Last Updated : 22 Feb, 2017 09:29 AM

 

Published : 22 Feb 2017 09:29 AM
Last Updated : 22 Feb 2017 09:29 AM

காங்கிரஸ் மீண்டெழும்!- ராகுல் காந்தி பேட்டி

நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டணியை உறுதிசெய்த உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல் காந்தி. சமாஜ்வாதி கட்சியின் புதிய தலைவராகிவிட்ட அகிலேஷ் யாதவுடனான உறவு அவருக்கு உவகை தந்திருப்பதை உணர முடிகிறது. பஞ்சாப், இமாசல பிரதேசம், மணிப்பூரிலும்கூட இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சரியான அடி தரும் என்ற நம்பிக்கை அவரிடமிருந்து வெளிப்படுகிறது. ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் மோடி அரசைக் கடுமையாகச் சாடிய அவர், காங்கிரஸின் அடுத்தடுத்த திட்டங்கள் தொடர்பிலும் விரிவாகப் பேசினார்.

உத்தர பிரதேசத்தில் வழக்கத்துக்கு மாறாக சமாஜ்வாதியுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள்; கூட்டணி எப்படிச் செயல்படுகிறது?

உத்தர பிரதேசத்துக்கு என்று ஒரு மாற்று இளைய தலைமுறைத் தலைமையை உருவாக்குவதே இந்தக் கூட்டணியின் நோக்கமாக இருந்தது. மாநிலத்துக்கென்று ஒரு எதிர்காலத் திட்டத்தை உருவாக்கி, பின்தங்கிய நிலையிலிருந்து அதை வெளியே கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறோம். கொள்கை அளவில் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. தனிப்பட்ட முறையிலும் எனக்கும் அகிலேஷுக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் பல இருக்கின்றன. அகிலேஷுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கின்றன. எந்தக் கருத்தையும் திறந்த மனதுடன் அவர் வரவேற்கிறார்.

தனித்துப் போட்டி என்ற நிலையிலிருந்து விலகி, கூட்டணி வைத்திருக்கிறீர்கள்; ஏன் முடிவை மாற்றிக்கொண்டீர்கள்?

கூட்டணி வைத்துக்கொண்டதால், சமாஜ்வாதி தன்னை வலுப்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது என்றோ காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றோ அர்த்தமில்லை. இரு தரப்பிலுமே எங்களுடைய நிலையை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இப்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் எந்த வகையில் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

பாஜக ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை நாட்டின் மீது திணிக்க முயற்சிக்கிறது; இதற்காக தேசிய நிறுவனங்களைக் கைப்பற்றி, அதில் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துவருகிறது. அவர் களுடைய கொள்கைகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவருகின்றன. இதனால் தான் இந்த ஆட்சிக்கு எதிரான அலை மக்களிடம் திரண்டுகொண்டிருக்கிறது. ஏழைகள், நலிவுற்ற பிரிவினர் இந்த ஆட்சியால் மிகுந்த வேதனை களை அனுபவித்துவருகின்றனர். அவர்கள்தான் பாஜகவுக்கு எதிர்ப்பை வலுப்படுத்திவரு கின்றனர். சாமானியர்களுக்கு பாஜக அளித்து வரும் வேதனைகள் கொஞ்சமல்ல. பணமதிப்பு நீக்கம் ஒரு உதாரணம். வேளாண்மையை அடியோடு புறக்கணிப்பது அடுத்த உதாரணம். குஜராத்தில் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். நாடு முழுக்கச் சிறுபான்மையினர் தாக்கப் படுகின்றனர் என்பதெல்லாம் ஏனைய உதாரணங்கள். பொதுவாக அச்சம் நிலவுகிறது; இளைஞர்கள் அதை உணர்ந்துள்ளனர். தங்களை யாரும் எதிர்க்கக் கூடாது என்று பாஜகவும் பிரதமர் மோடியும் நினைக்கிறார்கள். எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது என்கிறார்கள். ஆகையால், யார் சொல்வதையும் காது கொடுத்துக்கேட்பதில்லை. இந்த வகையில் இந்தியாவை வழிநடத்தக் கூடாது. இந்தியா தனக்குரிய விடைகளைத் தானே தேடிக்கொள் கிறது. ஆளும் கட்சி அந்த விடையைத் தழுவிக் கொள்ள வேண்டும், தன்னுடையதைத் திணிக்கக் கூடாது. தேர்தல் முடிவுகள் இதையெல்லாம் தெரிவிக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால், பணமதிப்பு நீக்கத்தை ஏழைகள் வரவேற்கின்றனர் என்கிறாரே பிரதமர்?

ஏழைகளின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதால், எப்படி அவர்களை அந்தக் கட்சியால் அரவணைக்க முடியும்? விவசாயிகள் விதைகள் வாங்கப் பணம் தராமலும் தொழிலாளர்களுக்கு செய்த வேலைக்கு ஊதியம் தராமலும் இருப்பதால் எப்படி ஏழைகளுக்கு நெருக்கமான கட்சியாகிவிட முடியும்? இது மிகவும் அபத்தமான கருத்து. இரண்டு அல்லது மூன்று காரணங்கள் இருக்கின்றன பணமதிப்பு நீக்கத்துக்கு. எல்லா நிறுவனங்களையும் பாஜக கைப்பற்றுவது முதல் காரணம். பிரதமரை எதிர்த்து எந்த நிறுவனமும் நிற்க முடியாது. இந்திய ரிசர்வ் வங்கி இதற்கு இப்போதைய உதாரணம். மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கையை எடுப்பதற்கு 8 மணி நேரத்துக்கு முன்புதான் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு தெரிவிக்கிறது. முடிவை எடுத்துவிட்டோம் என்று அரசு சொல்கிறது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தில் பிரதமர் செயல்படுகிறார் என்றே உலகு கருதுகிறது. அரசின் பொருளாதார ஆலோசகருக்குக்கூட அந்த முடிவு தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், கறுப்புப் பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று இதை பிரதமர் கூறுகிறார்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாவது அம்சம், கறுப்புப் பணத்துக்குக் குறிவைத்ததாகப் பிரதமர் கூறுகிறார். கறுப்புப் பணத்தில் 94% ரொக்கமாக இல்லை. எனவே, அவர்கள் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந் நடவடிக்கையின் விளைவாகக் கடைசியில் பொருளாதாரத்தைத்தான் கூர்மழுங்கச் செய்து விட்டார்கள். ஏராளமான மக்களின் வாழ் வாதாரத்தை நாசமாக்கிவிட்டார்கள். அவர்கள் எடுத்தது மிகப் பெரிய பொருளாதார நடவடிக்கை என்று நம்பிக்கொண்டு, வேறொரு உலகில் வாழ்கிறார்கள்.

பணமதிப்பு நீக்கம் அரசியல்ரீதியாக என்ன விளைவை ஏற்படுத்தும்?

இது பாஜகவைப் பெரிதும் பாதிக்கும். கையில் ரொக்கம் வைத்துக்கொண்டு செலவழிக்கும் நியாயமானவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்திய நடவடிக்கை அது.

புனே திரைப்படக் கழகம் முதல் சிபிஐ தலைமை இயக்குநர் வரையில் நியமனங்களில் ஒரு தனிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தனக்கு விசுவாசமானவர்களை மட்டும் முக்கியப் பதவிகளில் அமர்த்த மோடி விரும்புகிறாரா?

முதலாவது, தனிப்பட்ட விசுவாசம். இரண்டாவது, அவர்களுடைய சித்தாந்தத்தை ஆதரிக்க வேண்டும். இந்த இரண்டுமே காரணம். ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைப்புகளையும் கைப்பற்றிவிடத் துடிக்கின்றன. மத்திய திட்டக் குழு, ரிசர்வ் வங்கி போன்றவற்றில்கூட அப்படித்தான் செய்தனர். இந்தியா எதை விரும்புகிறதோ அதை நாம் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதைப் போலத் தெரியவில்லை. எனவே, அவர்களுக்கு இந்த நிறுவனங்கள் அனைத்தும் அவர்களுக்குப் பயன்படாதவை, இடைஞ்சல்களைச் செய்பவை. இந்த நிறுவனங்களில் எல்லாம் ‘ஆமாஞ்சாமி’ களைத்தான் நியமிக்க விரும்புகின்றனர். அப்போதுதானே பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையை மோடியால் எடுக்க முடியும்!

காங்கிரஸ்?

காங்கிரஸ் பிரதமர் ஒருநாளும் இப்படிச் செய்ய நினைக்க மாட்டார். அப்படியே அவர் கற்பனை செய்தால்கூட, இந்த நிறுவனங்கள் மீது காங்கிரஸ் வைத்திருக்கும் மதிப்பு காரணமாக அப்படிச் செய்ய முடியாமல் தடுக்கப்படுவர். ரிசர்வ் வங்கியிலிருந்த நல்ல சிந்தனையாளர்கள் அதைத்தான் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி ஆளுநர் கூட அந்த முடிவை ஏற்க மறுத்தார் என்று நம்புகிறேன். எதிர்க் கருத்து சொல்பவர்களுக்கு மோடி அரசில் இடமே இல்லை. இது ஆர்எஸ்எஸ் - மோடி நடத்தும் அரசு. இந்தியாவுக்கு எது வேண்டும் என்று அவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள். எனவே திட்டக் குழு, ரிசர்வ் வங்கி போன்றவற்றிடம் ஆலோசனை கலக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றனர்.

பிரதமர் இந்த நிறுவனங்களை எப்படிக் கையாள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பிரதமருடைய வேலை என்னவென்றால், இத்தகைய அமைப்புகளின் பணி நிலையை உள்வாங்கிக்கொண்டு அவற்றின் அனுபவங் களையும் ஞானத்தையும் சுவீகரித்து, மக்களுடைய கருத்துகளுக்குச் செவிமடுத்து அதற்கேற்பச் செயல்படுவதுதான். இந்தியர்களின் அறிவுத்திறனுக்கு மதிப்பளிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை விவாதித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான அணிதிரளல் உருவாகிவருகிறதா?

மோடி நல்ல எதிர்காலத் திட்டம் இருக்கிறது என்று வாக்குறுதி தந்தார், இந்தியாவில் தயாரிப்போம் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவாகத்தான் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த ஆண்டு வேலைவாய்ப்பே உருவாகவில்லை. ஏழை மக்கள் மட்டுமல்ல, தொழிலதிபர்கள்கூட பணமதிப்பு நீக்க முடிவு தவறானது என்றே கருதுகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வேலையில்லாதோர் எண்ணிக்கை உச்சபட்சத்தில் இந்த ஆண்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு அளிப்பதில் தோற்றுவிட்டார், கல்வி அளிப்பதில் தோற்றுவிட்டார். எந்த அம்சத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆக, இந்தத் தோல்விகள் தரும் ஏமாற்றமும் கோபமும் மக்களிடம் வளர்கின்றன. எதிர்க்கட்சிகள் இந்த உணர்வுக்கேற்ப ஒரு எதிர்ப்பு வடிவத்தை உருவாக்கி, மாற்று ஏற்பாட்டுக்கு வழி செய்ய வேண்டும்; இந்த நாட்டுக்காக எதிர்காலத் திட்டத்தை உருவாக்க வேண்டும். செய்வோம்.

இது, எதிர்க்கட்சிகள் அவரைச் சரியாக மடக்கத் தவறியதால் வந்த வினையோ?

எதிர்க்கட்சிகள் தரப்பில் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தான் மட்டுமே சிந்திப்பதாக நினைத்து முடிவெடுக்க நினைக்கும் ஒரு பிரதமரின் ஆட்சி இது. அமைச்சரவையின் மூத்த சகாக்களிடம்கூட மோடி ஆலோசனை கலப்பதில்லை. மோடியின் அமைச்சரவைக் குழுவில் தானும் ஒருவர் என்ற எண்ணம் அவர்களுக்கும் இல்லை. ஒரு தனி மனிதன் இந்த நாட்டை நிர்வகித்துவிட முடியாது. அடுத்த பொதுத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறப்போகிறோம். மற்றவர்களோடு இணைந்து செயல்பட மோடியால் முடிவதில்லை என்பதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆம்ஆத்மி கட்சியால் காங்கிரஸுக்குப் பெரிய ஆபத்து என்று கருதுகிறீர்களா? காங்கிரஸ் கட்சியின் இடத்தை அது பிடித்துவிடுமா?

நான் அப்படி நினைக்கவில்லை. ஆஆகவைவிட காங்கிரஸ் வித்தியாசமானது. பாஜகவைப் போலவேதானே செயல்படுகிறது ஆஆகவும்! ஒரே ஆள் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். அங்கு உரையாடலே கிடையாது. யாரும் யார் சொல்வதையும் கேட்பதில்லை. காங்கிரஸில் அப்படியல்ல, காங்கிரஸ் என்பது அடிப்படையிலேயே கருத்தொற்றுமைப்படி செயல்படுகிற கட்டமைப்பு. இங்கே உரையாடல்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது.

உங்கள் கட்சிகூட அப்படித்தான் நடத்தப்படுகிறது என்று விமர்சகர்கள் கூறக்கூடும் - காங்கிரஸ் என்பது ஒரு குடும்பத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுவது என்று?

காங்கிரஸைப் பற்றிய அடிப்படையான தவறான புரிதல் இது. இப்படி விமர்சிப்பவர்கள் யாருமே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் கூட்டத்தில் அமர்ந்ததே கிடையாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு குடும்பம் நடத்தும் கட்சி என்பது சரியல்ல. டாக்டர் மன்மோகன் சிங் இந்நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார். காங்கிரஸ் ஜனநாயகபூர்வமான கட்சி. காங்கிரஸ் கட்சி உயிர்த்துடிப்புள்ள ஜனநாயக அமைப்பு. இங்கே எல்லாவிதமான விவாதங்களும் நடைபெறுகின்றன. உண்மையில், நானே இவற்றிலிருந்துதான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எங்கள் கூட்டங்களில் மக்கள் பேசுகிறார்கள், நாங்கள் கேட்கிறோம், பிறகு விவாதிக்கிறோம், பிறகு முடிவுகளை எடுக்கிறோம். ஆஆகவிலோ பாஜகவிலோ அப்படியல்ல. அங்கெல்லாம் கூட்டங்களில், தலைமை என்ன நினைக்கிறது என்றே கூறப்படுகிறது. மாறாக, நாங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு முடிவுசெய்கிறோம்.

இத்தகைய உரையாடல்களில் காங்கிரஸின் தலைமைப் பதவியை ஏற்குமாறு உங்களுக்குக் கோரிக்கைகள் வந்திருக்கக்கூடும். வெகு விரைவில் அது நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?

இது கட்சி முடிவுசெய்ய வேண்டிய விஷயம்.

ஒவ்வொரு பத்தாண்டிலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய கொள்கைகள், லட்சியங்களைக் காலத்துக்கேற்ப புதிதாக வரையறுக்கும் என்று பேசியிருக்கிறீர்கள். உங்களுடைய புதிய கொள்கைக்கு எது அடிநாதமாக இருக்கும்?

வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சினையை இந்தியா தீர்த்தாக வேண்டும். மோடி செய்வதைப் போல அதைச் செய்ய முடியாது. வேலைவாய்ப்பு விஷயத்தில் மோடியைவிட வேறு விதமாக நான் சிந்திக்கிறேன். மேலிருந்து கீழ் நோக்கி வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்று நினைக்கிறார். மாறாக, மக்களை ஒன்றுகூட்டுவதன் மூலம் அதைச் சாதி்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்நாட்டில் அபரிமிதமான அறிவுத்திறனும் கைத்திறனும் இருக்கின்றன. இதை நாம் முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்ததில்லை. அங்கிருந்துதான் நாம் தொடங்க வேண்டும். மோடியின் ‘மேக் இன் இந்தியா’வும் மேலிருந்து கீழே பார்க்கும் பார்வைதான். அதே 10 அல்லது 20 உயர் அதிகாரிகள், தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசுகிறார். பிறகு, வேலைவாய்ப்பு பெருகும் என்று எதிர்பார்க்கிறார், அப்படி நடப்பதில்லை. வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் என்றால், கான்பூரில் தோல் தொழிற்சாலைகளுக்கும் மொராதாபாதில் வெண்கல வார்ப்படத் தொழிலுக்கும் புத்துயிர் ஊட்டுங்கள். அவர்களுக்கு நிதியளியுங்கள், அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை அளியுங்கள். நடக்கும். சீனத்துடன் இந்தியா எப்படி போட்டியிடப் போகிறது? இப்போது எல்லாமே சீனத்தில் உற்பத்தியாகிறது. அதற்குத் தக்க பதிலை நாம் அளித்தாக வேண்டும். இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று மோடி தெரிவிக்கவில்லை. ஒத்துழைத்து செயல்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் வேண்டும். அதில் தோல்வி கண்டுவிட்டார்.

மக்களவையில் காங்கிரஸின் வலு 44 ஆகிவிட்டது?

அதற்கு நிறையக் காரணங்கள். காங்கிரஸுக்கு எதிராக ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் சில சக்திகள் திட்டமிட்டு தவறாகப் பிரச்சாரம் செய்தன. கச்சா எண்ணெய் விலை உச்சத்துக்குச் சென்றது. நாங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். மக்களுக்கு அலுப்பும் கோபமும் இருந்தன. நாட்டின் நிர்வாக அமைப்பில் சமநிலை வேண்டும். ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. எல்லோருக்குமே செயல்பட இடம் தேவை. அதற்கான திசையில் செல்ல வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜகவால் அப்படி உரையாடல் நடத்திச் செயல்பட முடியாது என்பதையே இந்த ஆட்சி காட்டுகிறது. காங்கிரஸால் மட்டுமே எதிர்காலத் திட்டத்தை வழங்க முடியும். அது விரைவிலேயே மீண்டும் நடக்கும். காங்கிரஸ் மீண்டெழும்!

எப்போதாவது ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவர்களைச் சந்தித்திருக்கிறீர்களா, உரையாடியிருக்கிறீர்களா?

பாஜகவின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சந்திக்கிறேன். பேசுகிறேன். நான் நிறைய உபநிஷத்துகள், வேதங்கள் தொடர்பான புத்தகங்களையும் படித்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் ஆர்எஸ்எஸ்காரர்களுடன் பேசும்போதெல்லாம், அவர்களுக்கு இது எதுவும் புரிவதில்லை என்றே உணர்ந்திருக்கிறேன்!

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

நிஸ்டுலா ஹெப்பர், அமித் பரூவா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x