Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM

மூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா?

ஆண்டுக்கு ஓரிரு முறை அரிதாகப் பத்திரிகைகளில் வரும் படங்களோடு முடிந்துவிடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதான கவனம், இப்போது தொடர்கதைபோல ஆகியிருக்கிறது. காரணம், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்று விபத்துகள். அத்துடன் உயிரிழப்புகள். கடற்படைக் கப்பல்களின் விபத்துகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பதவி விலகியிருக்கிறார் கடற்படைத் தளபதி. நீர்மூழ்கிக் கப்பல் வீரர்களின் மரணம் பெரும் செய்தி ஆகியிருக்கிறது. இத்தகைய சூழலிலும்கூட இந்திய ஊடகங்கள் விவாதிக்காத ஒரு விஷயம் உண்டு. அது நீர்மூழ்கி வீரர்களின் வாழ்க்கை.

தண்ணீர் குடிக்கக் கட்டுப்பாடு

“நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்றுவிட்டால், பெரும்பாலும் அரை வெளிச்ச உலகம்தான். குறைந்தது தொடர்ந்து 15 நாட்கள் முதல் 45 நாட்கள்வரை கடலுக்கு அடியில் இருக்க வேண்டும். கப்பலில் பணியாற்றும் கேப்டன் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், ஒருநாளில் சில மணி நேரம் மட்டுமே நாங்கள் நிமிர்ந்து நிற்கவோ, நிமிர்ந்து உட்காரவோ முடியும். தினசரி சராசரியாக 12 மணி நேரம் குனிந்து, ஊர்ந்து, முழங்காலிட்டுதான் பணி செய்ய வேண்டியிருக்கும்.

பேட்டரி அறை, இன்ஜின் அறை, கழிப்பறை இவை எதிலும் நிமிர்ந்து நிற்க முடியாது. அங்கெல்லாம் சராசரி உயரம் கொண்ட ஒரு மனிதன் பாதியாகக் குனிந்துதான் வேலை பார்க்க முடியும். தவிர, நீர்மூழ்கிக் கப்பலின் பெரும்பாலான இடங்களுக்கு இடம்பெயர தவழ்ந்தும் சில இடங்களில் சுரங்கப்பாதை வடிவலான பாதைகளில் ஊர்ந்தும்தான் செல்ல வேண்டும். இன்ஜின் அறையில் சுமார் 120 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும். அங்கு போய் அரை மணி நேரம் பணிபுரிவது, மைக்ரோவேவ் ஓவனுக்குள் அரை மணி நேரம் இருப்பதற்குச் சமம்.

மேற்கண்டவை எல்லாம் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள். ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகளும் மோசம். உள்ளே குறிப்பிட்ட அளவுதான் நல்ல தண்ணீர் இருப்பு வைக்க முடியும். தண்ணீர் இருப்பைப் பொறுத்து நான்கு நாட்கள் அல்லது வாரத்துக்கு ஒருமுறைதான் குளிக்க முடியும். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவே உண்டு. ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட குவளைகள் மட்டுமே தண்ணீர் குடிக்க அனுமதி. வாரத்துக்கு ஒரு சீருடை மட்டுமே அனுமதி. அதைத் துவைக்கத் தண்ணீர் இல்லாததால் அதை அழித்துவிட வேண்டும்.”

பதுங்குகுழி வாழ்க்கை

“கேப்டனே ஆனாலும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பு அவர்தான் சுத்தப்படுத்த வேண்டும். அதற்குத் தனி பணியாட்கள் கிடையாது. கழிப்பறையில் உட்கார மட்டுமே முடியும். எழுந்து நிற்க முடியாது. கேப்டனின் ஓய்வு அறையில் நன்றாக நிமிர்ந்து நிற்கலாம். அதற்காகவே ஏதேனும் சாக்கிட்டு அடிக்கடி அங்கு செல்ல ஆசைப்படுவோம். இதர வீரர்களின் ஓய்வு அறைகள் கிட்டத்தட்ட பதுங்குகுழி வடிவில் இருக்கும்.

பெரும்பாலும் பிரெட், பிஸ்கட், பீட்ஸா, எப்போதாவது சப்பாத்தி போன்ற ரெடிமேட் பாக்கெட் உணவுகள் மட்டுமே. பொழுதுபோக்கு கேரம், சதுரங்கம் மட்டுமே. அவைதானே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகள். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எடைக்கு மேல் பொருட்களை வைத்துக்கொள்ள முடியாது என்பதால், புத்தகங்களுக்கும் கட்டுப்பாடு.

சுமார் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்ய நீர்மூழ்கிக் கப்பல் மேலெழும்பும். அப்போது கிடைக்கும் சில மணி நேரம் மட்டுமே வெளிக்காற்றைச் சுவாசிப்போம்; நண்பர்கள் வாங்கிவரும் விதவிதமான உணவுகளைச் சுவைப்போம்…”

- சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றும் நண்பர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். பணிச் சூழல்பற்றிப் பேச ஆரம்பித்தபோது அவர் சொன்ன தகவல்கள் இவை.

வசதி குறைவானவை

இந்தியாவிடம் தற்போது ரஷ்யத் தயாரிப்புகளான ‘சிந்துகோஷ்', ஜெர்மனி தயாரிப்புகளான ‘சுசிமோர்', ரஷ்யாவிடம் வாடகைக்கு வாங்கப்பட்ட ‘அகுலா' வகை அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் என மூன்று வகை நீர் மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் ‘சிந்துகோஷ்' வகையைச் சேர்ந்த 10 கப்பல்களும் 238 அடி நீளம், 32 அடி அகலம், 22 அடி உயரம் கொண்டவை. ‘சுசிமோர்' வகையைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் 211 அடி நீளம், 21 அடி அகலம், 20 அடி உயரம் கொண்டவை. ‘அகுலா' வகை கப்பல்கள் மட்டுமே 366 அடி நீளம், 44 அடி அகலம், 31 அடி உயரம் கொண்டது. இவற்றில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ‘சிந்துகோஷ்' கப்பல்களில் அனைத்துமே மிகவும் வசதி குறைவானவையே.

ரஷ்ய நீர்மூழ்கிகளும்... இந்திய நீர்மூழ்கிகளும்...

ஆனால், ரஷ்யா தனது உபயோகத்துக்காக வைத்திருக்கும் ‘கே-433', ‘கே-51', ‘கே-271', ‘கே-18' உள்ளிட்ட மொத்த நீர்மூழ்கிக் கப்பல்களும் சராசரியாக 500 - 600 அடி நீளம், 35 - 45 அடி அகலம், 25 - 30 அடி உயரம் கொண்டவை. அதே

போல் அமெரிக்காவிடம் பணியின் தன்மையைப் பொறுத்து நிறைய சிறிய வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்தாலும், அவற்றில் பணியாற்றும் வீரர்கள் வெகு குறைவு. ஆனால், 70 முதல் 220 பேர் வரை பணியாற்றும் பெரிய வகை ‘அலாஸ்கா', ‘அலெக்ஸாண்டிரியா', ‘லூசியானா' உள்ளிட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் 360 - 600 அடி நீளம், 35 - 45 அடி அகலம், 25 - 35 அடி உயரம் கொண்டவை. ஜெர்மனி மற்றும் சீனாவின் கப்பல்களும் இதே அளவைக் கொண்டவை. மேற்கண்ட கப்பல்களில் உள்ளே ஒரு உயரமான நபர், கப்பலுக்குள் நிமிர்ந்து நின்று கையை மேலே நீட்டினாலும் மேற்பரப்பைத் தொட முடியாது. தவிர, பேட்டரி அறைகள் விசாலமானவை. இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் பேட்டரி அறையில் படுத்துக்கொண்டுதான் பழுது பார்க்க முடியும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் வீரர்களின் முகம் பேட்டரியில் உரச அதிக வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பம் தெரியாது

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில்தான் அவசர காலங்களில் ஓட முடியும், தாவிக் குதிக்க முடியும். ஆனால், இந்தியாவிடம் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஆபத்துக் காலங்களில் முழங்காலிட்டோ அல்லது ஊர்ந்தோதான் செல்ல முடியும். மேலும், ரஷ்யக் கப்பல்களின் தொழில்நுட்ப விவரங்கள் நமது வீரர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான ‘சிந்துரக்‌ஷா'வில் 18 பேர் பலியானதும், தற்போது ‘சிந்து ரத்னா'வில் இருவர் பலியானதும் இதன் காரணமாகத்தான். தவிர, எந்நேரமும் போர் புரியத் தயாராக இருக்க வேண்டிய வீரர்களுக்கு மன அழுத்தம் இருக்கக் கூடாது. ஆனால், இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றும் வீரர்களுக்கு மன அழுத்தம் தவிர்க்க முடியாதாகிவிட்டது.

இதெற்கெல்லாம் தீர்வு காண்பதே கடற்படையின் அதிமுக்கியப் பணி.

டி.எல். சஞ்சீவிகுமார்- தொடர்புக்கு sanjeevikumar.tl@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x