Published : 05 Aug 2016 09:34 am

Updated : 14 Jun 2017 17:07 pm

 

Published : 05 Aug 2016 09:34 AM
Last Updated : 14 Jun 2017 05:07 PM

அறிவோம் நம் மொழியை - 2: மண்ணிலிருந்து உருவாகும் மரபுத்தொடர்கள்

2

தமிழில் ‘ஆன்னா, ஊன்னா’ என்று ஒரு தொடர் உள்ளது. ‘ஆ என்றோ ஊ’என்றோ குரலெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட தொடர் இது. ஒருவர், யாராவது ‘ஆ / ஊ’ என்று சொன்னாலே போதும், ஒரு செயலைச் செய்யப் புறப்பட்டுவிடுவார் என்று பொருள். அதாவது, காரணமே தேவையில்லாமல் சிலர் சில செயல்களைச் செய்வார்கள். அதைக் குறிக்கும் மரபுத்தொடர் இது. ‘ஆன்னா ஊன்னா ஊருக்குக் கிளம்பிடாதே’, ‘ஆன்னா ஊன்னா பணம் கேட்டு வந்து நிக்காதே’ என்றெல்லாம் எடுத்துக்காட்டுகள் கொடுக்கலாம்.

இது பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கிறது. எழுத்தில் வரும்போதும் படைப்புகளில், உரையாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு இந்தச் சொல் எழுத்து வடிவில் அவ்வளவாக அறிமுகமும் ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் இதை ஒரு பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


‘ஆன்னாலும் ஊன்னாலும் அழுகை பிடிக்கிறே அசட்டுப் பெண்ணாட்டம்’ என்று ‘தேவதாஸ்’ படத்தில் ‘ஓ பார்வதி’ என்னும் பாடலில் ஒரு வரி வரும். ‘காரணமே இல்லாமல்’ அழுது அடம்பிடிக்கும் தோழியைத் தோழன் செல்லமாகக் கடிந்துகொள்ளும் காட்சி இது. ஆனால், அவர்களுக்கிடையில் இருந்த நேசம் வாழ்நாள் முழுவதும் தொடரும் அளவுக்கு ஆழமாக இருந்தது என்பது வேறு விஷயம்.

பொதுவாக, மொழிபெயர்க்கும்போது அதிகச் சிக்கலைத் தருபவை மரபுத்தொடர்கள்தான். ‘Kicked the Bucket’, ‘Rubbing the shoulder’ என்றெல்லாம் வரும்போது அந்தத் தொடர்களின் சொற்களை அல்லாமல், ஒரு தொடராக அது சுட்டும் ஒட்டுமொத்தப் பொருளைத் தமிழில் தர முனைவதே முறையானது. இத்தகைய தொடர்களை மொழிபெயர்க்கும்போது சரியான சொற்கள் கிடைக்காமல் சில சமயம் மொழிபெயர்ப்பாளர்கள் திண்டாடுவது உண்டு. இந்தச் சிக்கல் இலக்கு மொழியின் போதாமையால் வருவது என்று சிலர் கருதத் தலைப்படுகிறார்கள். அந்தத் தொடர்கள் உருவான சமூகப் பண்பாட்டுச் சூழல் நமக்கு அந்நியமாக இருப்பதாலேயே அவை மொழிபெயர்க்கக் கடினமாக இருக்கின்றன.

எல்லா மொழிகளிலும் மரபுத் தொடர்கள் மொழிபெயர்ப்பில் இத்தகைய சவாலை ஏற்படுத்தவே செய்கின்றன. உதாரணமாக, ‘ஆன்னா ஊன்னா’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது சிக்கல் வரும் அல்லவா? ‘காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைதல்’, ‘அவனுக்குக் கை நீளம்’ (திருடும் பழக்கத்தைக் கை நீளம் என்று சொல்வதுண்டு) என்ற தொடர்களையும் எளிதாக மொழிபெயர்த்துவிட முடியாது அல்லவா?

இத்தகைய மரபுத்தொடர்கள் ஒரு மொழியின் முக்கியமான செல்வங்கள். மொழியின் வண்ணத்தைக் காட்டுபவை. மக்களிடையே புழங்கிவரும் நம்பிக்கைகள், மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவை பிரதிபலிக்கின்றன. இவற்றை இழப்பது ஒரு விதத்தில் மரபுடனான நம் தொடர்பை அறுத்துக்கொள்வதுபோலத்தான்.

கொசுறு:

புதிய மரபுத்தொடர்கள் உருவாவதும் பழைய தொடர்கள் புது விளக்கம் பெறுவதும் அவ்வப்போது நடக்கும். அண்மையில் ஒரு எழுத்தாளர், ‘எந்தப் பட்டியலிலும் என் பெயர் இடம்பெறாது. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நாம் யார் வீட்டுக்கும் போய் மொய் வைத்ததில்லையே’ என்று எழுதியிருந்தார். திருமணம் முதலான விழாக்களில் மொய் வைப்பது, தமக்கு மொய் வைத்தவர்களின் விழாக்களுக்குச் செல்லும்போது தானும் அந்த மரியாதையைத் திருப்பிச் செய்வது என்னும் பழக்கத்துடன் தொடர்புகொண்ட ஒரு தொடரை வேறொரு பின்புலத்தில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் அந்த எழுத்தாளர்.

(தேடுவோம்)

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in


அறிவோம் நம் மொழியை2: மண்ணிலிருந்து உருவாகும் மரபுத்தொடர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x