Last Updated : 21 Jan, 2014 08:57 AM

 

Published : 21 Jan 2014 08:57 AM
Last Updated : 21 Jan 2014 08:57 AM

வரலாற்று வேட்டைக்காரர்!

வ.உ.சி. கடிதங்கள், பாரதியின் கட்டுரைகள், புதுமைப்பித்தன் கதைகள், பெரியார் உரைகள், குஜிலி பாடல்கள்… எதுவானாலும் சரி, ஆ.இரா.வேங்கடாசலபதியைப் பொறுத்தவரை அது வரலாறு.

காலனிய, பின்காலனிய தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் சமகால முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான சலபதி, நாலாபுறமும் சிதறிக்கிடந்த வ.உ.சிதம்பரனாரின் 43 கடிதங்களைத் தொகுத்து, தன்னுடைய ‘வ.உ.சி. கடிதங்கள்’ - முதல் நூலைக் கொண்டுவந்தபோது அவருக்கு வயது 17. ஆச்சரியம் இதுவல்ல; அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய ஆய்வுப் பணிகளை சலபதி தொடங்கியிருந்தார் என்பதுதான்.

“நான் பிறந்தது குடியாத்தம்னாலும் சின்னக் குழந்தையா இருக்கும்போதே சென்னைக்கு எங்க குடும்பம் வந்துடுச்சு. வீட்டுல அம்மா - அப்பா நல்ல சுதந்திரம் கொடுத்தாங்க. இன்னைக்கு நெனைச்சா ஆச்சரியமா இருக்கு. பன்னண்டு பதிமூணு வயசுல எல்லாம் பஸ்ஸுக்கு மட்டும்தான் காசு இருக்கும்; நான் பாட்டுக்குக் கிளம்பிடுவேன்.

அந்தக் காலகட்டத்துல ‘முகம்’ மாமணி மாதா மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகள்ல இலக்கியக் கூட்டங்கள் நடத்திக்கிட்டிருந்தார். இன்னைக்கும் ஞாபகம் இருக்கு. பாரதிதாசன் பத்தி கோவேந்தன் பேசினதும், புதுமைப்பித்தன் பத்தி ரகுநாதன் பேசினதும். எனக்குள்ளே பல ஆளுமைகள் முழுமையா வந்து உட்கார்ந்தது அந்தக் கூட்டங்கள் மூலமாதான். இப்படியான கூட்டங்கள், மதுரை உலகத் தமிழ் மாநாடு, பாரதி நூற்றாண்டு விழான்னு எல்லாமுமா சேர்ந்து தமிழ் மேல ஆர்வம் உண்டாச்சு. காலப்போக்குல என்னோட வாசிப்பு, வரலாற்று மேலான ஆர்வத்தை உருவாக்குச்சு. என்னவோ தெரியலை… சின்ன வயசுலேர்ந்தே வ.உ.சி. மேல ஒரு தனிப் பிரியம். என்னடா, இப்படி ஒரு தியாக வாழ்க்கையான்னு!

இப்படிக் கூட்டங்கள், நூலகங்கள், வாசிப்புனு ஓடிக்கிட்டு இருந்தப்போதான் 1982-ல் ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி கடிதங்கள்’ புத்தகம் வந்துச்சு. பாரதியோட 21 கடிதங்களை உள்ளடக்கின புத்தகம் அது. அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்போ எங்கேயோ இருநூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்த ஷெல்லியும் கீட்ஸும் எழுதின கடிதங்கள் நூற்றுக் கணக்கில் இங்கே பார்க்கக் கிடைக்கும்போது, இந்த நூற்றாண்டில் மறைந்த ஆளுமைகளின் எழுத்துகள் கூட இங்கு தொகுக்கப்படலையேங்கிற ஆதங்கம் ஏற்பட்டுச்சு. அந்த ஆதங்கம் நாம ஏன் இதைச் செய்யக் கூடாதுங்குற எண்ணத்தை உருவாக்க, நான் வ.உ.சி-யைத் தேட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு நூலகமா போய் வ.உ.சி. சம்பந்தப்பட்ட பதிவுகளுக்காகப் பழைய புத்தகங்களைத் தேடுவேன். மயிலைநாதன், நாரண துரைக்கண்ணன், லட்சுமிரதன் பாரதின்னு அன்னைக்கு என் வயசுக்கு முன்னாடி ரொம்ப உயரத்துல இருந்த பெரியவங்களை எல்லாம் போய்ப் பார்ப்பேன். பழைய புத்தகச் சேகரிப்பாளர்கள் எங்கெல்லாம் இருந்தாங்களோ அங்கெல்லாம் தேடி அலைஞ்சிருக்கேன். அந்தத் தேடலோட தொடர்ச்சியா சேர்ந்துக்கிட்டதுதான் பாரதி, புதுமைப்பித்தன் எல்லாமே.

புதுமைப்பித்தனோட முதல் படைப்பான ‘குலோப் ஜான்’ கட்டுரையை எங்கே இருந்து கண்டுபிடிச்சேன்னு நெனைக்கிறீங்க, மயிலைநாதன் பார்க்கக் கொடுத்த ‘காந்தி’ பத்திரிகையிலேர்ந்துதான். ‘காந்தி’ பத்திரிகை வ.உ.சி-யோட நண்பர் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்தினது. நான் வ.உ.சி. சம்பந்தமான பதிவுக்காக அதை வாங்கினப்போ கூடவே புதுமைப்பித்தன் கண்ணுல பட்டார். அன்னைக்கெல்லாம், பின்னாடி நாம புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுப் போம், இதெல்லாம் அச்சேறும்னு கற்பனையிலகூட நெனைச்சது இல்லை. ஆனா, முக்கியம்னு மனசுல பட்டுச்சு. பிரதி எடுத்தேன். பிரதி எடுத்தேன்னா, கையால அவ்வளவையும் உட்கார்ந்து எழுதிக்கிட்டேன். ஒரு ஜெராக்ஸ் காபி ஒரு ரூபாய் அப்போ. படிக்குற நம்ம கையில எங்கே அதுக்கு வழி? அப்போலாம் எல்லாமே கையால பிரதி எடுக்குறதுதான். யாரும் கத்துக்கொடுக்கலைன்னாலும், என்ன காலத்துல அது வெளியானுச்சு, அப்புறம் என்ன பேர்ல வெளியானுச்சுங்குற விவரம் எல்லாம் அப்போவே பார்த்துக்குவேன். ரஷ்ய புத்தகங்களைப் படிக்கும்போது கத்துக்கிட்டது இது. ‘முன்னேற்றப் பதிப்பகம்’ வெளியிட்ட லெனினோட நூல்கள்ல கட்டுரைக்குக் கீழே எப்போ எழுதினார், என்ன பேர்ல எழுதினார்ங்குற விவரங்கள் போட்டிருக்கும். அப்படிப் போட்டுருக்குன்னா என்ன அர்த்தம்? அது முக்கியம்னு அர்த்தம், இல்லையா? இப்படித்தான் கத்துக்கிட்டேன்.

பள்ளிப் படிப்பை முடிக்கும்போதே முடிவு செஞ்சுட்டேன் எழுத்துதான் எதிர்காலம்னு. ஆனா, இங்கே எழுத்தை மட்டுமே பிழைப்பா வெச்சுக்கிட்டா என்னாகும்னு என் முன்னோடிகளோட வாழ்க்கை மூலமா உணர்ந்திருந்தேன். அதனால, வங்கி வேலைக்குப் போயிடணும்; ஓய்வுநேரம் எல்லாம் எழுத்துக்குச் செலவழிக்கணும்னு முடிவெடுத்து, வணிகவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். எப்படியோ இன்னைக்கு ஆய்வுசார்ந்த வேலைக்கே வந்துட்டது தனிக்கதை. அன்னைக்கெல்லாம் உதவிகளை வெச்சுதான் ஓடுனுச்சு ஆய்வு. ம.இலெ.தங்கப்பா, ஆ.சிவசுப்பிரமணியன், சுந்தர ராமசாமி, பழ.அதியமான்னு தமிழ்நாட்டுல அறிவுத் துறையில இருக்குற எல்லோருமே எனக்கு உதவியிருக்காங்க. இந்த உதவிகள்லாம் இல்லைனா என்னோட பணிகள் எதுவுமே சாத்தியமில்லைனுதான் சொல்வேன். ஏன்னா, இங்கே ஆய்வுப் பணிங்கிறது அவ்வளவு சள்ளை பிடிச்ச வேலை.

ஒரு உதாரணம் சொல்றேன்… புதுமைப்பித்தன் 1943-ல், ‘நானும் என் கதைகளும்’னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதுல ‘கோபாலபுரம்’கதைப் பின்னணிபத்தி அவர் சொல்றார். அதாவது, அவர் வேலை பார்த்த பத்திரிகைல நிர்வாகி கொஞ்சம் கஞ்சனாம். ஏதோ ஒரு தேவைக்காக பிளாக் ஒண்ணு செஞ்சிருக்காங்க; அதைப் பயன்படுத்த முடியலை. பிளாக் வீணாகக்கூடாதுனு சொல்லி, ‘இதுக்குப் பொருத்தமா ஒரு கதை எழுது’னு சொல்லியிருக்கார் புதுமைப்பித்தன்கிட்ட.

நான் புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுத்தப்போ அந்த பிளாக்கை வெச்சு போட்ட படம் வேணும்னு நெனைச்சேன். அங்கே தேடி, இங்கே தேடி மயிலாடுதுறைக்குப் பக்கத்துல திருச்சிற்றம்பலம்கிற சின்ன ஊர்ல மு.அருணாச்சலத்தோட நூலகத்துல அதைக் கண்டுபிடிச்சேன். ஆனா, அதை ஜெராக்ஸ் எடுக்கப்போனா அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைங் கிறதால அங்கே கடை இல்லை. திரும்பிட்டேன். சொன்னா நம்ப மாட்டீங்க, என்னோட நண்பர் மதிவாணன் தஞ்சாவூர்லேர்ந்து கார் எடுத்துக்கிட்டுப் போய் அந்த ஒரு படத்தை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி னார். இப்படியான உதவிகள்தான் இந்த மாதிரியான காரியங்களுக்கான அடிப்படைன்னு நம்புறேன்.

தமிழ்ல இன்னைக்கு எதாவது செய்யணும்கிற நோக்கத்துல செயல்படுறவங்க எல்லோரையும் எந்த எண்ணம் வழிநடத்துதோ, அதே எண்ணம்தான் என்னையும் வழிநடத்துது - நம்மளோட போதாமை. பிரிட்டிஷ் நூலகம், லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், பிரெஞ்சு தேசிய நூலகம், டேனிஷ் தேசிய நூலகம்னு ஆவணப்படுத்துறதுக்குப் பேர்போன எல்லாப் பெரிய நூலகங்களுக்கும் போய்ட்டு வந்துட்டேன். ஒரு விஷயம்தான் புரியுது. நமக்கு வரலாற்று மேல இருக்குற அலட்சியம்.

இவ்வளவு பேசுறோம். வெளியாகுற எல்லா நூலையும் சேகரிச்சு வைக்கிற ஒரு அமைப்புகூட இன்னும் இங்கே உருவாக்கப்படலையே? இந்த விஷயத்துல அரசாங்கத்தைவிடவும் பல்கலைக் கழகங்கள் மேலதான் எனக்குக் கோபம் அதிகம் வருது. அரசாங்கத்துக்கு ஆயிரம் வேலை இருக்கலாம்; பல்கலைக்கழகங்களுக்கு என்ன வேலை? கல்வி ஒண்ணுதானே ஒரே வேலை? இன்னைக்கு நம்ம பல்கலைக்கழக நூலகங்களைப் போய்ப் பாருங்க. எவ்வளவு நாசமாகிக் கிடக்குன்னு தெரியும். பல பல்கலைக்கழகங்கள் புத்தகங்களை ஒப்பந்தப்புள்ளி மூலமா வாங்குறாங்க, ஏதோ கல்லு மண்ணை வாங்குற மாதிரி. எதை நோக்கிப் போறோம்னு தெரியலை.

ஒரு புத்தகம்கிறது மனித வாழ்வோட சாராம்சத்தைப் படைப்பூக்கத்தோடு வெளிப்படுத்துற ஆவணம்; அடுத்து வர்ற தலைமுறைக்குக் கையளிக்க வேண்டிய ஆவணம். அது நாவலோ, கவிதையோ, கட்டுரையோ எதுவானாலும் ஆவணம்தான். ஒரு புத்தகம் அதுல நேரடியா சொல்லப்பட்டிருக்குற விஷயங்களை மட்டும் சொல்லலை; ஆளுமைகளை, அவங்களோட மேதைமையை, காலத்தையும் சொல்லுது. நாம கடந்து வந்த வரலாற்றையும் அதுல கத்துக்க வேண்டிய பாடத்தையும் சொல்லுது. நிறையத் தேடுறோம், கிடைக்குது; படிக்கிறோம். ஆனா, என்ன கத்துக்கிறோம்கிறது மட்டும் தெரியலை!”

சமஸ் - தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x