Last Updated : 30 May, 2017 09:16 AM

 

Published : 30 May 2017 09:16 AM
Last Updated : 30 May 2017 09:16 AM

சிறந்த உலகுக்குத் தேவை புதிய பொருளாதார முறைமை

பொருளாதார வளர்ச்சி என்றாலே, நாட்டின் ‘ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு’ (ஜி.டி.பி.) தான் என்று சமீப ஆண்டுகளாகப் பேசப்படுகிறது. பொருளாதார உலகமயமாக்கலும் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் புதிய தாராளமயக் கொள்கையும் மற்ற எதையுமே வளர்ச்சியின் குறியீடாகப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகின்றன.

புதிய தாராளமயக் கொள்கைக்கு ‘வாஷிங்டன் கருத்தொற்றுமை’ என்ற பெயரும் உண்டு. சிகாகோ பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த வல்லுநர்கள்தான் மில்டன் ஃப்ரீட்மேன் தலைமையில் இதை ஊக்குவித்தனர். அதிபர் ரொனால்ட் ரீகன் தலைமை யிலான அமெரிக்க நிர்வாகம், உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) ஆகியவை 1980-களில் இதை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களாக உள்ள நாடுகள் மீதும் வளரும் நாடுகள் மீதும் வம்படியாகத் திணித்தன.

வரிதான் விலை

புதிய தாராளமயத்தின் மையக் கரு தனியார்மயம், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, சுதந்திரச் சந்தை, குறைந்த வரி விகிதம், குறைந்தபட்ச அரசுத் தலையீடு என்பவை. வரி விகிதம் குறைந்ததை வரவேற்பதற்கு முன்னால், தொழில் நிறுவனங்கள் தங்களுடைய பங்குதாரர்களுக்கு மட்டுமே பொறுப்பாக நடக்கக் கடமைப்பட்டவை என்ற பொன்மொழியையும் அப்போது உதிர்த்தார். ஃப்ரீட்மேன் இந்தியாவில் ஜி.டி.பி. ஆண்டுக்கு 7% என்று அதிகரிப்பது சிலருக்கு நல்லதாகத் தோன்றும். யார் முன்னேறுகின்றனர், யார் பின்தங்குகின்றனர் என்று ஜிடிபி சொல்வதில்லை. ஐக்கிய நாடுகள் சபை கணிக்கும் மனிதவள மேம்பாட்டு அட்டவணை மீது கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். அது தனிநபர் வருமானம், கல்வியறிவு, உடல்நலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. வளர்ச்சிக்கு அடையாளமாக வெறும் ஜிடிபியைப் பார்ப்பது வீட்டு வாசலில் காணப்படும் பளபளப்பான தெருக் கதவை மட்டும் பார்ப்பதுபோல.

நிலையில்லா நிலை

தொழில் நிறுவனங்களும் நுகர் வோரும் பொருளாதாரத் துறையில் நிலைத்தன்மை நிலவுவதைத்தான் விரும்புகின்றனர். புதிய தாராளமயம் இந்த அம்சத்தில் பெரிய தோல்வியைக் கண்டிருக்கிறது. அடிக்கடியும் தீவிரமாகவும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. 1980-களின் பிற்பகுதியில் ஜப்பானில் பங்குகள் சரிந்து மனைவணிக நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் அதலபாதாளத்துக்குச் சரிந்தன. 1997-ல் தாய்லாந்து நாட்டின் தேசிய செலாவணியான ‘பாட்’ சரிந்து, ஆசியாவிலும் புதிய சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் 2002-ல் டாட்.காம் நிறுவனச் சரிவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிகள் மூழ்கிய நெருக்கடியும் ஏற்பட்டன. உலக அளவில் வங்கித் துறை நெருக்கடியில் சிக்கியதால் அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றை மீட்க வேண்டியதாயிற்று.

பங்குச் சந்தைகளில் நடந்த மோசடிகள் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின், கோடிக்கணக்கான பணத்தைச் சூறையாடின. சீன நாட்டின் ஜிடிபி 13%-லிருந்து கடந்த ஆண்டு 6.7% அளவுக்குச் சரிந்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு புதிய சொத்துகளை உருவாக்கும் துறையில் எழுச்சி ஏற்பட்டது. இதனால், அமெரிக்காவில் கடைசியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு முன்னதாக, கடுமையான புதிய நெருக்கடி தோன்றியிருக்கிறது.

புதிய தாராளமயக் கொள்கை இப்படி ஒழுங்கின்றிச் சீர்குலைந்ததற்கு சாதாரணமான அம்சங்கள் பல காரணமாக இருந்துவருகின்றன. அவற்றில் ஒன்று வங்கி நிர்வாகத்தின் கலாச்சார மாற்றம். பாரம்பரியமான வங்கி என்பது தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடனைக் கொடுத்து அசலையும் வட்டியையும் வசூலித்து நிர்வகிப்பது. இப்போது வங்கிகளின் கடனுக்கான வட்டி வெகுவாகக் குறைந்துவிட்டதால் சில்லறை வணிக வங்கிகள் முதலீடுகளில் இறங்கிவிட்டன. தங்களுடைய வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கும் பெறும் சேவைகளுக்கும் எப்படியெப்படியோ கணக்குப் போட்டு, கட்டணம் என்றும் சேவைக் கட்டணம் என்றும் வசூலித்துக் கொள்கின்றன. வங்கிகள் தாங்கள் வழங்கும் கடனைத் திரும்ப வசூலிக்க முடியாமல் போய்விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளும் சில ஏற்பாடுகள், வாராக் கடனில் கணிசமான பகுதியை வசூலித்துத்தரும் பொறுப்பை தனி முகமையிடம் ஒப்படைத்துவிடுவது போன்றவற்றால் வங்கிகளுக்குச் சில வேளைகளில் வழக்கத்தைவிட அதிக லாபம்கூடக் கிடைக்கிறது; ஆனால் வங்கிச் சேவை என்பது வலுவான கட்டமைப்பின் மீது அல்லாமல் மாறிலிகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துவிடுகிறது. இப்படிப் பட்ட பொருளாதார முறைமை ஆபத்தானது. எங்காவது கோளாறு ஏற்பட்டால் அதன் விளைவுகளை தொழிலாளர்களும் சாமான்ய மக்களும் மட்டுமே அனுபவிக்க நேர்கிறது. பணக்காரர்களும் விவரம் தெரிந்தவர்களும் சேதமில்லாமல் தப்ப முடிகிறது.

விலைவாசி உயர்வு மக்களுடைய வாங்கும் சக்தியைக் குறைப்பதுடன் வாழ்க்கைத் தரத்தையும் குலைத்துப் போடுகிறது. அடிப்படைத் தேவை களைக்கூடப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் மக்களில் பெரும்பாலா னவர்கள் அல்லல்பட நேர்கிறது. ஆக்ஸ்ஃபாம் 2016-ல் அளித்த அறிக்கையானது, உலக மக்கள் தொகையில் 50% பேர் வைத்திருக்கும் சொத்து மதிப்புக்கு இணையான சொத்து உலகின் 62 பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது என்கிறது.

சந்தை தீர்மானிக்கக் கூடாது

நாட்டின் பொருளாதாரக் கொள்கை யைச் சந்தை தீர்மானிக்கக் கூடாது. சந்தைப் பொரு ளாதாரம்தான் ஏற்றது என்ற சிகாகோ பொருளாதார அறிஞர்களின் வழியிலேயே இந்தியா தொடர்ந்து சென்றால் அதற்காகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும். ஏற்கெனவே உலகின் பெரிய நகரங்களில் தொழிற்சாலைகளும் வாகனங் களும் வெளியேற்றும் நச்சுக் காற்றால் இதயமும் நுரையீரலும் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் நோயில் வீழ்ந்து விட்டார்கள்.

இப்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சினைக்கு பல்வேறு நாடுகளும் சேர்ந்துதான் பரிகாரம் காண வேண்டும். வளம் குன்றாமல் இருப்பதற்கான தொழில் நுட்பத்தை ஏழை நாடுகள் கையாள, பணக்கார நாடுகள்தான் உதவ வேண்டும்.

அந்தந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம், உள்ளூர் சமூக பொருளா தார நிலை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாமல் புதிய தாராள மயக் கொள்கையை சகட்டு மேனிக்கு அமல்படுத்திவிட முடியாது. அதற்கு மாறாக மனிதர்களின் அடிப் படைத் தேவைகள் என்ன, அவற்றை எப்படிப் பூர்த்தி செய்வது என்று சிந்தித்துப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும். இப்படி மாற்றிச் சிந்தித்துச் செயல்படுவது மனித குலத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் நல்லது.

கோடிக்கணக்கான ஏழை களுடனும், மாசு நிறைந்த காற்று டனும், சீரழிந்த சுற்றுச் சூழலுடனும் நிம்மதியாக இனி வாழ முடியாது என்ற தெளிவு பெரும் பணக்காரர்களுக்குக்கூட இனி தோன்றும்.

(கட்டுரையாளர் பிரிட்டனின் யார்க் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர்)

© பிசினஸ் லைன்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x