Last Updated : 21 Jul, 2016 09:09 AM

 

Published : 21 Jul 2016 09:09 AM
Last Updated : 21 Jul 2016 09:09 AM

வன்முறைக்குத் தீர்வு சொல்லும் திரிபுரா!

பல்வேறு காரணங்களின் பின்னணியில், அரசுக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள் இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து நடந்துவருகின்றன. சில மாநிலங்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் நடத்தும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அரசின் வளர்ச்சித் திட்டங்களையும் முடக்கிவிடுகின்றன. பொதுவாகவே, இப்படியான சூழலில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, கருப்புச்சட்டமான ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ராணுவ, துணை ராணுவப் படைகள் பயன்படுத்துகின்றன. ராணுவ, துணை ராணுவப் படைகள் பயன்படுத்தப்படுகிற இத்தகைய இடங்களில் மாநிலக் காவல் துறையைப் பயன்படுத்தியும் அமைதிச்சூழலைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா.

இந்திய வரைபடத்தின் கிழக்கு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிகச் சிறிய நிலப்பகுதி திரிபுரா. எல்லையில் வங்கதேசம், அசாம், மிசோரம் என்று சுற்றிலும் நிலத்தால் மட்டுமே சூழப்பட்ட மாநிலம் இது. 16-17-ம் நூற்றாண்டுகளில் அப்போது ஆட்சி செய்துவந்த மாணிக்யா அரச பரம்பரையின் ஆதிக்கத்தில் இன்றைய வங்கதேசத்தின் சில்ஹெட், கொமில்லா பகுதிகள், அசாம் மாநிலத்தின் கச்சார் மலைப்பகுதி, அன்றைய பர்மாவின் அரக்கான் மலைப்பகுதி மற்றும் சிட்டகாங் மலைப்பகுதிகள் என விரிந்து பரந்த ஒன்றாக இப்பகுதி இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இதன் நில எல்லைகள் சுருங்கின.

குடியேற்றமும் வன்முறையும்

19 வகையான பழங்குடி இனப் பிரிவினர் வசிக்கும் இம்மாநிலத்தில் 1901-ல் 52.89% ஆக இருந்த பழங்குடி மக்களின் எண்ணிக்கை 2011-ல் 31.8% ஆகக் குறைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் அசாமிலும் திரிபுரா விலும் வங்காளிகளின் குடியேற்றம் தொடங்கியது. படிப்படியாக இப்பகுதிகளில் ஆட்சி, கல்வி என முக்கிய துறைகளில் வங்காளிகளின் ஆதிக்கமே தொடர்ந்தது. இதன் ஒரு விளைவாகவே அசாம் மாணவர்கள் இயக்கம் 1970-களில் தலைதூக்கியது.

வங்கதேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தின்போது பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து வெளியேறியவர்களுக்காக, திரிபுரா எல்லையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் இருந்தவர்களின் எண்ணிக்கை, அன்றைய தேதிக்குத் திரிபுரா மாநில மக்கள்தொகையைப் போல 110%ஆக இருந்தது. எனினும் வங்கதேசம் உருவான பிறகு இவர்களில் பெரும்பாலானோர் திரும்பிச் சென்றுவிட்டனர். இன்றும் கூட மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும்

‘ப்ரு' பழங்குடி இன மக்களுக்கான அகதிகள் முகாம் திரிபுராவில்தான் செயல்பட்டுவருகிறது.

இதுபோன்ற குடியேற்றங்கள் திரிபுரா பழங்குடி மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டன. தங்கள் பாரம்பரிய நிலங்களை இழந்து நிலமற்ற விவசாயக் கூலிகளாகப் பழங்குடிகள் மாறினர். இன ரீதியான பிரிவினை இயக்கங்கள் உருவாகத் தொடங்கின. காலப்போக்கில் அவை தீவிரவாத இயக்கங்களாக மாறின. 1967-ல் மிசோரம் எல்லைப் பகுதியில் வங்காளிகளுக்கு எதிராக உருவெடுத்த செங்ராக் அமைப்பு, 1978-ல் உருவான திரிபுரா தேசிய முன்னணியாளர் படை (டி.என்.வி.), திரிபுரா தேசிய விடுதலைப் படை (என்.எல்.எஃப்.டி), அகில திரிபுரா புலிகள் படை (ஏ.டி.டி.எஃப்) என 2000-க்குள் இம்மாநிலத்தில் 28 கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டுவந்தன. பழங்குடி அமைப்புகள் மீது மட்டுமின்றி அப்பாவிப் பழங்குடிகள் மீதும் தாக்குதல் தொடுத்து வந்த வங்காளப் புலிகள் படை (பி.டி.எஃப்.), ஐக்கிய வங்காளிகள் விடுதலைப் படை (யு.பி.எல்.எஃப்.) ஆகியவையும் இதில் அடங்கும்.

விலகி நின்ற ராணுவம்

1980-களில் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனது. 1980 ஜூன் 8-ல் தலைநகர் அகர்தலாவுக்கு அருகில் உள்ள மாண்டாய் கிராமத்தில் நடந்த படுகொலைச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வங்காளிகள் குடும்பம் குடும்பமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பழிதீர்க்கும் வகையில் வங்காளி அமைப்புகள் வன்முறையில் இறங்கின. 1998-ல் இடது முன்னணி அரசின் முதல்வராக மாணிக் சர்க்கார் முதல்முறையாகப் பதவியேற்றபோது நிலைமை படுமோசமாக இருந்தது. ஆயுதம் தாங்கிய குழுக்களை ராணுவ-துணை ராணுவப் படைகள்தான் கட்டுப்படுத்திவந்தன.

1999-ல் கார்கில் போர் வெடித்தபோது ராணுவப் படைகள், எல்லைப் பாதுகாப்புப் படைகளில் பெரும்பகுதி திரிபுராவிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு, போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்குத் திரிபுரா அரசு தெரிவித்த ஆட்சேபனை கண்டு கொள்ளப்படவில்லை. விளைவு, திரிபுராவின் திசையெங்கும் வன்முறை தாண்டவமாடத் தொடங்கியது. துணை ராணுவப் படைகளின் ஒருபகுதி களத்தில் இருந்தபோதும், நிர்வாக, நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து விலகியே நின்றது. இதனால், தீவிரவாதிகளை எதிர்கொள்ள வேண்டிய பெரும் சுமை, மாநிலக் காவல் துறையின் தோள்களில் விழுந்தது.

காவல் ‘துணை’

சவாலை எதிர்கொள்ளத் தயாரானது திரிபுரா அரசு. நவீன ஆயுதங்களைக் கொண்ட காவல் படைகளைக் களத்தில் இறக்குவது, கூடுதல் வாகனங்களை வழங்குவது, குண்டு துளைக்காத வாகனங்கள், பாதுகாப்புக் கருவிகளைக் குறைந்த செலவில் உள்ளூரிலேயே தயாரிப்பது போன்ற நடவடிக்கையில் இறங்கியது அரசு. அத்துடன், சிறப்புப் படைப் பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையில் பழங்குடி இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டது புதிய திறப்பாக அமைந்தது. ஆயுதம், சீருடை, சிறப்புப் பயிற்சி போன்றவற்றை வழங்கியதன் மூலம் பழங்குடி மக்களிடையே அரசு பற்றிய கருத்து மாறத் தொடங்கியது. தீவிரவாதிகளுக்கு அதுவரை கிடைத்து வந்த இளைஞர்களின் ஆதரவும் குறையத் தொடங்கியது.

தீவிரவாதிகள் அதுவரை முகாம் அமைத்து, பயிற்சி எடுத்துவந்த மலைப் பகுதிகள், காடுகளைச் சிறப்புப் படை முகாம்கள் கைப்பற்றின. தப்பிச் செல்லும் தீவிரவாதிகள் மக்களோடு மக்களாய் கலந்துவிடுவதைத் தடுக்க, மக்கள் வசிப்பிடங்களில் பாதுகாப்புப் படைகள், காவல் நிலையங்கள் நிலைபெறத் தொடங்கின. அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் தடுத்துவந்த தீவிரவாதக் குழுக்கள் படிப்படியாக ஒடுக்கப்பட்டுவந்ததால், மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றிச் செயல்படுத்த முடிந்தது. கல்வி, மருத்துவ வசதி, வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வளர்ச்சிப் பணிகளில் சுயாட்சி அமைப்புகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

மாநிலக் காவல் துறையும் தனது சிறப்புப் படைகளுக்கான பயிற்சியைச் செழுமைப்படுத்தியது. மிசோரத்தில் ராணுவம் நடத்திவரும் வனப்பகுதி யுத்தங்களுக்கான பயிற்சிப் பள்ளியில் திரிபுரா காவல் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்றைக்குத் திரிபுராவிலேயே இதுபோன்ற காவல் பயிற்சிப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. தீவிரவாதக் குழுக்களிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து இடங்களிலும் அரசின், சுயாட்சி கவுன்சிலின் செயல்பாடுகள் எவ்விதத் தடையுமின்றிச் செயல்படத் தொடங்கின. எல்லைப்புறப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தரமான சாலைகள் போடப்பட்டு, தடையில்லாப் போக்குவரத்து உறுதிசெய்யப்பட்டது.

முடிவுக்கு வரும் வன்முறை

2007-ல் காவல் துறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், காவல் துறைத் தலைவர் முதல், காவல் நிலைய அலுவலர் வரை குறிப்பிட்ட காலத்துக்குப் பணியில் நீடிப்பது உறுதிசெய்யப்பட்டது. காவல் துறையின் செயல்பாட்டைப் பரிசீலிப்பது, மதிப்பிடுவது, காவலர்களின் புகார்களை விசாரிப்பது போன்றவற்றுக்கென ‘மாநிலக் காவல் ஆணையம்’ ஒன்றை நிறுவவும் இச்சட்டம் வழிவகுத்தது. காவல் துறை மீதான மக்களின் புகார்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் ‘காவல் துறைக்கான பொறுப்புக் கமிஷன்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் காரணமாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிரவாதிகள், வேறு வழியின்றி சரணடைய வேண்டிய நிலை உருவானது. சரணடைந்தவர்களின் மறுவாழ்வும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. காவல் துறையைப் பயன்படுத்தி வன்முறைக்கு முடிவுகட்டியதுடன், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கும் திரிபுரா, இவ்விஷயத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது!

- வீ.பா.கணேசன், எழுத்தாளர்.

தொடர்புக்கு : vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x