Last Updated : 19 Jun, 2017 09:00 AM

 

Published : 19 Jun 2017 09:00 AM
Last Updated : 19 Jun 2017 09:00 AM

முட்டுச்சந்தில் நிற்கிறது பிரிட்டன்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டுமா, நீடிக்க வேண்டுமா என்று மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு (பிரெக்ஸிட்) நடந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த டேவிட் கேமரூன் விலக நேர்ந்தது. அவருக்குப் பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த தெரசா மே, தன்னுடைய அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். இது அவர் எதிர்பார்த்தபடி வெற்றியைத் தருவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுவைக்கூட எட்ட முடியாமல் செய்துவிட்டது. தெரசா எப்படியோ பிரதமராகப் பதவியில் தொற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களுக்குள் மூன்று பயங்கரவாதத் தாக்குதலை பிரிட்டன் சந்தித்துள்ளது. சமீப காலங்களில் இந்த அளவுக்கு வலுவற்ற, நிலையற்ற ஆட்சி பிரிட்டனில் அமைந்ததே இல்லை.

தொழிலாளர் (லேபர்) கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் மிக வலுவாகப் பிரச்சாரம் செய்ததை அவருடைய ஆதர வாளர்கள் இன்னமும் புகழ்ந்துகொண்டிருக் கின்றனர். அதனால் கட்சிக்குக் கிடைத்த பலன் என்ன? ஆட்சிக்கு வரும் அளவுக்குப் பெரும்பான்மை கிட்டவில்லையே? பிரிட்டனில் ஏற்கெனவே தோன்றியிருந்த அரசியல் நெருக்கடி இப்போது தேர்தல் முடிவால் மேலும் தீவிரமாகிவிட்டது.

பிளவுபட்ட பிரிட்டன்

பிரிட்டன் இப்போது பிளவுபட்டு நிற்கிறது, டோரிகள், லேபர்கள் என்று அல்ல; கடந்த முறை, வலதுசாரி தேசியவாதக் கட்சியான யு.கே.ஐ.பி. பிரெக்ஸிட் வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து விலக வேண்டும் என்று தீவிரமாகப் பேசியது. ஒன்றியத்திலேயே நீடிக்க வேண்டும் என்ற நிலையைத்தான் தெரசா மே, கோர்பின் இருவருமே எடுத்தனர். கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை மதிக்க வேண்டும் என்றனர். இப்படிப் பேசிய இருவரும் பிரதமராகக் கூடாது என்றே மக்கள் வாக்களித்துள்ளனர்.

மக்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கால் அறுதிப் பெரும்பான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று தெரசா நம்பினார். பிரதமராவதற்கு முன்னால் தெரசா அதிகம் பேசியவர் அல்லர். அவர் தலைமையிலான சோகையான பிரச்சாரமும் மக்களை ஈர்க்கவில்லை. எனவே, டி.யு.பி. கட்சி ஆதரவுடன்தான் அவர் பதவி வகிக்க முடியும் என்றாகிவிட்டது. டி.யு.பி. கட்சியின் நிறுவனத் தலைவரான சர்ச்சைக்குரிய பாதிரியார் இயான் பெய்ஸ்லி தன்பாலினத் திருமணம், கருக்கலைப்பு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். வலதுசாரி தேசியவாதியாகத் திகழ்ந்தார். பிரிட்டனின் ஐக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய கொள்கை. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இப்போது அக்கட்சிக்கு பத்து உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் தலைவர் ஆர்லன் ஃபாஸ்டர் வடக்கு அயர்லாந்து சட்டப் பேரவையில் உறுப்பினராக இருக்கிறார். பசுமையாற்றல் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாகப் பதவி விலக வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் தரப்பட்டது. அவருடைய ஆதரவில்தான் பிரிட்டனில் தெரசா மே ஆளப்போகிறார் என்பதால் அவருடைய அதிகாரமும் செல்வாக்கும் பலமடங்கு கூடிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று தீவிரம் காட்டும் டி.யு.பி. கட்சி அயர்லாந்துடன் பிரிட்டன் உரசல் இல்லாத, விரிசல் இல்லாத உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

தொழிலாளர் கட்சியின் தோல்வி

தொழிலாளர் கட்சி தங்களுக்கு ஏதோ பெரும் வெற்றி கிடைத்துவிட்டதைப் போல மகிழ்வதில் அர்த்தமே இல்லை. தெரசா மே மீண்டும் பிரதமராக வருவதை வாக்காளர்கள் விரும்பவில்லை என்பதைப் போல, கோர்பின்தான் பிரதமர் ஆக வேண்டும் என்றும் வாக்களித்துவிடவில்லை. கன்சர்வேடிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி 56 இடங்கள் குறைவு என்பதிலிருந்தே ஆதரவைத் தெரிந்துகொள்ளலாம். சாதாரண சமயமாக இருந்தால், ‘கட்சித் தலைவர் பதவியிலிருந்து கோர்பின் விலக வேண்டும்’ என்ற ஆக்ரோஷக் குரல்கள் விண்ணை முட்டியிருக்கும்.

கட்சித் தலைவர்கள் மேடையில் கைகோத்தாலும், கன்சர்வேடிவ், லேபர் என்ற இரு கட்சிகளுக்குள்ளும் பிளவு வலுவாக இருப்பதை மறைக்க முடியாது. 1983 முதல் நாடாளுமன்றத்தில் இருக்கும் கோர்பினின் பேச்சு 20 வயது இளைஞர்களை ஈர்த்தது உண்மை. ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐரிஷ் குடியரசு சேனை அமைப்புகளுடன் கோர்பினுக்கு இருக்கும் நெருக்கம் அனைவரும் அறிந்ததே. கோர்பின் ஆதரவாளர்களுக்கு யூதர்களைப் பிடிக்காது; அத்துடன் ஆணாதிக்கக் கருத்துள்ளவர்கள் என்று பிபிசி-யின் பெண் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தீவிரவாதம் குறித்து தொழிலாளர் கட்சியோ கோர்பினோ கவலைப்பட்டது கிடையாது. ஆனால், மான்செஸ்டரிலும் லண்டனிலும் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பிறகு போதிய காவலர்களை நியமிக்காதது ஏன் என்று தெரசா மேயைப் பார்த்துக் கேட்டார் கோர்பின். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துள்ளவர் என்பதால் கியூபா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளின் மனித உரிமை மீறல் செயல்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவர் அல்லர்.

சவால்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவராக கோர்பின் நீடிப்பதை விரும்பவில்லை. அவர்கள் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரதமர் பதவியை ஏற்றதும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதற்காக தெரசா மே தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய பேச்சுகளில் விரைவில் அவர் ஈடுபட வேண்டும். பயங்கரவாதப் பின்னணி உள்ள சுமார் 3,000 பேரைக் கண்காணித்து வெளியேற்றும் சுமை பிரிட்டிஷ் பாதுகாப்புப் படைகளின் தோள்களில் ஏறியிருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் செல்வாக்கிழந்த நிலையில் ஒரு பிரதமர் பதவி வகிக்க நேர்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதே ஆண்டில் இன்னொரு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கூட சாத்தியம்தான்; ஆனால், அது நல்ல முடிவைத் தருமா என்பது கேள்விக்குறி. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து மக்களிடையே கருத்து வேறுபாடு வலுவாக இருப்பதால் நாடு நிலையற்ற அரசியல் தன்மையுடனும் பலவீனமாகவும் இருக்கிறது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x