Published : 22 Mar 2017 09:16 AM
Last Updated : 22 Mar 2017 09:16 AM

கிரானைட் கொள்ளையும் சகாயம் அறிக்கையும்!

கிரானைட் என்று அழைக்கப்படும் கருங்கல்லை வெட்டியெடுத்து விற்பனை செய்த ஒப்பந்ததாரர்களும், அவர்களுக்குத் துணைபோன ஆட்சியாளர்களும், உடந்தையாக இருந்த மத்திய - மாநில அரசு அதிகாரிகளும் சேர்ந்து செய்த கூட்டுச் சதியால், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மதுரை மாவட்டத்தில் மட்டும் 1990-களில் தொடங்கி நடந்திருக்கும் கொள்ளையின் ஒரு பகுதி மட்டுமே.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, நீதிமன்ற ஆணையராகவும் சிறப்பு அதிகாரி யாகவும் நியமிக்கப்பட்ட மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் உ.சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரித்துத் தொகுத்த 600 பக்க அறிக்கை, இது தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. தன்னுடைய உயிருக்கே அச்சுறுத்தல் வந்தபோதும் கலங்காமல், மாநிலத்தின் அரிய கனிமவளம் கொள்ளையடிக்கப்படுவதை அங்குலம் அங்குலமாகக் கணக்கிட்டு, அனைவரையும் விழிப்படைய வைத்திருக்கிறார் சகாயம். இந்த அறிக்கையை அரசு இன்னமும் மக்கள் பார்வைக்கு வைக்காத நிலையிலும் ‘ஃபிரன்ட்லைன்’ பத்திரிகை, தனக்குக் கிடைத்த அறிக்கை நகலிலிருந்து சில உண்மைகளை வாசகர்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

வருவாய் இழப்பு ரூ.16,338 கோடி

அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற பகுதிகளிலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலும் கிரானைட்டைக் கொள்ளை அடித்திருப்பதுடன் புறம்போக்கு நிலம், நீர்நிலைகள், மக்களுடைய குடியிருப்பு, மக்கள் பயன்படுத்தும் சாலைகள், தொல்லியல் சின்னங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் நடந்த அராஜகங்களைக் கண்டு பதைபதைத்த சகாயம், தமிழ்நாடு தொழில்துறை முதன்மைச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். இது, அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது! வரிஏய்ப்பு காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.16,338 கோடி என்று தெரிவித்தார். மறைக்கப்பட்ட அந்த அறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்கள் வாயிலாகக் கசிந்தன. ஆட்சியர் சகாயம் மாற்றப்பட்டார்.

கிரானைட் ஊழலை விசாரிக்க (டிராஃபிக்) கே.ஆர்.ராமசாமி வழக்கு தொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல், நீதிபதி புஷ்பா நாராயணா அடங்கிய முதல் அமர்வு இந்த மனுவை ஏற்றது. கிரானைட் ஊழலை விசாரிக்க, நீதிமன்ற ஆணையராகவும் சிறப்பு அதிகாரியாகவும் சகாயத்தையே நியமித்தது.

அப்பாவிகள் நரபலி?

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையில் கனிம ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு விசுவாசமாகவே செயல் பட்டிருப்பதை அறிக்கையில் ஆவணப்படுத்தி யிருக்கிறார். ஏலம் எடுத்த இடத்தில் நிறைய கிரானைட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அப்பாவிகள் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலையும் பதிவுசெய்திருக்கிறார். அவருடைய அறிக்கை 600 பக்கங்கள், 66 அத்தியாயங்கள், 8 பிரிவுகளைக் கொண்டது. 2015 நவம்பரில் அரசிடம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இயற்கையில் கிடைக்கும் கனிமங்களைப் பாதுகாக்கவும் அரசின் தேவைகளுக்கு ஏற்ப நல்ல லாபத்துக்கு அகழ்ந்தெடுத்து விற்பதற்கும் ஏற்படுத்தப் பட்டதுதான் தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்). அது தன்னுடைய கடமையைச் செய்யத் தவறியதுடன், கனிமக் கொள்ளையர்களுக்குத் துணை போயிருக்கிறது என்று சொல்லி, டாமினின் இந்தப் போக்கைச் சிறப்பு விசாரணைக் குழு மூலம் தீவிரமாக விசாரிக்க வலியுறுத்தியிருக்கிறார் சகாயம்.

சிதைக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள்

கிரானைட் கற்களை அகழ்வதற்காக விவசாய நிலங்களைத் தோண்டிப்போட்டனர். குளம், குட்டை, ஏரி, நீர்வரத்து வாய்க்கால் போன்றவற்றை நாசமாக்கினர். அரிய கற்சிற்பங்களும் கல்வெட்டுகளும் நிரம்பிய தொல்லியல் சின்னங்கள் வெடிமருந்து வைத்துச் சிதற வைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டன. ஆலயங்களையும் உடைத்தனர். பல்லுயிரிகளின் வாழிடங்களை நாசப்படுத்தினர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தினர். வெடிவைத்துத் தகர்த்ததில் பலருடைய வீடுகள் சேதம் அடைந்தன. அவர்கள் இழப்பீடு கேட்டபோது தர மறுத்ததுடன் இனி குடியிருப்பதே ஆபத்து என்ற நிலையிலிருந்த வீடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சேர்த்துக்கொண்டனர். விவசாய நிலங்களையும் இப்படிக் கையகப்படுத்தினர் என்கிறது சகாயம் அறிக்கை.

திருவாதவூர், கீழத்தூர், கீழவளவு, அரிட்டிப் பட்டி, சமணர் குகைகள், கல் படுக்கைகள், தமிழ் பிராமிக் கல்வெட்டு எழுத்துகள் போன்றவை, தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ஏலதாரர்கள் காதில்போட்டுக்கொள்ள மறுத்ததால் நாசமாகி விட்டன. பாதுகாக்கப்பட்ட பகுதியான கீழவளவு கூட மிஞ்சவில்லை.

வில்லங்க வங்கிகள்

அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் வெட்டியெடுத்த கிரானைட்டை வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்தனர். துறைமுக அதிகாரிகள், சுங்க - கலால் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏற்றுமதியான கல்லின் அளவு, அவற்றின் பண மதிப்பு போன்றவற்றை எவரும் தெரிந்துகொள்ள முடியாதபடி மறைத்தனர். இதில் அனைத்து அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாகவே இருந்தனர். கனிம ஏலதாரர்கள் கணக்கு வைத்திருந்த வங்கிகளும் இப்படியே அவர்களுக்கு ஒத்துழைத்தன. ஒரேயொரு வங்கி மட்டும் ஒரு சில தகவல்களைத் தந்தது. ஏனைய வங்கிகள், இந்த வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் ஏதும் தங்களிடம் இல்லையென்று கையை விரித்துவிட்டன.

வெட்டி எடுக்கப்படும் கல்லின் அளவைக் குறைத்துக் காட்ட சில உத்திகளைக் கடைப் பிடித்தனர். ஒரே உரிமத்தைப் பலமுறை பயன் படுத்தியதுடன், லாரியின் ஒரே பதிவெண்ணை மீண்டும் மீண்டும் பதிவேட்டில் எழுதிக் கடத்தி யிருக்கிறார்கள். கல்லின் அளவு, விலைமதிப்பு, தரம் ஆகியவற்றை வெளிப்படையாகக் குறிப் பிடாமல் செயல்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் விற்ற கல்லுக்கான பணத்தை முழுதாக நாட்டுக்குக் கொண்டுவராமல், அங்கேயே அந்நியச் செலாவணியாக மாற்றி, அதையும் சட்டவிரோதமாகத் தங்களுடைய இருப்பில் வைத்துக்கொண்டனர். ஒரே முகவரியில் பல போலி நிறுவனங்களைப் பதிவுசெய்தனர். இவை பின்னிப் பிணைந்து செயல்பட்டுள்ளன.

அலைக்கழித்த அரசுத் துறைகள்

அவற்றுக்காகத் தற்காலிக வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டன. ஒரு நிறுவனத்துக்கு வருமானம் வந்து, அதன் வங்கிக் கணக்கில் ஏறிய பிறகு, நிறுவனமும் வங்கிக் கணக்கும் மூடப்பட்டு, தடயம் இல்லாமல் மறைக்கப்பட்டது. சென்னை, தூத்துக்குடி, மங்களூரு, கொச்சி துறைமுக அதிகாரிகள் கலால் சுங்கத் துறை அதிகாரிகள், மாவட்டத்தின் வருவாய்த் துறை, காவல் துறை, கனிமவளத் துறை அதிகாரிகள் ஒத்துழைத்துள்ளனர். அரசியல்வாதிகளின் ஆதரவும் பெருமளவுக்கு இருந்திருக்கிறது. பல அரசியல்வாதிகள் பினாமிகள் மூலம் இக்கொள்ளையில் இறங்கி யிருக்கின்றனர்.

விசாரணை ஆணையத்துக்குத் தந்த தகவல்கள் 2012-ம் ஆண்டுக்கானவை. ஆணையம் பலமுறை கேட்டும்கூடப் பிற ஆண்டுகளுக்கான தகவல்கள் அரசுத் துறைகளால் தரப்படவில்லை.

சுங்கம், கலால் துறை ஆவணங்களில் பதிவான அளவுக்கும் கப்பலில் உண்மையாக ஏற்றப்பட்ட கல்லின் அளவுக்கும் உள்ள வேறுபாடு 7,83,658.02 கன மீட்டர்கள். அதன் மதிப்பு ரூ.38.78 கோடி. சுங்கம், கலால் தீர்வைகளைச் செலுத்தாமல் ஏய்ப்பதற்காக 7.83 லட்சம் கன மீட்டர் அளவு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கல்லின் விற்பனை தொடர்பான இன்வாய்ஸ் மதிப்பும், சரக்குக்கான கட்டண மதிப்பும் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

அன்சுல் மிஸ்ராவின் பரிந்துரை

ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான துரை தயாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.கே.அழகிரியின் மகன், திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரன். துரை தயாநிதியின் நிறுவனம் தொடர்பான தகவல்களை வங்கிகளிடமிருந்தும் மாவட்ட நிலை அதிகாரிகளிடமிருந்தும் பெற முடியவில்லை. மதுரையில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி, தயாநிதி என்ற தங்களின் வாடிக்கையாளர்தான் அந்நிறுவனத்தின் இயக்குநர் என்றாலும் அவரைப் பற்றிய தகவல் ஏதும் தங்களிடம் இல்லை என்று எழுத்துபூர்வமாகவே தெரிவித்துவிட்டது.

இந்த விவகாரம் அம்பலமான பிறகு, அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் சில கனிமச் சுரங்க உரிமையாளர்களுடைய ரூ.528 கோடி மதிப்புள்ள சொத்துகளைத் தற்காலிகமாகக் கையகப்படுத்தியது.

மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயத்துக்குப் பிறகு பதவியேற்ற அன்சுல் மிஸ்ரா, 77 கிரானைட் நிறுவனங்களின் சுரங்க நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தார். அரசும் அதை ஏற்றது. செயல்படாத 48 சுரங்கங்களின் உரிமங்களையும் ரத்துசெய்யப் பரிந்துரைத்தார். அதன் பேரில் 39 உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டன. இந்நடவடிக் கைக்கு எதிராக சுரங்க உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. கனிமம் எடுக்க உரிமம் பெற்ற 36 நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனி சிறப்பு விசாரணை கோரும் மனுக்களைத் தாக்கல் செய்தன. அவையும் தள்ளுபடியாயின. ஒவ்வொரு சுரங்கத்தாலும் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, 2 மாதங்களுக்குள் வசூலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2015 செப்டம்பரில் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இன்னமும் மதுரை மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்து முடிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தியதோடு சரி.

அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை

மதுரை ஊரக மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்த வி. பாலகிருஷ்ணன், தவறு செய்த சுரங்க நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தார். 98 முதல் தகவல் அறிக்கைகள் 2012-13 காலத்தில் பதிவுசெய்யப்பட்டன. சுரங்க முறைகேடு மட்டுமல்லாமல், அரசின் தரிசு நிலங்களைச் சேதப்படுத்தியோர் மீதும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்ட ஆணையர் பெற்ற மனுக்கள் அடிப்படையில், 44 குற்றவியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநரகம் 34 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது. மதுரை மாவட்டத்தின் இரண்டு முன்னாள் ஆட்சியர்கள், புவியியல் சுரங்கத் துறை துணை இயக்குநர், மற்றும் சிலர் மீது ஊழல் தடைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டன. பிறகு, மாவட்ட ஆட்சியரும் காவல் துறைக் கண்காணிப்பாளரும் இடம் மாற்றப்பட்டனர். பத்திரிகைகளில் செய்தி வந்தவுடன் வேகமாகச் செயல்பட்ட அரசு, அதன் பிறகு மந்த கதியில் செயல்பட்டது. விசாரணைகள் உண்மையான அக்கறையுடன் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் தானாகவே மடிந்துபோக விடப்பட்டது.

1998-ல் கனிம அகழ்வுக்கான ஆயத்த வேலைகளைச் செய்ய முகமை உரிமம் பெற்றவர்கள், இப்போதும் கனிம அகழ்வு முகமையாளர்களாகச் செயல்படும் விந்தை தொடர்கிறது. கிரானைட்டுக்கான தேவை சந்தையில் அதிகமாக இருக்கிறது. அதில் தனியார் நிறுவனங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கிறது. அரசுக்கு எந்த ஏலக் கட்டணமும் செலுத்தாமலேயே புறம்போக்கு நிலத்திலிருந்து கிரானைட்டுகளை வெட்டியெடுத்து விற்கின்றனர். ராயல்டி, முத்திரைத் தாள் கட்டணம்கூடச் செலுத்தப்படுவதில்லை.

“இந்தப் புவி, காற்று, நிலம், நீர் யாவும் நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து அல்ல, நாம் நம்முடைய குழந்தைகளுக்குப் பாதுகாத்துத் திருப்பி அளிக்க வேண்டிய கடன். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலாவது அதை நாம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அறிக்கையின் இறுதியில் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டுகிறார் சிறப்பு அதிகாரி சகாயம்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

© ‘ஃபிரன்ட் லைன்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x