Published : 01 Feb 2017 10:26 AM
Last Updated : 01 Feb 2017 10:26 AM

இப்படிக்கு இவர்கள்: தை எழுச்சிதான் சரி!

மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை 'மெரினா புரட்சி', 'தைப்புரட்சி', 'மாணவர் போராட்டம்', 'ஜல்லிக்கட்டு போராட்டம்' என்று பல்வேறு வார்த்தைகளில் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. தி இந்து தமிழ் நாளிதழ் ‘பண மதிப்பு நீக்கம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தி எப்படிப் பொதுமை ஆக்கியதோ, அப்படி இதிலும் செய்யவேண்டும். ‘மெரினா புரட்சி’ என்ற சொற்பிரயோகம் நகர்மயப் பார்வையின் வெளிப்பாடு. சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் புறக்கணிக்கப்படுகிறார்கள். அலங்காநல்லூரில் தொடங்கித்தான் மெரினாவை நோக்கி நகர்ந்து, மாநிலந்தழுவிய போராட்டமாக மாறிய அதை, 'தை எழுச்சி' என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக இருக்கும்.

- திருச்செல்வன், திருவேற்காடு.



அன்புப் பூச்செண்டு!

‘தி இந்து’ நாளிதழ் தொடர் ஆச்சரியங்களைத் தந்துவருகிறது. 28-ம் தேதிய தலையங்கம் அப்படியான ஆச்சரியங்களில் ஒன்று. ‘பழந்தமிழ் இலக்கியத்துக்குப் பாலங்கள் தேவை!’ என்ற தலையங்கத்தின் தொடக்கம், தொடர்ச்சி, முடிப்பு அனைத்தும் ஒருங்கிணைந்து உரைகளின், உரையாசிரியர்களின் காலத் தேவையைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. கலைஞர் மு.கருணாநிதியின் சங்கத் தமிழ், குறளோவியம் போன்றவை கூட மரபான உரைகளின் மாறுபட்ட வடிவங்கள்தாம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘தி இந்து’வின் இலக்கியம் சார்ந்த தலையங்கங்கள் என்ற அணுகுமுறையை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

-வெற்றிப்பேரொளி, சென்னை.



இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றி

ஜல்லிக்கட்டு தொடர்பில் நடந்த இளைஞர் போராட்டத்தை அரசும் அதிகாரமும் நசுக்குவதற்குத் தருணம் பார்த்துக் காத்திருந்தது. அரசியல் தந்திரங்களின் அரிச்சுவடி அறியாத மாணவர்களிடையே ஏற்பட்ட சில குழப்பங்களை ஊதிப் பெரிதாக்கி, சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையாக்கி, பொதுமக்களின் ஆதரவை இழக்க வைக்கும் முயற்சியைச் சிலர் மேற்கொண்டனர். இறுதியில், மாணவர் புரட்சியை வன்முறை, தடியடி என்று அற்ப நிகழ்வாக ஊடகங்கள் பதிவு செய்ய காவல்துறை வழிவகுத்துக்கொடுத்தது. ஆனாலும், வெற்றி பெற்றது இளைஞர்களே. இனிவரும் போராட்டங்களை ஒருவித அச்சத்தோடு எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டிருப்பது, இளைஞர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.

- எஸ்.எஸ்.ரவிக்குமார், கிருஷ்ணகிரி.



ஜல்லிக்கட்டு மீட்புப் புரட்சி

நூல்வெளி பகுதியில் வெளியான, ‘மெரினா புரட்சி பதிவாகுமா?’ தலைப்பிலான (ஜன. 28) கட்டுரையை வாசித்தேன். அவசியம் பதிவுசெய்யப்பட வேண்டும். அதேசமயம், மாணவர் போராட்டம் வன்முறையில் முடிந்தது என்று மட்டும் யாரும் எழுதிவிடாதீர்கள். ஏனெனில், கலவரம் செய்தது மாணவர்கள் அல்லவே? போராட்டக் களத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் விளையாட்டுகள், தமிழர் கலைகள், ஒருவருக்கு ஒருவர் உதவிய அறப் பண்புகள் அனைத்தும் பதிவாகட்டும். இரவும் பகலும் திருவிழா போல் நடந்த உலகின் வித்தியாசமான இப்புரட்சிக்கு ‘ஜல்லிக்கட்டு மீட்புப் புரட்சி’ என்றுகூடப் பெயர்வைக்கலாம்.

- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.



பாரம்பரியம் நோக்கி...

ஜனவரி 29-ல் வெளிவந்த ‘பாரம்பரியத்தை நோக்கித் திரும்புங்கள்’ - சரியான சமயத்தில் வெளியிடப்பட்ட அற்புதமான கட்டுரை. இந்த மாதிரி கருத்துகளைத் தாங்கி, யாராவது ஒருவர் கட்டுரை எழுத மாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தோம். மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இந்தச் செய்தி அமையும். இதுபோன்ற செய்தியை நிறைய எதிர்பார்க்கிறோம்.

- இசக்கி, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x