Last Updated : 21 Apr, 2017 09:16 AM

 

Published : 21 Apr 2017 09:16 AM
Last Updated : 21 Apr 2017 09:16 AM

ராஜ்குமார் சுக்லா நமக்குச் செய்தது என்ன?

பிஹார் மாநிலத்தின் சம்பாரண் மாவட்டத்தில் அவுரி சாகுபடி செய்த விவசாயிகளின் உரிமைகளுக்காக காந்திஜி நடத்திய முதல் போராட்டத்தின் நூறாவது ஆண்டு நினைவுகூரப்படும் இந்த வேளையில், அவரை அந்த இடத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்ற ராஜ்குமார் சுக்லா பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு காந்திஜியின் முதல் அரசியல் போராட்டம் என்றுகூட இதை அழைக்கலாம். இதை பி.பி. மிஸ்ரா, ஜேகஸ் பவுச்சபேடாஸ் ஆகியோர் விரிவாக இதை ஆராய்ந்துள்ளனர். இந்நிலையில், பைரவ் தாஸ் என்பவர் எழுதிய சுவாரசியமான புதிய புத்தகம் வெளியாகியிருக்கிறது. ‘காந்திஜியின் சம்பாரண் போராட்டத்துக்கு சூத்திரதாரியாகத் திகழ்ந்த ராஜ்குமார் சுக்லாவின் டயரி’ என்பது அப்புத்தகத்தின் தலைப்பு.

1875-ல் பிறந்த ராஜ்குமார் சுக்லாவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. மற்ற விவசாயிகளைப் போல அவரும் அவுரி பயிர் வைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். இந்தக் கட்டாயச் சாகுபடிக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஷேக் குலாம் என்ற உள்ளூர் நண்பர் இதில் அவருக்குத் தோள் கொடுத்தார். மாவட்ட ஆட்சியருக்கு மனுக்களை அனுப்பிப் பார்த்தார். வேலைநிறுத்தத்துக்குக் கூட ஏற்பாடுகளைச் செய்தார். இதையடுத்து, அவுரி சாகுபடியாளர்களை பிரிட்டிஷ் அரசு ஏவிய போலீஸ்காரர்களும், தோட்ட அதிபர்களும் சேர்ந்து தாக்கினர். தோட்ட அதிபர்களுக்கு எதிராக சுக்லா வழக்கு தொடர, பாட்னா வழக்கறிஞர்கள் அனுதாபத்துடன் உதவ முன்வந்தனர். ஐரோப்பிய மேலாளர் ஒருவருடன் சச்சரவில் ஈடுபட்டதற்காக 1914-ல் சுக்லாவைச் சில காலம் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. முதல் உலகப் போர் சமயத்தில் அவுரி சாகுபடியாளர்களின் மனப் புழுக்கம் அதிகரித்தது. அவுரிக்குத் தேவை அதிகமானதால், அதிக பரப்பளவில் அவுரி சாகுபடி செய்யுமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். கான்பூரி லிருந்து வெளிவந்த ‘பிரதாப்’ என்ற இந்தி செய்தித்தாளில் அவ்வப்போது இதைக் கண்டித்து கட்டுரைகள் எழுதிவந்தார் சுக்லா. கணேஷ் சங்கர் வித்யார்த்தி அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். தென்னாப்பிரிக்காவில் கொத்தடிமை களாக நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்காக அந்நாட்டு அரசுக்கு எதிராக காந்திஜி போராடிய விவரத்தை வித்யார்த்தி தான், சுக்லாவுக்குத் தெரிவித்தார்.

1916 டிசம்பரில் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாட்னா வழக்கறிஞர்கள் பிரஜ்கிஷோர் பிரசாத், ராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் சுக்லாவும் கலந்துகொண்டார். அவுரி சாகுபடியாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்கள் பால கங்காதர திலகர், மதன்மோகன் மாளவியாவிடம் எடுத்துரைத்தனர். அவ்விருவரும் அந்தப் பிரச்சினையில் ஆர்வம் செலுத்தத் தயங்கினர். நாட்டின் சுதந்திரத்துக்காக நடத்தும் போராட்டத்தை அது திசைதிருப்பிவிடும் என்று கருதினர்.

இருந்தாலும், பிஹாரில் அவுரி சாகுபடியை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் ஒரு தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது ராஜ்குமார் சுக்லா பேசினார். “இந்த ஆட்சியில் ஐரோப்பிய தோட்ட அதிபர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருக்கின்றனர். பயிரிட மறுக்கும் ஏழை விவசாயிகள் மீது போடப்பட வேண்டிய சிவில், கிரிமினல் வழக்குகளைத் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். இங்கே வந்து எங்களுடைய பிரச்சினைகளைப் பேசியதற்காக, சம்பாரண் திரும்பியதும் எனக்கு என்ன மாதிரியான தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாது” என்று உருக்கமாகப் பேசினார். எந்த அளவுக்கு அச்சுறுத்தலுக்கு அவர்கள் ஆளாகியிருந்தனர் என்பதை அதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேச வேண்டும் என்று காந்திஜிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த விவகாரம் குறித்து முழுதாக ஏதும் தெரியாமல் பேச முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு ராஜ்குமார் சுக்லா, காந்திஜியிடம் சென்று, ஒரு முறை சம்பாரணுக்கு வந்து விவசாயிகளின் நிலைமையை நேரில் ஆராயுமாறு வேண்டுகோள் விடுத்தார். சம்பாரணுக்கு வாருங்கள், அவுரி தோட்ட அதிபர்களின் சுரண்டல்களிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கோரியபடியே காந்தியின் கால்களை அவர் இறுகப் பற்றிக்கொண்டதாகக் கூட ஒரு வட்டாரம் தெரிவித்தது. இக்கோரிக்கையை இப்போது தன்னால் ஏற்க முடியாது என்று காந்திஜி அடக்கமாக மறுத்துவிட்டு, கான்பூரை நோக்கிப் புறப்பட்டார். சுக்லா அங்கும் அவரைப் பின்தொடர்ந்தார். “சம்பாரண் இங்கேதான் அருகில் இருக்கிறது, எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்குங்கள்” என்று சுக்லா மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். சம்பாரண் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளூர இல்லாவிட்டாலும், இவ்வளவு வற்புறுத்துகிறாரே என்பதற்காக, “நேரம் இருந்தால் வருகிறேன்” என்று பதில் அளித்தார் காந்திஜி.

கான்பூரிலிருந்து ஆமதாபாத் நகரில் உள்ள தன்னுடைய ஆசிரமத்துக்குத் திரும்பிய காந்தி, ராஜ்குமார் சுக்லா அங்கும் வந்துவிட்டதைப் பார்த்தார். “சம்பாரண் வருவேன் என்று வாக்குறுதி தந்தீர்களே, அதைப் பற்றி முதலில் பேசுவோம்” என்றார் விடாக்கண்டரான சுக்லா. “வரும் ஏப்ரல் மாதம் கல்கத்தாவுக்கு வருவேன், அப்போது பிஹாருக்கும் வர முடியும்” என்றார் காந்திஜி.

தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவக்கூடிய ஒரே தலைவர் காந்திதான் என்று அடையாளம் கண்டுகொண்ட பிறகு, அவருடைய உதவியைப் பெறுவதில் விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொண்டார் சுக்லா. சம்பாரணுக்குத் திரும்பிய பிறகு, காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

`சம்பாரணில் உள்ள 19 லட்சம் ஒடுக்கப்பட்ட விவசாயிகளும் உங்களுடைய தாமரைப் பாதங்களைத் தரிசிக்க ஆவலாகக் காத்திருக்கின்றனர், அவர்கள் சாதாரண நம்பிக்கை அல்ல தளராத உறுதியே கொண்டிருக்கிறார்கள், நீங்கள் சம்பாரணில் கால் பதித்த உடனேயே தங்களுடைய பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று’ என அக்கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தார்.

1917 ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில் காந்திஜி இறுதியாக சம்பாரணுக்கு வந்தார். உள்ளூர் தலைவர்கள் காந்தியைச் சந்திக்கவும் காந்தியின் பயணத்துக்கும் தங்குதல்களுக்கும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். இந்தப் பயணம் காரணமாக அவுரி சாகுபடியாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க பல சலுகைகளை காந்திஜியால் பெற்றுத்தர முடிந்தது.

சம்பாரணில்தான் ஜே.பி. கிருபளானி, ராஜேந்திர பிரசாத் ஆகியோரை காந்திஜி முதல் முறையாகச் சந்தித்தார். சம்பாரணில் மேற்கொண்ட செயல்கள் மூலம்தான் வல்லபபாய் படேல், மகாதேவ் தேசாய் போன்றோரின் கவனத்தை ஈர்த்தார் காந்திஜி. கிருபளானி, பிரசாத், படேல், மகாதேவ் தேசாய் போன்றோர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பின்னாளில் பாராட்டப்பெற்றனர். சம்பாரணுக்கு மட்டும் காந்திஜி வரவில்லையென்றால், அவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே! இந்தியில் ‘சூத்ரதார்(ரி)’ என்ற வார்த்தைக்கு, ‘கட்டப்பட்ட நூல் கண்டு’, ‘அப்போதைய சூழலைச் சமாளிப்பவர்’, ‘விருந்தோம்பலை மேற்கொள்பவர்’ என்று சில பொருள்கள் உண்டு. ராஜ்குமார் சுக்லா இந்த எல்லாப் பொருள்களுக்கும் பொருத்தமான வேலைகளைச் செய்தவர். காந்திஜி தன்னுடைய தாய்நாட்டில் தொடங்கிய முதல் சத்தியாகிரகப் போரை வெற்றிகரமாக நடத்த உதவியர் ராஜ்குமார் சுக்லாதான் என்றால் மிகையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x