற்கான கருவிகள், தொழில்கூடங்கள் ஆகியவற்றுடன், பயிற்சி பெற்ற தொழில் பயிற்றுநரும் அவசியம். இதனால்தான் தொழில்பயிற்சி அளிக்க செலவு அதிகமாகிறது. இதனாலேயே இத்தகைய பயிற்சி அளிப்பது பெரிய அளவுக்கு வளராமலும் இருக்கிறது. தொழில் கல்வி என்பது பெருமளவு அரசு தரும் நிதியில் வழங்கப்படுவது இதனால்தான்.

இந்தியாவில் நான்கு வெவ்வேறு களங்களில் தொழில் கல்வி அளிக்கப்படுகிறது. 1. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படுகிறது. 2. ஐ.டி.ஐ. என்று அழைக்கப்படும் தொழில்பயிற்சி நிலையங்களில் தனியாக அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி.களை அரசு, தனியார் இருவருமே நடத்துகின்றனர். 3. தேசியத் திறன் வளர்ச்சி கார்ப்பரேஷன்

(என்.எஸ்.டி.சி.) என்ற அமைப்பு மூலம் தொழில்பயிற்சி அளிக்கும் தனியாருக்குப் பொது நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. 4. பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த செலவில் அல்லது அரசு தரும் நிதியைக் கொண்டு பயிற்சி அளிக்கின்றன.

இப்படி நான்கு தளங்களில் அளிக்கப்படும் பயிற்சி களுக்குத் தேவைப்படும் நிதி நான்கு வழிகளில் தரப்படுகிறது. 1. அரசின் வரி வருவாயிலிருந்து குறிப்பிட்ட அளவு அரசு மற்றும் தனியார் தொழில்பயிற்சிக் கூடங்களுக்கு அளிக்கப்படுகிறது. 2. சில நிறுவனங்கள் தங்களுடைய சொந்த நிதியிலிருந்து செலவழித்து தொழில்பயிற்சி அளிக்கின்றன. 3. தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு செலவினத்திலிருந்து பணம் செலவழிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 4. தொழில் நிறுவனங்கள் மீது இத்தகைய பயிற்சிகளுக்காகவே அரசு கட்டாயச் சந்தா வசூலித்து, அந்த நிதியிலிருந்து பயிற்சி தருகிறது. இது பரிந்துரைக்கப்பட வேண்டியது. ஆனால், இந்தியாவில் இந்த நடைமுறை இல்லை.

பொது வரி வருவாய்

மேலே கூறப்பட்ட நான்கு வழிகளில் முதல் இரண்டு வழிகள் மூலம்தான் தொழில்பயிற்சிக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. தேசிய திறன் வளர்ப்பு கார்ப்பரேஷன் (என்.எஸ்.டி.சி.) கூட பொது வரி வருவாயிலிருந்துதான் ஒதுக்கீடு பெறுகிறது. அரசு நடத்தும் தொழில்பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ.), மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் தொழில் கல்வியும், பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பயிற்சி மிகச் சில எண்ணிக்கையில்தான் அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலமும் மிகவும் குறுகியது. தரமும் வேலை பெறும் திறனும் பாதிக்கப்படக்கூடிய அளவில் இது நீட்டிக்கப்படுகிறது.

திறன் வளர்ப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் தொகையைப் போல, 150% வருமானம் வரி விலக்கு பெறத் தகுதியானது என்று அரசால் சலுகை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாகத் தொழில் நிறுவனங்கள் தரும் விண்ணப்பங்களை என்.எஸ்.டி.சி.

பரிசீலித்து, வரிச் சலுகைப் பரிந்துரைகளுடன் வருமான வரித் துறைக்கு அனுப்பிவைக்கிறது. இம்மாதிரி நிதியளிப்பில் இரண்டு குறைகள் இருக்கின்றன. முதலாவதாக, 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகும்கூட, வரி வருவாய்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் (ஜிடிபி) இடையிலான விகிதம் மிகக் குறைவாகவே இருக்கிறது. அதாவது, நாட்டின் வருவாயில் வரி வசூலின் பங்களிப்பு மிகவும் குறைவு. அது 17.5% ஆக இருக்கிறது. அதுவும் பொருளாதாரம் உச்சத்தில் இருந்த 2007-08 காலத்தில். தொழில்பயிற்சிக்காக நிறுவனங்களின் வரி விதிப்புக்குரிய வருவாயில் சலுகைகள் அளித்தால் அரசின் வரி வருவாய் மேலும் சரிந்துவிடும்.

இரண்டாவதாக, இந்திய வருமான வரிச் சட்டப்படி தொழில் நிறுவனங்கள் மீதான வரிக்கு ஏகப்பட்ட விலக்குகள், சலுகைகள் அளிக்கப்படுகின்றன. நிறுவனங்கள் மீதான வரி 34.61% என்றால் இந்தச் சலுகைகள், விலக்குகளைக் கழித்தால் சராசரியாக 23% ஆகத்தான் வசூலாகிறது. இதில் தொழில்பயிற்சி அளிப்பதற்காக மேலும் சலுகை என்றால், அரசின் வருவாய் கடுமையாகக் குறைந்துவிடும். எனவே, இந்த வகையிலான நிதியளிப்பு பொருத்தமானது அல்ல. மேலும், இந்த வகையில் அதிக நிதி சேருவதும் கிடையாது.

தொழில் நிறுவனமே பயிற்சிக்குச் செலவிடும் இரண்டாவது முறையிலும் அதிகப் பலன் ஏற்படவில்லை. 2009-ல் அனைத்து இந்தியத் தொழில் நிறுவனங்களிலும் 16% நிறுவனங்களால்தான் இப்படி நிதி ஒதுக்க முடிந்திருக்கிறது. 2014-ல் சற்றே மேம்பட்டு 39% நிறுவனங்களால் நிதியளிக்க முடிந்திருக்கிறது. சீனத்தில் 85% நிறுவனங்கள் சொந்தப் பணத்தில் தொழிலாளர்களுக்குப் பயிற்சி தருகின்றன. இந்தியாவில் பெரிய தொழில் நிறுவனங்களிலேயே சிறிய நிறுவனங்களும், நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் தொழில்பயிற்சி அளிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே, பயிற்சி பெற்ற திறன்மிகு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

உற்பத்திச் செலவு கூடுகிறது

பயிற்சி தருவதற்கு நிதி போதாமையாலும், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லாததாலும் கடந்த 10 ஆண்டுகளில் மிகுந்த தொழில் திறனும் அனுபவமும் உள்ள தொழிலாளர்களின் ஊதியங்களும் படிகளும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. இதனால், நிறுவனங்களின் உற்பத்திச் செலவும் கூடியிருக்கிறது. இச்செலவு நிறுவனங்களின் தொடர் செலவுகளாக நீடிக்கிறது. இதன் துணை விளைவாக பெரிய நிறுவனங்கள் குறைந்த தொழிலாளர் எண்ணிக்கை - நவீனத் தொழில்நுட்பம் என்ற வழிமுறையைத் தேர்வுசெய்து இயந்திரங்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அதிக பணத்தை முதலீடு செய்கின்றன. தொழிலாளர்களுக்குப் பதிலாக தொழில்நுட்பத்துக்கு அதிகம் செலவிடுவதால், வேலைக்குச் சேர்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படுகிறது. எனவே, இப்போதுள்ள நடைமுறை நிறுவனங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும் நன்மைகளைச் செய்வதில்லை, பொதுவான அமைப்பிலும் நன்மைகளைச் செய்வதில்லை.

நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) நிதி யிலிருந்து தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது மூன்றாவது வழிமுறை. 2013-ல் இயற்றப்பட்ட நிறுவனங்கள் சட்டத்தின் 135-வது பிரிவின் கீழ் சமூகப் பொறுப்பு வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் இதை நிறைவேற்றலாம். தங்களுடைய கடந்த 3 ஆண்டுக்கால நிகர லாபத்தில் 2%-ஐ இந்த இனத்துக்காகச் செலவிட வேண்டும். இப்போதுள்ள நிலவரப்படி சுமார் 6,000 நிறுவனங்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தகுதியுள்ளவை.

குறிப்பிட்ட வரி மூலம் பயிற்சி நிதி

பயிற்சி அளிப்பதற்கான நிதி திரட்டுவதில் உள்ள இடர்களைப் பார்த்தோம். உலகின் 62 நாடுகள் தங்களுக்கு ஏற்ற வகையில் நிதி திரட்டி தொழில்பயிற்சிகளை அளிக்கின்றன. தொழில்நுட்பம் இணைந்த தொழில்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு ஆகும் செலவை அரசு ஈடுகட்டலாம். அப்படிப்பட்ட பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை அளிக்கலாம். தொழில்நுட்பம் இணைந்த தொழில்பயிற்சிகளைப் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் அரசு இதற்கு உற்ற ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும்.

அரசின் வருவாய் நிலையில்லாததாக இருப்பதால் பயிற்சிக்கென்று மட்டும் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட அளவு நிதியை அரசு ஒதுக்க வேண்டும். வேலை பெறுவதற்கு முன்னதாகவே தொழில்பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, அளிக்கும் பயிற்சிகளில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வர வேண்டும்.

- சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்.
தமிழில்: சாரி
© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x