Last Updated : 11 Aug, 2016 09:34 AM

 

Published : 11 Aug 2016 09:34 AM
Last Updated : 11 Aug 2016 09:34 AM

மக்கள் நலன்தான் உண்மையான தேசியவாதம்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு, பகுத்தறிவுவாதத்தைக் கைவிட்டுவிட்டது என்றும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான இர்ஃபான் ஹபீப். பேட்டியின் சில பகுதிகள்:

மத்தியில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும், முந்தைய அரசுகளையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விடவும், இந்த அரசு மதரீதியாகவும், சாதி மற்றும் வகுப்புவாத அடிப் படையிலும் மிக அதிகமாகப் பிரிவினைவாத அணுகுமுறை கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். மேலும் இந்த அரசு, குறிப்பாக ஆளுங்கட்சி, தேர்தலில் கிடைத்த பெரும்பான்மையும், ஆர்.எஸ்.எஸ்.ஸுடனான தொடர்பும் தனக்கு இருப்பதால் சாதி, மதம் தொடர்பான நேரடியான அல்லது மறைமுகமான கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராகவும் இதேபோன்ற பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.

இரண்டாவது வேறுபாடு, பகுத்தறிவுவாதத்தை இந்த அரசு கைவிட்டதுபோல் முந்தைய எந்த அரசும் இதுவரை செய்ததில்லை. நம் முன்னோர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி ஆகியவற்றை அறிந்திருந்தார்கள் என்பதற்கு விநாயகரே சாட்சி என்று சொல்வது, அறிவியல் மாநாட்டில் புராதன விமானத் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சையை எழுப்புவது என்று வாஜ்பாய் கூட நடந்துகொண்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பொதுவாக, பாசிஸம்தான் பகுத்தறிவுவாதம் மீதான தாக்குதலை நிகழ்த்தும். பாசிஸத்தின் வரலாறு நெடுக இரண்டு முக்கிய அம்சங்களைப் பார்க்க முடியும்: தேசியப் பெருமிதம் என்ற பெயரில் நடத்தப்படும் பிரிவினைவாதம் மற்றும் தர்க்கவாதம் மீதான தாக்குதல். அத்துடன், பெரிய அளவு வணிகத்துக்கான தளமாக இந்தியா இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் இவர்களிடம் இருக்கிறது. சாலை வசதி, தகவல்தொடர்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை வளர்ச்சியின் அடையாளங்கள் என்றே ஒரு சாமானியக் குடிமகன் கருதுகிறான். ஆனால், அவர்களிடம் இந்தக் கண்ணோட்டம் இல்லை. மற்ற அரசுகளும் முதலாளித்துவம் சார்ந்த கொள்கையுடன் இருந்திருக்கின்றன. அவர்களிடமும் ஒருவகையான ஜனரஞ்சகத்தன்மை இருந்தது. ஆனால், இந்த அரசு இந்தக் கொள்கைகளைக் கைவிடுகிறது.

இதனால் அவர்களுக்கு என்ன பலன்?

அவர்களைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் அவர்களுக்குப் பலம் தரும் விஷயங்கள்.

இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

எதிர்க்கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன என்பது இயல்பாகவே ஒரு சாதகமான அம்சம். இது குறிப்பிட்ட அளவில் இரட்டை அதிகாரத்தை அவற்றுக்கு வழங்குகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எதிர்க்கட்சிகள், தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் பிரிவினைவாத, மதவாத நடவடிக்கைகளைத் தடுக்க முன்வர வேண்டும். மதவாதத்தின் அடிப்படையில் மக்களைத் தூண்டிவிடும் பாஜக தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம் என்றே கருது கிறேன். மாநில அரசுகள் என்று வரும்போது, சோஷலிஸம் தொடர்பான விஷயங்களில் மாறுபடுபவர்கள்கூட, மற்ற பல விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் என்று வரும் போது, மதச்சார்பின்மையில் உறுதியான நிலைப்பாடு இல்லாத, அதே சமயம் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற கூட்டணிகளுக்கான சாத்தியம் பற்றிப் பரிசீலிக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் இடது சாரிகள் அத்தனை பலத்துடன் இல்லை என்றாலும், அங்கெல் லாம் அக்கட்சிகளால் 2-3% வாக்குகளைப் பெற முடியும். குறைந்த வாக்கு வித்தியாசம்கூட வெற்றி - தோல்விகளை நிர்ண யிக்கும் நிலையில், இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்விஷயத்தில் இடதுசாரிகள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும். மேலும், இந்தக் கூட்டணியைப் பாதிக்கும் விதத்தில் எதையும் செய்யக் கூடாது. என்னைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறக் கூடாது என்றெல்லாம் நாம் பேசக் கூடாது.

ஆனால், பிஹாரில் மெகா கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறாமல் தனித்தே தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கினார்களே..?

அது பெருந்தவறு என்றே கருதுகிறேன்.

வரலாற்றைத் திரிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எச்.ஆர்.) தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் இடம்பெற்றி ருப்பவர்கள் வரலாற்றாசிரியர்கள் எனும் தகுதியே இல்லாத வர்கள் என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. அவர்கள் வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் என்பதற்காக அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்பதாலேயே அவர்களுக்கு அங்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் வரலாறு, காத்திரமான வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் பலராலேயே ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை.

வலதுசாரி வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜும்தார், ‘ஆர்கனைஸர்’ இதழுக்கு எழுதிவந்தார். ஒருமுறை, ‘தாஜ்மஹாலைக் கட்டியது மான் சிங்’ என்று சொல்லும் கட்டுரையைப் பிரசுரித்தது அந்த இதழ். இதுபோன்ற அர்த்தமற்ற கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று மஜும்தார் அந்த இதழுக்குக் கடிதம் எழுதினார். ‘நாங்கள் சுதந்திரச் சிந்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்’ என்று ‘ஆர்கனைஸர்’ ஆசிரியர் குழு பதில் எழுதியது. உடனே, “உங்கள் இதழுக்கு ஒருபோதும் எழுதக் கூடாது என்றே என் சுதந்திர மனது சொல்கிறது” என்று பதிலடி கொடுத்தார் மஜும்தார். அந்தக் கடிதத்தை அந்த இதழ் பிரசுரமும் செய்தது.

அவர்கள் பரப்ப விரும்பும் வரலாறு கற்பனையானது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானது. பள்ளிப் பாடங்களில் வரலாற்றை, குட்டிக் கதைகளாக மாற்றும் அளவுக்குக்கூட அவர்கள் செல்லலாம்!

ஒருவரின் வார்த்தைகள் அல்லது செயல்பாடுகளின் அடிப்படையில், ஒருவருடைய ‘தேசியவாத’த்தை வரையறுக்க முடியுமா?

இல்லை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசியவாதம் என்பதற்குத் தனி அர்த்தம் இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் உளவியல் சிக்கல் என்னவென்றால், அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எங்கும் இடம்பெறவில்லை என்பதுதான். அந்த அமைப்பு, 1925-ல் தொடங்கப்பட்டது. அதற்கு அடுத்த 22 ஆண்டுகளில் அவர்களின் தேசியவாதம் என்ன? அவர்களிடம் தேசிய நாயகர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ஆனால், இன்றைக்கு அவர்கள்தான் ‘சிறந்த தேசியவாதிகள்’!

அப்படியென்றால், உங்களைப் பொறுத்தவரை தேசியவாதம் என்பதற்கு இன்றைய அர்த்தம் என்ன?

தேசத்துக்கு இப்போது ஆபத்து ஏதும் இல்லை. சுதந்திரம் அடைந்துவிட்டது. இந்த சமயத்தில் தேசத்தைப் பற்றிய கூப்பாடுகள், முழக்கங்கள் எழுப்புவதில் ஒரு பயனும் இல்லை. தேசியவாதம் என்பதற்கு இன்றைய அர்த்தம், மக்கள் நலனுக்காக ஏதேனும் செய்வதுதான். காஷ்மீர் மக்களும் இதில் அடக்கம்!

ஆர்.எஸ்.எஸ்.ஸை ஐ.எஸ். அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறீர்கள். இதைப் பலர் மறுத்திருக்கிறார்கள்…

அவை இரண்டும் இணையானவை என்றோ, இரண்டும் ஒன்றுதான் என்றோ நான் சொல்லவில்லை. ஐ.எஸ். அமைப் பினர்போல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேசுகிறார்கள் என்றுதான் சொன்னேன்.

எல்லா விதமான வகுப்புவாதத்தையும் சமமாக விமர்சிக்க வேண்டுமா?

வகுப்புவாதத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. காங்கிர ஸில்கூட வகுப்புவாத அம்சங்கள் உண்டு. ஆனால், அவை சற்றே நாகரிகமானவை. பல சமூகங்கள் தங்களுக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டும் என்று கோருகின்றன. ஆனால், பிற சமூகங்களைக் குற்றம்சாட்டுவதைப் போன்றதல்ல இது. ஒரு முஸ்லிம் அல்லது தலித் தலைவர், தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சொல்லலாம். அது வேறு மாதிரியான விஷயம். ஆனால், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை வீழ்த்தும்போது, ஆட்சி அமைப்பில் அச்சமூகத் துக்கான இடத்தை மறுக்கிறோம் என்று அர்த்தம். முஸ்லிம் களுக்கு எந்த வித உரிமையும் கொடுக்கக் கூடாது எனும் அளவுக்கு கோல்வல்கர் பேசினார். இந்துக்கள், சீக்கியர்கள் விஷயத்தில் பாகிஸ்தானின் வலதுசாரிகள் அப்படித்தான் பேசுகிறார்கள். ஆக, வகுப்புவாதம் என்பது ஒவ்வொருவரின் தீவிரத்தையும் பொறுத்தது. இந்து சீர்திருத்தச் சட்டத்தை, ராஜேந்திர பிரசாத் எதிர்த்தார். அதற்காக அவரை வகுப்புவாதி என்று சொல்வீர்களா? அவர் போன்றவர்களுடன் உறவாடி சமரசம் செய்துகொள்வது எப்போதும் சாத்தியமே!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: வெ.சந்திரமோகன்

வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x