Last Updated : 24 Mar, 2017 08:53 AM

 

Published : 24 Mar 2017 08:53 AM
Last Updated : 24 Mar 2017 08:53 AM

பாமக நிழல் வேளாண் அறிக்கையிலிருந்து தமிழக அரசு கற்க வேண்டிய பாடங்கள்!

தமிழக விவசாயிகளை எல்லா காலத்துக்கும் பாதுகாக்க பாமகவின் நிழல் வேளாண் அறிக்கை வழிகாட்டுகிறது

காத்திரமான அறிக்கைகள் மூலம் கவனம் ஈர்க்கும் தமிழக அரசியல் தலைவர்களில், முன்னணியில் இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். பிரச்சினைகளை மட்டும் சொல்வதோடு நில்லாமல், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் ராமதாஸ், ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை (முன்மாதிரி பட்ஜெட்) வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 2008 முதல், வேளாண்மைக்காக மட்டுமே தனி நிழல் நிதிநிலை அறிக்கையையும் பாமக வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வெளியிட்டிருக்கும், பத்தாவது நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் 56 தலைப்புகளில் 226 யோசனைகளை முன்வைக்கிறது. இதில் பல விஷயங்கள் தமிழக அரசு கவனிக்க வேண்டியவை. குறிப்பாக, வேளாண் துறை தொடர்பிலானவை தமிழக அரசின் உடனடி கவனிப்புக்கு உரியவை.

2017-18-ஐ உழவர்கள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்ற வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும், ‘வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட் களையும் இலவசமாக வழங்குதல், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கு தல், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதுடன், பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் அவர்களை விடுவித்தல்’ போன்ற யோசனைகள் அரசு உடனே பரிசீலிக்கத்தக்கவை. அதேபோல வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ. 25 ஆயிரம், கரும்புக்கு ரூ. 90 ஆயிரம், நிலக்கடலைக்கு ரூ. 25 ஆயிரம், சாகுபடி செய்ய முடியாமல் போன சிறுகுறு விவசாயிகளுக்கு ஒரே தொகையாக ரூ. 25 ஆயிரம் என்பதெல்லாம் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளை வறட்சிப் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கலாம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவற்றையும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களையும் ஹைட்ரோ கார்பன் அபாயங்களிலிருந்து மீட்பதற்காக அம்மாவட்டங்களைப் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிப்பது ஆகச்சிறந்த தீர்வு. தமிழகத்தில் நிலப் பயன்பாட்டுக் கொள்கையை உருவாக்கி, விவசாயத்துக்கான இடம், பிற தேவைகளுக்கான இடங்களை வகைப் படுத்துதல், மண்வள நிலை குறித்த முழு வரைபடத்தை உருவாக்கி, எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பயிர்களை அறிமுகப் படுத்துவது என்று தீர்மானித்தல் போன்ற அறிவிப்புகளும் அறிவுபூர்வமானவை.

வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.22,000 கோடியாக்குவது தமிழகத்தின் தற்போதைய நிதிநிலையைக் கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாகத் தெரியவில்லை. எனினும், எதிர்கால இலக்காக இதைத் தாராளமாகக் கொள்ளலாம். வேளாண் துறையை வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் சந்தைத் துறை, நீர்வள மேலாண்மை என்று நான்காகப் பிரித்து, தனித்தனி அமைச்சர்களையும், இயற்கை வேளாண் துறைக்கு தனிச் செயலரையும் நியமிப்பது என்ற யோசனையை அப்படியே ஏற்க முடியாவிட்டாலும், இரு துறையாகவேனும் பிரிக்கலாம். சீமைக்கருவேல மரங்களை அகற்றச் சிறப்புச் சட்டம், பனை மரங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம், பனை, தென்னையில் இருந்து கள் இறக்க அனுமதி போன்ற யோசனைகள் செயல் படுத்தப்பட்டால், விவசாயத்தில் மாபெரும் மலர்ச்சி ஏற்படும் என்பதோடு, பெரிய அளவில் மக்களிடத்திலும் இந்த அறிவிப்புகள் வரவேற்பைப் பெறும்.

நதிநீர் இணைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், தமிழக ஆறுகள் அனைத்திலும் 5 கி.மீ. இடைவெளிக்கு ஒரு தடுப்பணை கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்கும் நீட்டித்தல், கூட்டுறவு வங்கி களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயி களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நிறைய நல்ல யோசனைகள் இதில் உள்ளன.

கனவா.. நனவா?

ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர், அறுவடை இயந்திரத்தை இலவசமாக வழங்குவது, அதனை அப்பகுதி விவசாயிகள் வாடகையின்றிப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது, தூர்ந்துபோன, ஆக்கிரமிக்கப் பட்ட ஏரி, கண்மாய்களை மீட்டுப் பயன் பாட்டுக்குக் கொண்டுவருவது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான நீர்ப்பாசன வசதிகள் குறித்து அந்தந்த மாவட்ட விவசாயிகள் சங்கங்களுடன் கலந்தாலோ சிப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத் துவது, விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன், கோழி வளர்ப்பு, மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரித்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுவது என்று பட்டியல் நீள்கிறது.

விவசாயிகளையும் தாண்டி, மக்களின் நலனுக்கான சில நுட்பமான யோசனை களையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக, ஊட்டச்சத்துகள் நீக்கப்படுவதைத் தடுக்க, நவீன ஆலைகளில் அரிசி தீட்டப்படுவதை முறைப்படுத்துவது, கொழுப்புச் சத்து குறைந்த அதே நேரத்தில் புரதச்சத்து நிறைந்த இறைச்சியான முயல் கறியைப் பிரபலப்படுத்தி, ஆடு, மாட்டிறைச்சியின் பயன்பாட்டைக் குறைப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

எட்டு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண் பல்கலைக்கழகம், நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண் கல்லூரி அமைத்தல், மாவட்டம்தோறும் தோட்டக் கலைப் பயிர்களுக்கெனத் தனிச் சந்தை அமைத்தல், டெல்லி பெங்களூருவில் உள்ளதுபோல திருச்சியில் சஃபல் சந்தை தொடங்குதல், தஞ்சையில் நெல் தொழில்நுட்பப் பூங்கா, பொள்ளாச்சியில் தென்னை தொழில்நுட்பப் பூங்கா, சேலத்தில் பாக்கு தொழில்நுட்பப் பூங்கா, திருச்சியில் மாநில வாசனைப் பொருட்கள் வாரியம் அமைப்பது, வெளியூர் களுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற தோட்டக் கலைப் பொருட்களை அனுப்புவதற்கேற்ப குளிர்சாதன வசதி கொண்ட பெரிய சரக்கு லாரிகளைப் பயன்படுத்துதல் போன்ற அறிவிப்புகள் தொலைநோக்குத் தன்மை வாய்ந்தவை. இஸ்ரேலை முன்னுதாரணமாகக் கொண்டு சொல்லப்படும் ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு கிராமங்களில் கூட்டுறவுப் பண்ணையம் செயல்படுத்த வேண்டும்’ என்ற யோசனை பாமகவின் எல்லை கடந்த சிந்தனையைக் காட்டுகிறது.

இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கைகளை ஒருமுறையேனும் வாசித்துப் பார்த்திருப் பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இந்த அறிக்கை முழுக் கவனம் அளித்து வாசிக்கப்பட வேண்டியது. வறட்சிக் காலத்தில் மட்டும் அல்லாமல், எல்லாக் காலத்திலும் தமிழக விவசாயிகளைப் பஞ்சத்திலிருந்து பாதுகாக்க இந்த அறிக்கை வழிகாட்டுகிறது!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x