Last Updated : 06 Feb, 2017 10:31 AM

 

Published : 06 Feb 2017 10:31 AM
Last Updated : 06 Feb 2017 10:31 AM

நிதி ஆயோக் கூட விவாதிக்காத பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து அதைப் பற்றிய விவாதம் தொடங்கும். பல ஆண்டுகளாக நடைபெறும் வழக்கமான நடைமுறை இது. சுதந்திர இந்தியாவில் தொடக்கம் முதலே பட்ஜெட் பற்றிய பொதுவிவாதம் இருந்துவருகிறது. ஆனால், 1990-க்குப் பிறகு பட்ஜெட் தொடர்பான விவாதம் மேலும் வளர்ந்துள்ளது.

மக்களின் பொருளாதார அறிவு வளர்ச்சியும் இதற்கு முக்கியக் காரணம். தொலைக்காட்சிகள், இணையதள ஊடகங்களும் இன்னொரு முக்கியக் காரணம். பட்ஜெட் பற்றிய செய்திகளை ரகசியமாக வைத்திருப்பது ஒரு மரபு. அதனாலும் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தொடர்பாகப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிறது.

பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத் துவதற்கு என்று தனிச் சட்டம் இருக்கிறது. கல்விக்காகப் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் ஆகியவைதான் பட்ஜெட் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. பட்ஜெட் செலவுகள்தான் ஓரளவுக்கு அரசின் நிலைப்பாட்டை நமக்கு வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கின்றன. இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

குறிப்பாக, பணமதிப்பு நீக்கம் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசிடமிருந்து விரிவாக அறிய மக்கள் ஆர்வமாக இருந்தனர். மேலும், அரசு எதிர்பார்த்ததுபோல கறுப்புப் பணத்தை ஒழித்ததா? அப்படியானால், அதன் மூலம் பெறப்படும் கூடுதல் வருவாய் எவ்வாறு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அறிய ஆவலாக இருந்தனர். இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

பட்ஜெட் தாக்கல் இந்த ஆண்டு முதல் இனி ஒரு மாதத்துக்கு முன்னதாகவே இருக்கும். இனிமேல் ரயில்வே பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்யப்பட மாட்டாது. பொதுச் செலவுத் திட்டம், திட்டமல்லாத செலவுகள் என்ற பிரிவுகள் இருக்காது. பட்ஜெட் ஒரு விவாதப் பொருளாக இருக்க வேண்டிய நிலையை நாம் இழந் திருக்கிறோம். 25 ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் சந்தை தொடர்பான பொருளாதாரக் கொள்கைகளே அதற்குக் காரணம்.

பட்ஜெட்டின் தத்துவம் என்ன?

2017-18-ம் ஆண்டின் பட்ஜெட்டில் பொதுச்செலவுகள் ரூ. 21,46,735 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2016-17-ன் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடான ரூ. 20,14,407 கோடியை விட 6.6% அதிகம். பொதுவாக, அரசின் வருவாய் மற்றும் செலவுகளை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இந்த வகையில் 2016-17-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 13.26% இருந்த பொதுச்செலவு, 2017-18-ல் 12.74% ஆகக் குறையும் என்று தெரிகிறது.

இதனால், ‘சிறிய அரசே சிறந்த அரசு’ என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு நினைப்பது புலனாகிறது. பட்ஜெட் பற்றாக்குறை நாட்டின் உற்பத்தி மதிப்பில் 3.5% இருந்து 3.2%ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. இது எப்படிச் சாத்தியம் ஆனது? மொத்த நிதி வருவாய் 9.74% இருந்து 9.50% ஆகக் குறைந்தபோதிலும் அதைவிட அதிக அளவில் பொதுச் செலவை அரசு குறைத்துள்ளது. எனவே, மக்களிடமிருந்து வருவாய் பெறுவதைக் குறைத்து, அதைவிட அதிகமாகவே பொதுச்செலவுகளைக் குறைப்பதன் மூலம், பணத்தை அரசு செலவுசெய்வதைவிட, தனியார் துறை சிறப்பாகச் செலவு செய்யும் என்று மத்திய அரசு நினைக்கிறது. சந்தை தொடர்பான இந்தப் பொருளாதாரத் தத்துவம், 1990-களிலிருந்து எல்லா மத்திய மாநில அரசுகளிலும் இருந்துவருகிறது.

கூட்டுறவுக் கூட்டாட்சி நிதியியல்

பொதுச் செலவுகளை திட்டம், திட்டமல்லாத செலவுகள் என்று பிரிப்பது இந்தப் பட்ஜெட் முதல் நிறுத்தப்படுகிறது. மத்தியில் திட்டக் குழு கலைக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். திட்டக் குழுவானது ஜனநாயகம் அற்ற, பொருளாதாரக் கொள்கை மற்றும் நிர்வாகத்தை மையப்படுத்தும் நேரு காலத்து முயற்சியின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதில் நிதி ஆயோக் என்ற ஆலோசனைக் குழுவை உருவாக்கி, திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒரு மாநில அரசு, மத்திய அரசின் திட்டங் களை எப்படி நிறைவேற்றுகிறது, அதன் மக்கள் தொகை எவ்வளவு உள்ளிட்ட காரணங்களை வைத்து, அதனடிப்படையில் மத்திய அரசு, மாநிலங்களுக்குத் தனது நிதியிலிருந்து கொடை அளிக்க வேண்டும் என்பது காட்கில் - முகர்ஜி ஃபார்முலா (திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்த தனஞ்செய் ராமசந்திர காட்கில் மற்றும் பிரணாப் முகர்ஜி உருவாக்கிய ஃபார்முலா). அதன் அடிப்படையில், கொடை வழங்கும்போது மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாரபட்சம் பார்க்க முடியாது.

மொத்தக் கொடையில் 70% முகர்ஜி ஃபார்முலா அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த மட்டுமே மாநிலங்களுக்குக் கொடை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் சில மாநிலங்களுக்குக் கொடை அளிப்பதில் பாரபட்சமாக மத்திய அரசு நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

கூட்டுறவு, கூட்டாட்சி என்று கூறிக்கொண்டு, எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்களையும் நிதி ஆயோக்கின் உறுப்பினர்களாக மத்திய அரசு ஆக்கியது. ஆனால், நிதி ஆயோக்கில் கூட விவாதிக்காமல் இந்த முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது இந்தியாவில் கூட்டுறவு, கூட்டாட்சி எவ்வாறு வளர்த்தெடுக்கப் படுகிறது என்பதைத் தெரியப்படுத்துகிறது.

14-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி 2015-16 முதல் மத்திய அரசு தனது வரிவருவாயில் 42% மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவருகிறது. இதனால் மத்திய அரசிடம் இருக்கும் மீதமுள்ள நிகர வரி வருவாய் குறைந்தது. இதனைச் சரி செய்ய மத்திய அரசு முயன்று வந்துள்ளது. அதாவது, மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கமுடியாத அளவில் தனது வருவாயை அதிகரித்துள்ளது. இதனால் 2015-16 முதல் மத்திய அரசின் மொத்த வருவாயில் மாநிலங்களுக்குக் கொடுத்த கொடைகள் மற்றும் வரிகளுக்கான பங்குகள் எல்லாம் சேர்ந்து 47% என்ற அளவிலே தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து தனது அதிகார எல்லைக்கு உட்பட்ட செலவுகளைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றையும் ஒருமித்துப் பார்க்கும்போது பட்ஜெட் 2017 என்பது டெல்லியில் ஆட்சியிலிருந்த பல அரசுகள் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சிதான். இந்தப் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அம்சம், அரசு உள்ளிட்ட பொதுத் துறையின் அளவைக் குறைப்பதுதான். ஆனால், ஒருபுறத்தில் கூட்டுறவு, கூட்டாட்சி என்று சொல்லுவது, மறுபுறத்தில் மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடையில் பாரபட்சம் காட்டுவது போன்ற நடவடிக்கைகள்தான் புதியவை. பொருளாதாரக் கொள்கையைத் திட்டமிடுவதில் மீண்டும் அதிகாரத்தை மையப்படுத்துவதற்குத்தான் இந்தப் போக்கு கொண்டு செல்லும். அத்தகைய திசையில் செல்லும் பட்ஜெட் இது!

- இராம.சீனுவாசன், துணைப் பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x