Last Updated : 10 Feb, 2014 12:00 AM

 

Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

தற்காப்பு என்ற சமாதானம்

கல்லூரி மாணவி ஒருவர் சென்ற வாரம் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தனது அக்காள் கணவரைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததற்காகக் காவல் துறையினர் கைதுசெய்து, திருவொற்றியூர் குற்றவியல் நடுவர்மன்றத்தின் உத்தரவின் பேரில், காவல் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘‘அந்தக் கல்லூரி மாணவி தன்னைக் காத்துக்கொள்ளவே தற்காப்பு நடவடிக்கையாகச் செய்த செயலைக் குற்றமாகக் கருதக் கூடாதென்றும், வழக்கு ஏதும் பதிவுசெய்யாமல் அவரை விட்டுவிட வேண்டும்’’ என்றும் பல தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரியும் சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசிப்பதாகவும் கூறப்பட்டது.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடைய கற்பையோ உயிரையோ பாதுகாத்துக்கொள்ளவே தற்காப்பு நடவடிக்கைக்காக அந்தக் குற்றம் புரிய நேர்ந்தது என்று வாக்குமூலம் அளித்தாலும், வழக்கை விசாரிக்கும் காவல் துறையினரே மேல்நடவடிக்கை ஏதுமின்றி, அந்தக் குற்றவாளியை வழக்கிலிருந்து விடுவிக்கச் சட்டத்தில் அதிகாரம் உள்ளதா?

இதைப் போன்று மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 100-ன் கீழ் உஷாராணி என்ற பெண்ணைக் காவல் நிலையத்திலிருந்து மேல்நடவடிக்கை ஏதுமின்றி விடுவித்ததுபோலவே, சென்னை மாணவிக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

கொலையற்ற உயிர்ச்சேதம்

ஆயுதங்களாலோ வேறு விதத்திலோ முன்விரோதம் காரணமாக அல்லது திட்டமிட்டு ஒரு நபர் மற்றொருவரின் உயிரைப் பறித்தால் அது தண்டனைக்குரிய கொலைக் குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது. தற்செயலாக ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டால், அதைக் கொலைக் குற்றமாகச் சட்டம் கருதாமல், அந்தக் குற்றத்தைக் கொலையற்ற உயிர்ச்சேதம் என்று அழைக்கிறது. அப்படிப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதற்கும்கூட சிறைத்தண்டனை உண்டு. ஆனால், அந்தத்தண்டனை கொலைக் குற்றத்துக்கு அளிக்கப்படுவது போன்றது அல்ல. காவல் துறை அதிகாரி ஒரு சிறுவனின் வாயில் தனது கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டும்போது, துப்பாக்கி வெடித்து அந்தச் சிறுவன் இறந்துபோனால், அது கொலைக்குற்றம். ஆனால், துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வெடித்துக் கிளம்பிய குண்டு பாய்ந்து, அருகில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் பலியானால், அது திட்டமிடாத உயிர்ச்சேதம் என்ற குற்றமாகும்.

நீதிமன்றத்துக்கே அதிகாரம்

ஒரு குற்றத்தைப் பற்றி தகவல் தெரிந்தவுடன் முதல் தகவல் அறிக்கையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்த பின்னர், அதற்கான விசாரணை அதிகாரி, துப்புத்துலக்கி விசாரணை அறிக்கையைச் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். குற்ற விசாரணையின்போது பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலங்கள், தடயவியல் துறை ஆய்வுக்கூடத்தின் சான்றிதழ்கள், குற்றத்துக்குப் பயன்பட்ட ஆயுதங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சாட்சியங்களின் பட்டியலுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கொலை, வல்லுறவு போன்ற குற்றங்களைக் குற்றவியல் நடுவர்கள் விசாரிக்க முடியாது. அவர்கள் வழக்கின் கோப்புகளை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பெருங்குற்றங்கள்பற்றிய விசாரணையை மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியும். குற்றத்தைத் துப்புத்துலக்கும்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் சில பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றவாளியிடமிருந்து விசாரணை அதிகாரி பெறும் வாக்குமூலம், சட்டப்படியான சாட்சியமாகாது. குற்றவாளியோ அவரது கூட்டாளிகளோ ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முன்வந்தால், அதை எப்படிப் பதிவுசெய்வது என்பதைப் பற்றிக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழிகாட்டுதல்கள் உண்டு.

காவல் துறையினரே ஒரு குற்றவாளியை நிரபராதி என்று கூறி விடுதலை செய்யும் அதிகாரத்தைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கவில்லை. செய்த குற்றம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு. ஒரு கொலைக்குப் பிறகு, அது திட்டமிட்டு செய்யபபட்ட கொலைக் குற்றமானாலும் அல்லது தற்செய லான உயிர்ச்சேதமானாலும், அதற்குரிய விசாரணை அறிக்கையை ஆவணங்களுடன் காவல் துறை அதிகாரி உரிய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமே அன்றி, தன்னிச்சையாக அவர் முடிவேதும் எடுக்க முடியாது. விசாரணை அதிகாரி சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கை, நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது. இறுதியில், சரியான குற்றப்பிரிவுகளை ஏற்படுத்துவதற்கும், சாட்சியங்களின் அடிப்படையில் உரிய குற்றப்

பிரிவுகளுக்கான தண்டனை வழங்குவதற்கும் நீதிமன்றங்களுக்கே அதிகாரம் உண்டு.

காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை

குற்றத்தை விசாரிக்கும் காவல் துறையினர் தற்காப்புக் கருதி அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் குற்றவாளி கூற முன்வந்தாலும், அவரது சமாதானத்தைத் தக்க சாட்சியுடன் நீதிமன்றத்தில் மட்டுமே நிரூபிக்கக் கடமைப் பட்டவராவர். இந்திய தண்டனைச் சட்டத்தில் தற்காப்பு என்ற சமாதானம் பற்றிய வரையறைகள் பிரிவுகள் 96-லிருந்து 106 வரை கூறப்பட்டுள்ளது. ஒருவர் தன்னை உயிர்ச்சேதம் அல்லது பெருந்தீங்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எதிர்நடவடிக்கையில் ஈடுபடாமல் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று சமூகமும் சட்டமும் எதிர்பார்ப்பதில்லை. எதிர்நடவடிக்கை என்பது, பழிவாங்கும் நடவடிக்கையாகவோ திட்டமிட்ட எதிர்த் தாக்குதலாகவோ இருக்கக் கூடாது. ஒவ்வொரு எதிர்த் தாக்குதலும் தாக்குதலின் உடனடி எதிர்வினையாகவும், அது சமவிகிதாச்சாரத்தில் இருக்கும்படியான தற்காப்பு நடவடிக்கையாகவும் மட்டுமே இருக்க வேண்டும். எனது மூக்கை ஒருவர் விரலால் தொட்டதற்காக அவரை நான் கத்தியால் குத்த முடியாது. குறிப்பிட்ட சூழ்நிலையில், தப்பிக்கும் உபாயங்கள் ஏதும் கிடைக்காதபோதே அப்படிப்பட்ட எதிர்நடவடிக்கையில் ஈடுபடலாம். தற்காப்பு என்ற சமாதானத்தை நீதிமன்றத்தில் குற்றவாளி நிரூபிக்க கடமைப்பட்டவரேயொழிய, அப்படிப்பட்ட சமாதானத்தையே ஏற்று குற்றவாளியை விடுதலை செய்ய காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.

2012-ம் ஆண்டு மதுரையில் கணவன் வீரண்ணன் குடிபோதையில் வந்து தன் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, மனைவி உஷாராணி அதைத் தடுக்க முயன்றும், அவளையும் தள்ளிவிட்டு மகளைப் படுக்கையறைக்கு இழுத்துச்சென்ற கணவனை அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அடித்துக் காயப்படுத்தியதாலும், அவரது மர்ம உறுப்பை நசுக்கிய

தாலும் அவர் இறந்துவிட்டார். தகவலின் பேரில் அந்தப் பெண்ணைக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணைக் கைதுசெய்யாமல், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 100-ன்படி தற்காப்பு என்ற சமாதான வரையறைக்குள் அவளது செயல் வருவதால், அவளை விடுவித்துவிட்டதாக அன்றைய காவல் துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து அன்றைய மாவட்ட ஆட்சியாளர் சகாயம், அரசுக்குப் புகார் கடிதம்கூட அனுப்பினார். வழக்கைப் பின்னர் விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, விசாரணையைத் தொடர்ந்து நடத்தவும், அதன்பின் உரிய நடுவர் மன்றத்துக்கு இறுதிஅறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது. குற்றவாளி தன்னுடைய தற்காப்பு சமாதானத்தை நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க முடியுமேயொழிய அவ்வகையான அதிகாரங்கள் காவல் துறையினருக்கு இல்லை என்றும் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டது.

குற்றவாளிகளே நீதிபதிகளா?

தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைக் காவல் துறையினருக்குச் சட்டம் எப்போதும் வழங்கியது இல்லை. அதனால்

தான், ‘‘என்கவுன்டரில் காவலர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீதும் கொலைக் குற்றத்துக்கான வழக்குப் பதிவுசெய்து, அந்த வழக்கு விசாரணையில் மட்டுமே தற்காப்பு நடவடிக்கையாக உயிரைப் பறிக்கநேர்ந்தது என்று அந்தக் காவலர்கள் நிரூபிக்க வேண்டும்’’ என்ற உத்தரவைத் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்தது. அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளுக்கு எல்லாம் பதவி உயர்வும் சிறப்புச் சன்மானங்களும் அரசே வழங்கிவருவது சட்டத்தையே கேலிக்குரியதாக்கிவிட்டது தற்காப்புச் சமாதானம் கூறும் குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி, தங்களை விடுவித்துக்கொண்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன.

‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யா நிகழ்த்தும் என்கவுன்டர் காட்சிகளின்போது ரசிகர்களின் கைத்தட்டல் ஒலிகளால் திரையரங்குகள் மூழ்கியது, மனித உரிமைகள் பற்றி மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாத

தையே காட்டுகிறது. குற்றவாளிகளை வேட்டையாடும் சூப்பர்மேன்களைத் திரைப்படங்களில் காண்பதோடு மட்டுமே நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சியில் அப்படிப்பட்டவர்களுக்கு இடமில்லை.

சென்னைக் கல்லூரி மாணவியின் தற்காப்பு என்ற சமாதானம்பற்றி முடிவெடுக்கக் காவல் துறைக்குச் சட்ட அதிகாரம் இல்லை.

“அடித்தான், தடுத்தேன், விழுந்தான்” என்பது போன்ற தற்காப்புக்கான சமாதானத்தைக் குற்ற விசாரணையில் மட்டுமே சாட்சியங்கள் மூலம் நிரூபித்து விடுதலை பெற வேண்டும் என்பதே சட்டம் கூறும் உண்மை.

சந்துரு,ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x