Last Updated : 22 Oct, 2013 10:05 AM

 

Published : 22 Oct 2013 10:05 AM
Last Updated : 22 Oct 2013 10:05 AM

என் இனிய தமிழ் எழுத்தாளர்களே...

கடந்த 20 ஆண்டுகளில் நம் சமூகம் அடைந்த வளர்ச்சி, பெற்ற முன்னேற்றங்கள், மாற்றங்கள் அளப்பரியது. மனமாற்றம், சிந்தனை மாற்றம் என்பது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மாறியிருக்கிறது. உணவில், உடையில், தனிமனித, குடும்ப, சமூக வாழ்வில் பெரிய மாற்றங்கள். நேற்றைய ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் இன்று கேலிக்குரியவையாக மாறியிருக்கின்றன. நம்முடைய புனிதங்கள் இன்று தெருச்சாணியாகக் கிடக்கின்றன.

தொழில்நுட்பமே வாழ்க்கை. மனிதனுக்காகத் தொழில்நுட்பம் என்பதற்குப் பதிலாக, தொழில்நுட்பத்துக்காக மனிதன் என்றாகிவிட்டது. இன்று ஒரு மனிதனால் கைபேசி இல்லாமல் ஒரு நாள் வாழ முடியுமா? ஹலோ என்ற சொல்லை உச்சரிக்காத மனிதர்கள் நாட்டில் இருப்பார்களா? கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியைப் பார்க்காமல் ஒரு மனிதனால் ஒருநாள் பொழுதைக் கழிக்க முடியுமா? சாத்தியமில்லை. கணினி இல்லாமல், இணையம் இல்லாமல், மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பாமல் இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி மனித உடலின் உறுப்புகளாக மாறின?

நகரம் முதல் கிராமம் வரை கிழவிகள் முதல் குழந்தைகள் - வரை நைட்டிதான் பொது உடை. எங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள். மண்ணில் கால் பதிக்காத குழந்தைகள். தங்க நாற்கர சாலை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்தான் எவ்வளவு மாற்றங்கள்? பாவம்! குலதெய்வங்கள், சினிமா நடிகர் - நடிகைகளின் பெயர்களுக்கு முன்னால் அடிபட்டுப்போய்விட்டன. தெருவில் விளையாட வேண்டிய குழந்தைகள் கணினியில் விளையாடுகின்றன. கிரஷ்கள் மட்டுமல்ல; முதியோர் இல்லங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கின்றன. வாடகைத்தாய் - வாடகைக் கர்ப்பப்பைகளின் வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. பொருள்களை வாங்கி மடியில் கட்டிக்கொள்வது எத்தனை ஆண்டு காலப் பழக்கம்? இன்று பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் வாங்குவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. ஒரே ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினாலும் பாலிதீன் பையில் போட்டுத்தான் வாங்குகிறோம்.

இன்று பேசும் மொழி, ஊடக - சினிமா மொழியாக இருக்கிறது. உடை, சினிமா நடிகர் - நடிகைகளின் உடையாக இருக்கிறது.பெரும் கலாச்சார விழாவாக நாம் கொண்டா டும் பொங்கல், தீபாவளியைக்கூட இன்று தொலைக்காட்சியைப் பார்த்த படிதான் கொண்டாடுகிறோம். கோயில் கும்பாபிஷேகம் மாதிரி மாறியிருக்கின்றன திருமணங்கள். பிறந்த நாள், கல்யாண நாள் கொண்டாடாதவர்களின் எண் ணிக்கை மிகவும் சொற்பம். பிறந்த நாளுக்கு, கல்யாண நாளுக்கு வெளியில் அழைத்துச் செல்லாததால், புதுத் துணி எடுத்துத்தராததால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை பெருகியபடியே இருக்கிறது.

24 மணி நேர செய்திச் சேனல்கள் வந்துவிட்டன. நகைச்சுவைச் சேனல்க ளுக்கும் பஞ்சமில்லை. ரியல் எஸ்டேட் தொழில் இன்று அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆயிரக் கணக்கான ஏரி, குளங்கள் குப்பைகளாக மண்ணில் புதையுண்டுபோயிருக்கின்றன. இன்று ஒரு லிட்டர் தண்ணீர் 15 ரூபாய். கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. கருங்கல், செங்கல், மணல் மாதிரி எல்.கே.ஜி. ஒரு லோடு, பிரி.கே.ஜி. ஒரு லோடு என்ற கணக்கில் கொண்டுவந்து குழந்தைகளைக் கொட்டுகிறார்கள். ஜனநாயக விரோதச் செயலை, அடக்குமுறையைப் பள்ளியின் பெருமையாகப் பேசும் பெற்றோர்கள். இன்று தமிழகத்தில் இருக்கிற ஐ.டி. நிறுவனங்களின் முதலாளிகள் யார், எந்த நாட்டைச் சார்ந்தவர் என்று அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிக்குத் தெரியுமா? சந்தேகம்தான். 1970-80 காலம் வரைகூட முதலாளி என்பவர் தொழிலாளியின் வீட்டு வைபவங்களில் பங்கேற்கக்கூடிய நபராக இருந்திருக்கிறார்.

சமூகம் பெற்றிருக்கும் வளர்ச்சி நல்லதா… கெட்டதா? நவீன தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நல்லதா… கெட்டதா? தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து தமிழ்க் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் அக்கறைப்பட்டிருக்கின்றனவா? தமிழ் எழுத்தாளர்கள் கவலைப்பட்டிருக்கிறார்களா? இதுகுறித்து வெகுஜன இதழ்கள் எழுதிய அளவுக்குக்கூட இலக்கிய இதழ்கள், இலக்கிய எழுத்தாளர்கள் கவலைப்படவில்லை. சுனாமி வந்தது, ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். அது குறித்து தமிழ் இலக்கியத்தில் எந்தப் பதிவும் இல்லை. அழிந்த கலைகள் எதுவும் ஆவணமாகவில்லை. எந்த வரலாறும் படைப்பாகவில்லை. எழுத்தாளர்களின் கண்ணில் எது படுகிறது? நிகழ்கால வாழ்வு குறித்து அதன் நெருக்கடிகள், வலிகள், செளகரியங்கள் குறித்து, தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் தொழில்நுட்பம் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து எப்போது எழுது வார்கள்? அப்படியென்றால், நம்முடைய இலக்கியகர்த்தாக்கள் எந்த உலகில் இருந்துகொண்டு, தங்களுடைய அதி உன்னதமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்?

இமையம், எழுத்தாளர் - தொடர்புக்கு:imayam.annamalai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x