Last Updated : 09 Mar, 2017 08:39 AM

 

Published : 09 Mar 2017 08:39 AM
Last Updated : 09 Mar 2017 08:39 AM

ஓட்டுக்கு மட்டும்தான் நாங்கள் இந்தியர்களா?

ராமேஸ்வரம் சொந்தபந்தங்கள் அத்தனையிடமும் பேசிவிட்டேன். “மீன் பிடிக்கப் போறோம்ங்குறது தவிர, வேற எந்த நோக்கமும் இல்லாத அப்பாவிப் புள்ளைக. இலங்கைக் கடற்படையோட இரண்டு படகுகள் சுத்திச் சுத்தி வந்து சுட்டிருக்கு. இறந்த பையன் தங்கச்சிமடம் தவசி பேரன் கெமிலஸ் மகன் பிரிஜ்ஜோ. அணியத்தில் நின்னு இலங்கை நேவிப் படகுகளைப் பார்த்தவன் பதறி, எல்லோரையும் கிடைத்த இடத்தில் பதுங்கச் சொல்லியிருக்கான். குண்டுச் சத்தம் ஓய்ஞ்சதும் மத்தவங்க மேலே வந்து பார்த்தால், கழுத்தில் குண்டு பாய்ஞ்சு ரத்த வெள்ளத்துல அவனே கெடந்துருக்கான். பதறி கரைக்குச் செய்தி சொல்லியிருக்காங்க. சேதி கடலோரக் காவல் படைக்கும் போயிருக்கு. அங்க வழக்கம்போல அலட்சியம். இளம்பிள்ளையைக் கொன்னது நாங்களில்லன்னு இலங்கைக் கப்பப் படை சொன்னா அப்பம் வேற யாரு?”

யாருக்கும் இதைத் தாண்டி சொல்ல எதுவும் இல்லை. தொடரும் அலட்சியங்களும் அவமதிப்புகளும் கடலோர மக்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கின்றன. இளைய சமுதாயத்தை அது எழுச்சிகொள்ளவும் வைத்திருக்கிறது. இளைய சமுதாயம் தங்கச்சிமடத்தில் போராட்டத்தைக் கையிலெடுத்திருப்பது அதற்கான சான்று.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், நமது கடலோரக் காவல் படையும் சீருடையில் விறைப்பாக ஒத்திகை பார்த்து, பொதுமக்களுக்குப் பூச்சாண்டி காட்டுவதை விடுத்து வேறென்ன செய்திருக்கிறது? “இதுவரையில் கடலில் தவறிய ஒருவரை உயிருடனோ, பிணமாகவோ நம்முடைய கடலோரக் காவல் படை மீட்டுத் தந்ததில்லை” என்று கடற்கரையில் எப்போதுமே ஒரு பேச்சு உண்டு. எண்ணூரில் கப்பல்கள் மோதி எரிபொருள் கசிந்த நிகழ்வில்கூட, இதுபோன்ற இடர்பாடுகளின் கையாளுமையில், கடலோரக் காவல் படையின் தயாரற்றதன்மை அப்பட்டமாகத் தெரிந்ததே! கண்காணிப்புத் திறன் எந்தக் கதியில் இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, பிராந்திய - மொழி வெறுப்பு அல்லது இழிந்த பார்வை என்று ஒன்று இருக்கிறதே இன்னொருபுறம். இதேபோல, மேற்குக் கடல் எல்லையில் ஒரு குஜராத்தியை பாகிஸ்தான் சுட்டிருந்தால் கடலோரக் காவல் படை இப்படித்தான் செயல்படுமா, அரசாங்கம்தான் இப்படி வாளாவிருக்குமா?

பிரதமரே! ஒரு உயிர் போயிருக்கிறது, அதைப் பாதுகாக்கத்தான் முடியவில்லை. கொன்றவர்கள் யார்? எங்களுக்குச் சொல்லுங்கள். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும்தான் நாங்கள் கண்ணுக்குத் தெரிவோம்; மற்ற நேரங்களில் நாங்கள் பொருட்டில்லை என்றால், எங்களுக்கும் நாங்கள் யாரென்று உணர்த்தக் காலம் வரும்!

- ஜோ டி குரூஸ், எழுத்தாளர், தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x