Published : 14 Jan 2017 11:54 AM
Last Updated : 14 Jan 2017 11:54 AM

நான் ஏன் வாசிக்கிறேன்? - ‘அனேகன்’ படத்துக்கு ப.சிங்காரம் உதவினார்: இயக்குநர் கே.வி. ஆனந்த்

சிறு வயதிலிருந்தே நான் அவ்வளவாக யாரிடமும் பழக மாட்டேன். ஆகவே, நான் தெரிந்துகொண்ட விஷயங்கள் அனைத்துமே புத்தக வாசிப்பின் மூலமாகத்தான். சிறு வயதில் அம்புலிமாமா, துப்பறியும் சாம்பு, தமிழ்வாணனின் கதைகள் எனத் தொடங்கி, வாரப் பத்திரிகைகளில் எழுதும் சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, சுஜாதாவின் எழுத்துகளை ரொம்ப ஈடுபாட்டோடு படித்துள்ளேன். ஜெயகாந்தன், ஜானகிராமன், ர.சு. நல்லபெருமாள் புத்தகங்களையும் மிகுந்த ஈடுபாட்டுடன் படித்திருக்கிறேன். இவை எல்லாமே கல்லூரிக் காலத்தில்தான். அதற்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒளிப்பதிவுக்குள் போய்விட்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், அமெரிக்கன் நூலகம் ஆகியவற்றில் நிறைய புத்தகங்கள் படித்தே புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டேன். இந்தக் கலையுடன் தொடர்புடைய மற்ற கலைகளைக் கற்றுக்கொள்வதற்காகத்தான் ‘காட்சித் தொடர்பியல்’ படிப்பில் சேர்ந்தேன்.

பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்து, பிறகு ஒளிப்பதிவாளராக ஆனதெல்லாம் இயல்பாக நடந்தது என்று சொல்லலாம். ஆனால், இயக்குநராகி ஒருசில வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியக் காரணம் நான் படித்த புத்தகங்கள்தான். ஒரு கதையில், ஒரு காட்சியமைப்பை உருவாக்குகிறேன் என்றால், அதற்குக் காரணம் புத்தகங்களே. ‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற பர்மாவின் காட்சிகள் அனைத்துமே சிங்காரம் எழுதிய புத்தகங்களில் படித்ததுதான்.

தற்போது எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன் ஆகியோரின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். தற்போது நடைபெறும் புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். எனக்குச் சிறு வயதிலிருந்தே தோட்டக் கலையில் குறிப்பாக, மாடித் தோட்டத்தில் ஆர்வம் அதிகம். ஆகவே, இயற்கை வேளாண்மை சார்ந்த புத்தகங்கள் நிறைய வாங்கினேன். ஜப்பானிய வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற புத்தகத்தைப் படித்து வருகிறேன்.

அந்தப் புத்தகம் வேளாண்மையைப் பற்றியது மட்டுமல்ல; உலகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நாம் உருவாக்கவில்லை, பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். விவசாயத் தைப் பற்றிப் பேசும்போது, அதனிடையே பல தத்துவங்களையும் சொல்கிறார். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று. ‘தி இந்து’ வெளியீடுகளான ‘எம்.எஸ் நீங்காத நினைவுகள்’, ‘என்னைச் செதுக்கிய மாணவர்கள்’, ‘பதின் பருவம் புதிர் பருவமா?’ போன்ற நூல்களையும் வாங்கியிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x