Last Updated : 30 Mar, 2016 08:11 AM

 

Published : 30 Mar 2016 08:11 AM
Last Updated : 30 Mar 2016 08:11 AM

உருவானார் திருமாவளவன்

தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் முகமாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் 1962-ல் பிறந்தார். பெற்றோர் தொல்காப்பியன் - பெரியம்மாள். வீட்டுக்கு இரண்டாவது பிள்ளை. வான்மதி என்னும் அக்காள், செங்குட்டுவன், பாரிவள்ளல் என இரு தம்பிகள். காட்டில் விறகு வெட்டி வாழ்க்கையை நடத்திவந்தவர் திருமாவின் தந்தை.

பள்ளிப் படிப்பை உள்ளூரில் முடித்த திருமா, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பியுசி, சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல், முதுநிலை குற்றவியல் படிப்பு முடித்து, 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். அந்த ஆண்டே அரசின் தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளர் பணியில் அமர்ந்தார். சென்னை, மதுரை, கோவை எனப் பல இடங்களில் பணியாற்றினார்.

கட்சி ஆரம்பித்த பிறகும் அரசுப் பணியில் இருந்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசுப் பணியிலிருந்து விலகினார்.

அம்பேத்கரின் துணைவியார் சவீதா, பாரதிய தலித் பாந்தர் இயக்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் 1982-ல் தொடங்கியபோது, திருமா அதில் தன்னை இணைத்துக்கொண்டார். 1983-ல் இலங்கைப் பிரச்சினையையொட்டி மாணவர்கள் போராட்டம் வெடித்தபோது, அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளில் திருமாவளவன் ஈடுபட்டதுதான், அவரின் அரசியல் நுழைவுக்கான அடித்தளமாகும். 1984-ம் ஆண்டில் கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் பொதுச்செயலர், 1985-ல் தலித், மீனவ மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச் செயலராகவும் பொறுப்பு வகித்த திருமா, இலங்கைப் பிரச்சினைக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டவர். 1986-ல் இலங்கை சென்ற திருமா, அங்குள்ள தமிழ்க் கல்லூரி மாணவர்களுடன் ஒரு போராட்டத்தில் பங்கேற்றார். அதே ஆண்டில், சென்னையில் தி.க. நடத்திய ரயில் மறியல் போராட்டத்திலும் பங்கேற்றார்.

இதனிடையே பாரதிய தலித் பாந்தர் இயக்கத்தின் தமிழக அமைப்பாளராக இருந்த அ.மலைச்சாமி 1989-ல் மரணமடையவே, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பொறுப்புக்கு 1990-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமா. அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்றும் மாற்றினார். நீலம், சிவப்பு, நட்சத்திரம் சகிதம் இந்திய ஒடுக்கப்பட்டோர் சிறுத்தைகள் அமைப்பின் கொடி 1990-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1991-ல் அந்த அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பானது. கொடி அதே கொடி!

ஆரம்பக் காலத்தில், தேர்தல் அரசியலில் பங்கெடுக்க மாட்டோம் என்று திருமாவால் அறிவிக்கப்பட்ட இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். 1990 - 1999 காலகட்டத்தில் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக, இலங்கைப் பிரச்சினைக்காக, பஞ்சமி நில மீட்புக்காக எனப் பல போராட்டங்களை நடத்தியது விசிக. திருமாவை தேர்தல் அரசியல் நோக்கி அழைத்துவந்தவர் மூப்பனார். 1999 மக்களவைத் தேர்தலில் தமாகா கூட்டணிக்கு விசிகவை அவர் அழைத்துவந்தார். முதல் தேர்தலிலேயே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குக ளையும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் விசிக பெற்றதால், திருமாவை அரசியல் உலகு திரும்பிப் பார்த்தது.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது விசிக. மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் சட்டப்பேரவை உறுப்பினரானார். ஆனால், திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைத் தர மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டிய திருமாவளவன், தனது எம்எல்ஏ பதவியை உதறிவிட்டு, 2004-ல் கூட்டணியிலிருந்து வெளியேறினார். 2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த் தேசியம் போன்ற கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். தேர்தலில் தோற்றாலும், சிதம்பரம் தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்குகளை திருமா அள்ளினார்.

தொடர்ந்து, பாமகவுக்கும் விசிகவுக்கும் வட மாவட்டங்களில் இருந்த உரசல்களைச் சீரமைக்கும் நோக்கில், பழ.நெடுமாறன், சேதுராமன் ஆகியோர் முயற்சியில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் 2004-ல் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு எலியும் பூனையுமாக இருக்கும் திருமாவும், ராமதாஸும் அன்றைக்குப் பல மேடைகளிலும், போராட்டக் களங்களிலும் ஒன்றாக நின்றனர்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்ற அழைப்பை ஏற்றார் திருமாவளவன். தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுவையில் 2 இடங்களிலும் விசிக போட்டியிட்டது. காட்டுமன்னார்குடியில் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகையும், மங்களூரில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். 2006 உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டிய திருமாவளவன், அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மீண்டும் திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தல் வரை நீடித்தது. 2009 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 4.28 லட்சம் வாக்குகளோடு வென்றார் திருமா. 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இடங்களில் தோல்வியைத் தழுவவே, மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இணைந்தது விசிக.

அரசியலைத் தாண்டி மின்சாரம், கலகம் போன்ற சில திரைப்படங்களிலும் திருமாவளவன் முகம் காட்டினார். இலக்கிய ஆர்வமும் திருமாவுக்கு உண்டு. ‘அத்துமீறு’, ‘தமிழர்கள் இந்துக்களா?’, ‘இந்துத்துவத்தை வேரறுப்போம்’ போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

திருமா திருமணம் செய்துகொள்ளவில்லை. “கட்சிக்குத் தேர்தல் அங்கீகாரம் கிடைத்த பின் அதைப் பற்றி யோசிப்பேன்” என்று தனது 50-வது பிறந்த நாளன்று சொன்னார். வேளச்சேரியில் தாய் மண் அலுவலகம், அசோக் நகர் வெளிச்சம் அலுவலகம் என சென்னையில் இருக்கும்போதெல்லாம் தொண்டர்களுடன் கலந்திருப்பது திருமாவளவனின் அரசியல் அணுகுமுறை!

- எம். மணிகண்டன்,

தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x