Published : 14 Sep 2016 09:56 AM
Last Updated : 14 Sep 2016 09:56 AM

பிஹார் அரசுக்கு புதிதாக வந்துள்ள ‘ஜாமீன்’ தலைவலி!

முகம்மது சகாபுதீன் தான் பிஹாரின் குற்ற அரசியல்வாதிகளில் நம்பர் ஒன். கடந்த 2005-ல் அவர் கைதானபோதும் பெரிய செய்திதான். 11 ஆண்டுகளுக்குப் பின் ஜாமீன் பெற்றதும் பெரிய செய்திதான். நூற்றுக்கணக்கான கார்கள், ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் என அவரை பாகல்பூர் சிறை வாசலில் வரவேற்கத் திரண்ட கூட்டம் நீளமானது. சகாபுதீனின் சொந்த மாவட்டமான சிவான் வரை, 60 கி.மீ. தொலைவுக்கு அலங்கார வரவேற்பு வளைவுகள் மயம். இதுபோன்ற காட்சிகளைத் திரைப்படங்களிலும் காண முடியாது.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், சட்ட விரோத ஆயுதங்கள் பயன்பாடு, கலவரம் தூண்டுதல் மற்றும் வனவிலங்கு வேட்டை உட்படச் சுமார் 40 குற்ற வழக்குகள் அவர் மீது. ஏகப்பட்ட ஜாமீன்களுடன் அவற்றைச் சந்தித்துவந்தவர் அவர். கிரீஷ்ராஜ் மற்றும் சதீஷ்ராஜ் எனும் சகோதரர்களை அமிலத்தில் மூழ்கடித்துக் கொன்ற வழக்கும் அதில் ஒன்று. இவர்களின் சகோதரரும் ஒரே சாட்சியுமான ராஜீவ் ரோஷனும் கொல்லப்பட்டார். அந்த வழக்கும் சகாபுதீன் மீதுதான் பதிவானது. இதனால், அவர் மீதான ஜாமீன் ரத்தானது. அதன் பிறகு, அவர் சிறைக்குள் போய்விட்டார். இவர் சிறையில் இருந்தபோது கொல்லப்பட்ட பத்திரிகையாளரான ராஜ்தேவ் ரஞ்சன் வழக்கிலும் சகாபுதீன் மீது புகார் எழுந்தது. ரஞ்சனின் மனைவி ஆஷா தேவி, இவர் மீது சிபிஐ விசாரணை கேட்டு டெல்லியில் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

11 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, பாட்னா உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் பெற்றுள்ளார் இவர். லாலு பிரசாத் யாதவின் ஆதரவாளர் என்பதால்தான் இவருக்கு ஜாமீன் கிடைத்தது என்கிறது பாஜக. தன் மூன்று மகன்களை இழந்த 70 வயது தந்தையான சந்திரகேஷ்வர் பிரசாத்துக்கு நீதிமன்றம் மீதே நம்பிக்கையில்லை.

‘பிஹாரின் திகில் மனிதர்’ சகாபுதீன், சிவான் பகுதியின் எம்எல்ஏவாக இரு முறையும் எம்பியாக நான்கு முறையும் இருந்தவர். குற்றவாளிகள் சிறையில் இருந்தபடியே போட்டியிடும் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததும் இவர்தான். சகாபுதீனைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் இரு போலீஸார் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். சகாபுதீன் ஏகே-47 துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் வைத்துச் சண்டை போடுவார்.

கடந்த சனிக்கிழமை சிறையிலிருந்து விடுதலை யான சகாபுதீன், ‘‘சந்தர்ப்பச் சூழல் காரணமாக நிதிஷ்குமார் முதலமைச்சராகி உள்ளார். அவரது செல்வாக்கால் 20 தொகுதிகளில்கூட வெற்றி பெற முடியாது’’ என்று சொல்லிவிட்டார். இதைத் தொடர்ந்து நிதிஷ் மற்றும் லாலு கட்சியினரிடையே மோதல் கிளம்பிவிட்டது. தற்போது, லாலுவின் தலையீட்டால், தன் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்லி சகாபுதீன் ‘பல்டி’அடித்துள்ளார். பிஹாரை ஆளும் லாலு-நிதிஷ் கூட்டணிக்குப் புதிய தலைவலி முளைத்தாயிற்று!

தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x