Published : 06 Apr 2017 09:31 AM
Last Updated : 06 Apr 2017 09:31 AM

என்ன சொல்கிறது மனநல மருத்துவப் பாதுகாப்பு மசோதா?

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை எதிர்கொள்ள நேர்ந்த வலிகளுக்கு ஒரு முடிவுகட்டியிருக்கிறது மத்திய அரசு. மனநல மருத்துவப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் மார்ச் 27 அன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2016 ஆகஸ்ட்டில் மாநிலங்களவையில் 134 அதிகாரபூர்வத் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட மசோதா இது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இது சட்டமாக்கப்படும். இதன் மூலம், மனநல மருத்துவச் சட்டம் (1987) நீக்கப்பட்டு புதிய சட்டம் அமல்படுத்தப்படும்.

மனநலப் பாதிப்பு உள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோருக்கு மட்டு மல்லாமல், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களும் இந்தப் புதிய சட்டத்தால் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். முந்தைய சட்டம் மிகக் கடுமையானது. அதில் நோயாளிக்கென்று எந்த உரிமையும் இல்லை. புதிய சட்டம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. மிக முக்கியமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களைக் குற்றவாளிகளாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 309-லிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்திருக்கிறது.

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை

மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மனநல மருத்துவம் மற்றும் சேவையை வழங்கும் நோக்கிலும், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை, துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்யும் நோக்கிலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.

முடிவெடுத்தல், நடத்தை, நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளும் திறன், அன்றாட வாழ்க்கையின் தேவைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும் சிந்தனை, உணர்வு நிலை, கண்ணோட்டம், நினைவு ஆகியவற்றில் கணிசமான அளவில் ஏற்படும் கோளாறுகளை மனநலக் கோளாறு என்று இந்த மசோதா வரையறுக்கிறது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் மருத்துவத் தரத்தின் அடிப்படையில் மனநலக் கோளாறு தீர்மானிக்கப்படும்.

அரசால் நடத்தப்படும் அல்லது அரசின் நிதி பெறும் மனநல சிகிச்சை சேவை மையத்திடமிருந்து மனநல மருத்துவத்தையும் சிகிச்சையும் பெறுவதற்கான உரிமை ஒவ்வொரு நபருக்கும் இருப்பதை இந்த மசோதா உறுதிசெய்கிறது. வீடற்றவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு (ஏழைகளுக்கான அட்டை வைத்திராதவர்கள் உட்பட) இலவச மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பதையும் இந்த மசோதா உறுதியளிக்கிறது.

ரகசியம் பாதுகாக்கப்படும்

மனநலப் பாதிப்பு கொண்ட ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கான உரிமை உள்ளது என்றும் பாலினம், பாலியல் தேர்வு, மதம், கலாசாரம், சாதி, சமூக அல்லது அரசியல் நம்பிக்கைகள், வர்க்கம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது என்றும் இந்த மசோதா குறிப்பிடுகிறது.

மனநலப் பாதிப்பு கொண்ட ஒருவருக்கு, தனது மனநலம், மனநலப் பாதிப்புக்கான சிகிச்சை, உடற்கூறு அடிப்படையிலான சிகிச்சை ஆகியவை தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை உண்டு. மனநலப் பாதிப்பு கொண்ட ஒருவரின் புகைப்படத்தையோ அவரைப் பற்றிய எந்த விதமான தகவலையோ அவரது அனுமதி பெறாமல் வெளியிட முடியாது.

மனநலப் பாதிப்பு கொண்ட ஒருவருக்கு, தனக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், தனக்கான பிரதிநிதியாக யார் இருக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானிக்கும் உரிமை உள்ளது. இதுதொடர்பாக முன்கூட்டியே அவர் வழங்கும் வழிகாட்டுதலுக்கு, மருத்துவர் ஒருவர் சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது மனநல வாரியத்தில் அது பதிவுசெய்யப்பட வேண்டும்.

மனநலப் பாதிப்பு கொண்டவரின் உறவினரோ, அவரைப் பராமரிப்பவரோ, மனநல மருத்துவரோ சம்பந்தப்பட்ட நோயாளி முன்கூட்டியே வழங்கும் வழிகாட்டுதலைப் பின்பற்ற விரும்பாதபட்சத்தில், அதை மறுபரிசீலனை செய்யவோ, மாற்றவோ, ரத்துசெய்யவோ விரும்பினால் அது தொடர்பாக மனநல வாரியத்திடம் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அளவில் மத்திய மனநல ஆணையத்தை அமைக்கவும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மனநல ஆணையத்தை அமைக்கவும் அரசுக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கிறது. எல்லா மனநல மருத்துவ நிறுவனங்களும், உளவியலாளர்கள், மனநல மருத்துவச் செவிலியர்கள், மனநலம் தொடர்பான சமூக சேவகர்கள் உள்ளிட்ட மனநல மருத்துவப் பணியாளர்களும் இந்த ஆணையங்களில் தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

இந்த ஆணையங்கள், (அ) மனநல சிகிச்சை தொடர்பான எல்லா நிறுவனங்களையும் பதிவுசெய்வது, மேற்பார்வையிடுவதுடன் அவை தொடர்பான பதிவேட்டையும் பராமரிக்கும். (ஆ) மனநல மருத்துவ நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதுடன், அந்நிறுவனங்கள் தொடர்பான சேவை வழங்குதல் விதிமுறைகளை மேம்படுத்தும் பணிகளையும் செய்யும். (இ) மனநல மருத்துவப் பணியாளர்கள் தொடர்பான பதிவேட்டைப் பராமரிக்கும் (ஈ) மனநல மருத்துவப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் தொடர்பாக, சட்டப் பரிபாலன அதிகாரிகளுக்கும், மனநல மருத்துவப் பணியாளர்களுக்கும் பயிற்சியளிக்கும். (உ) மனநல மருத்துவ சேவை வழங்குதலில் உள்ள குறைபாடுகள் குறித்த புகார்களைப் பெறும். (ஊ) மனநல மருத்துவம் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு அறிவுரை வழங்கும்.

மனநலப் பாதிப்பு கொண்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் முன்கூட்டியே விடுக்கும் வழிகாட்டுதல்களைப் பராமரிக்கவும் மனநல மருத்துவ மதிப்பீட்டு வாரியம் அமைக்கப்படும்.

மனநலப் பாதிப்பு கொண்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, சிகிச்சை முடிந்து வீடு திரும்புவது ஆகியவை தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், விதிமுறைகளும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மனநலப் பாதிப்பு கொண்டவர் முன்கூட்டியே வழங்கும் வழிகாட்டுதலைப் பின்பற்றும் மருத்துவப் பணியாளரோ, மனநல மருத்துவப் பணியாளரோ எந்தவிதமான எதிர்பாராத விளைவுகளுக்கும் பொறுப்பாளியாக்கப்பட மாட்டார்.

தசையைத் தளர்வுறச் செய்யும் மருந்துகளோ மயக்க மருந்தோ பயன்படுத்தப்படாமல் மின் அதிர்ச்சி சாதன சிகிச்சைக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உட்படுத்தப்படக் கூடாது. குழந்தைகளுக்கு மின் அதிர்ச்சி சாதன சிகிச்சை அளிக்கப்படக் கூடாது. இதுபோன்ற நபர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படக் கூடாது. எந்தச் சூழலிலும் எந்த விதத்திலும் அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்படக் கூடாது. அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்படக் கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே உடல்ரீதியான கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்யும் ஒருவர், அந்த நேரத்தில் மனநல பாதிப்பு கொண்டவர் என்று கருதப்படுவதுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்படவும் மாட்டார். மன அழுத்தத்துடன் தற்கொலை செய்துகொள்ள முயன்ற அந்த நபர், மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க, அவர் மீது அக்கறை செலுத்தி அவரது நலனைப் பாதுகாப்பது, சிகிச்சையளிப்பது, மறுவாழ்வு அளிப்பது ஆகியவை அரசின் கடமை என்கிறது புதிய சட்டம்.

குறைகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்கள் தொடர்பாக முந்தைய சட்டத்தில் இருந்த தெளிவு புதிய சட்டத்தில் இல்லை. அவர்களுக்கான பாதுகாவலர்களை நியமிப்பது, நீக்குவது, அவர்களுக்கான உரிமைகள், கடமைகள் தொடர்பாக முந்தைய சட்டம் தெளிவாக வரையறுத்திருந்தது. அத்துடன், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்கள் தொடர்பான விதிமுறைகள் தொடர்பான மசோதா (மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மசோதா)வுடன் தொடர்புடையவை என்பது மற்றொரு தகவல். அந்த மசோதா இன்னமும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்கிறது புதிய சட்டம். மீண்டும் மீண்டும் தவறிழைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. எனினும், எந்த மாதிரியான குற்றத்துக்கு எந்த மாதிரியான தண்டனை என்று வரையறுக்கப்படாதது குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

அதேபோல், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் எப்படிப் பகிர்ந்துகொள்ளும் என்றோ, இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செலவுகள் குறித்தோ இந்த மசோதாவின் நிதிக் குறிப்பாணை எதுவும் குறிப்பிடவில்லை. தேவையான நிதி இல்லாமல் இந்த மசோதாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

மனநலப் பாதிப்பு கொண்ட ஒருவருக்கு, தனக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், தனக்கான பிரதிநிதியாக யார் இருக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானிக்கும் உரிமை உள்ளது. இதுதொடர்பாக முன்கூட்டியே அவர் வழங்கும் வழிகாட்டுதலுக்கு, மருத்துவர் ஒருவர் சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது மனநல வாரியத்தில் அது பதிவுசெய்யப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x