Published : 16 Mar 2017 09:08 AM
Last Updated : 16 Mar 2017 09:08 AM

முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்!

முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்… ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சிசெய்தும், தமிழ்நாட்டிலேயே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.

ஏனென்றால், இத்தனை காலம் இங்கே நான் ஆட்சிசெய்தும் தமிழ்நாட்டு மாணவர்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அல்லது பின்தங்கிய சூழல்களிருந்து வரும் மாணவர்கள் பயமின்றி உலகின் பல இடங்களுக்குச் சென்று படிக் கவோ வேலைசெய்யவோ உரிய சூழலை நான் ஏற்படுத்தாமல் போனேன். இன்னமும் முத்துகிருஷ்ணன்கள் தமிழகத்திலிருந்து வெளி யேறும்போது - குறிப்பாக, சாம்ராஜ்ய ராஜதானி யான புது டெல்லி போன்ற இடங்களுக்குப் போகும்போது தங்களுடைய சாதி, மொழி, உடல் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை களோடுதான் செல்கிறார்கள். அவர்கள் தன்னம் பிக்கை மிக்கவர்களாகவும் தமது அடையாளங் கள் குறித்த விஷயத்தில் நாம் யாருக்கும் இளைத் தவர்கள் இல்லை. என்று அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து நடக்கக் கூடியவர்களாகவும் மதிப்போடு பார்க்கப் படுபவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அதை நான் உத்தரவாதப்படுத்த மறுத்தேன்.

ஏனென்றால், என் பிள்ளைகள் ஐஐடியிலும் அமெரிக்காவிலும் படித்தால் போதும், தலித் பிள்ளைகள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைத்தேன். அக்கிரகாரம் வரை வந்த பஸ், என் வீதி அதிலும் என் வீடு வரை - வந்தால் போதும் என்று நினைத்தேன்.

ஏனென்றால், நான் என் கிராமத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்று, பாடங்களை நன்கு புரிந்து, தேர்வில் வெற்றிபெற்று, பிறகு வாழ்க்கையில் உயர்ந்தேன் என்கிற ரகசியத்தை வெளியே சொல்ல மறுத்தேன். இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி, மூப்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர்கள், இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அதியுயர் அறிவியல் நிறுவனங்களில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து உயர்ந்தவர்கள். அன்று அவர்களுக்கு அப்படிப்பட்ட கல்வி தரப்பட்டது. ஆனால், ஊரிலிருந்து நகரத்துக்கு நான் புலம்பெயர்ந்தபோது, அந்தக் கல்வியை அங்கே வெட்டிக் கொல்லுமாறு பணித்தேன். அந்த மொழியைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசுமாறு செய்தேன். இனிவரும் காலங்களில் கிராமத்துக் குழந்தைகளும் சிறுநகரக் குழந்தைகளும் மாநகரங்களின் கார்ப்பரேஷன் பள்ளிக் குழந்தைகளும், மறந்தும் தங்கள் வாய்களைத் திறந்து தமிழில் ஓர் வார்த்தை சொன்னால், அந்தப் பிஞ்சு இதழ்களின்மீது அடியுங்கள் என்று சொன்னேன். அவர்களின் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் அதில் நொறுங்கிப்போகுமே என்று நான் கவலைப் படவில்லை. அரசுப் பள்ளிகளின் அத்தனை நல்ல அம்சங்களையும் அழிக்க ஆங்கிலம் என்ற கருவியைப் பயன்படுத்தினேன். கிராமத்தில் உள்ளவர்கள் அச்சமின்றிப் படிப்பதற்கான சூழலை நான் அழித்தேன். இவ்வளவும் செய்த பிறகு, அவர்களுக்கு நல்ல ஆங்கிலக் கல்வி அளிக்காதவாறும் பார்த்துக்கொண்டேன்!

ஏனென்றால், நான் கிராமத்தில் நன்கு படித்து, நகரத்துக்குச் சென்று வாழ்க்கையில் வெற்றிபெற்ற பிறகு, என் கிராமத்தின்மீது நான் தாக்கம் செலுத்தினேன். நான் என் சிறுநகரத்தில் அரசுப் பள்ளியில் படித்தபோது, கட்டணங்கள் பெரிதுமின்றி, அருமையான ஆசிரியர்களுடன் விளையாட்டும் படிப்புமாய் கனவுபோன்ற விரிந்த ஒரு சூழலில் படித்தேன். ஆனால், என் தாக்கத்தினூடாக அந்தக் கல்விச்சூழலைக் கரும்பலகை எழுத்தைப் போல ஆதிக்க டஸ்டர் கொண்டு அழித்தேன். ஆசிரியர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்குச் செல்லுமாறு வழிசெய்தேன். ஊரின் அனைத்து மேட்டுத் தெரு குழந்தைகளும் அரசுப் பள்ளிகள் பக்கம் மழைக்கும் ஒதுங்காமல் பார்த்துக்கொண்டேன்.

ஏனென்றால், ஒரு வியாபாரியாக நான் சிலவற்றை அறிந்தேன். கல்வியில் காசு பார்க்க வேண்டும் என்றால், கல்வியை அரிதான ஒன்றாக மாற்ற வேண்டும் என நான் அறிந்தேன். நான் படிக்கத் தொடங்கிய காலத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த கல்விச்சூழல் தமிழ்நாட்டில் இருந்தது. காமராசரும் அண்ணாவும் எனக்கு அதைப் பெற்றுத்தந்தார்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அப்போது அதை ஊட்டி வளர்த்தார்கள். ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்து ஊரை விட்டு வெளியேறும்போது, இனி உங்கள் சேவை எங்களுக்குத் தேவை யில்லை என்று தலைவர்களிடம் சொல்லி விட்டேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார் கள். நான் கல்வித் தொழில்முனைவோராக ஆவதென்று முடிவுசெய்தவுடன், அதே கருணாநிதியையும் எம்ஜிஆரையும் ஜெயலலிதா வையும் வசப்படுத்தி, அரசுப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் சீரழிக்கும்படிசெய்ய நானே ஏற்பாடுசெய்தேன். பின்பு, எல்கேஜிக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க ஏற்பாடு செய்ததால், உயர் கல்விக்கு மக்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாரானார்கள்.

ஏனென்றால், நான் கல்வியைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். இனி எனது நோக்கம் ஐம்பது கோடி ரூபாய்க்குத் துணைவேந்தர் பதவிகளை விற்பது மட்டுமே. எனது நோக்கம், கிராமப்புற மாணவர்கள் குறித்து ‘அய்யோ.. குய்யோ’ என்று கண்ணீர் வடித்துக்கொண்டே, கிராமப்புறப் பள்ளிகளை மூடுவதே. எனது நோக்கம், சந்தடிசாக்கில் தமிழகத்தில் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளை மூலைக்கு மூலை நிறுவிக் கொள்ளையடிப்பதை ஊக்குவிப்பதே. எனது நோக்கம், சாதாரண மக்களுக்கு உயர்தரக் கல்வியை எட்டாக் கனியாக ஆக்கி, அதன் மூலம் கல்வி வணிகத்தைப் பெரிதாக்கி, அதில் என் பங்கைக் கேட்பதே. எனது நோக்கம், பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை லாபவெறியைத் தவிர, வேறு இல்லை என்பதைக் கேள்விக்கிடமற்ற யதார்த்தமாக ஆக்குவதே. எனது நோக்கம், நான் பெற்ற இன்பம் நீ பெறாமல் இருக்கும்படி செய்வதே.

ஏனென்றால், இவை அனைத்தினும் மிக முக்கியமாக, முத்துகிருஷ்ணன்களுக்கான அதிகாரம், முத்துகிருஷ்ணன்களிடம் இருப்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. முத்துகிருஷ்ணனுக்கு அதிகாரம் இருந்தால், அவர் அவரது சூழலுக்கேற்பக் கல்வித் திட்டம் போடுவார்; நான் என் சூழலுக்கேற்ப திட்டமிட்டதைப் போல. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? கேளுங்களேன், முத்துகிருஷ்ணனுக்குக் கல்வி தொடர்பாக நான் என்னென்ன நன்மைசெய்தேன்! அதைக் கொண்டு அவர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். குரூப் 4 வேலையைப் பற்றி மட்டும் கவலைப்பட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், நான் எச்1பி விசாவைப் பற்றிக் கவலைப்படும் இடத்துக்கு வந்துவிட்டேன். புதிய இந்தியனாக ஆகிவிட்டேன். எனக்கு இனி சமூக நீதியோ மொழியோ நில உரிமையோ இறையாண்மையோ தேவையில்லை. இந்த அகண்ட இந்துஸ்தானத்தில், நான் யாரோடு இணைந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பரந்த உலகில் நான் யாராக இருக்கிறேன் என்று அறிந்திருக்கிறேன்.

ஏனென்றால், முத்துகிருஷ்ணனும் ரோஹித் வெமுலாவும் என் சாதியினர் அல்லர். அதுமட்டுமல்ல, அவர்கள் என்னைக் கேள்வியும் கேட்கிறார்கள்.

எனவே, முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்.

- ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x