Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

எல்லை கடந்த தலைவர்

நெல்சன் மண்டேலாவின் மறைவு உலக வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவு. லெனின், ஸ்டாலின், மாவோ, சே குவேரா ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தவிர்த்துப் பார்த்தால், காந்திக்குப் பிறகு நாடு என்ற எல்லையைக் கடந்து உலகம் முழுவதிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட தலைவர் மண்டேலா.

காந்திய வழி?

உலக மக்கள் மீதான இவரது செல்வாக்கு, சித்தாந்த எல்லைகளைக் கடந்ததாக இருந்தது. உலக மக்களால் மகத்தான தலைவராக இவர் போற்றப்படுவதற்கான காரணம், தான் நேசித்த மக்களின் சுதந்திரத்துக்காகத் தனது சுதந்திரத்தைத் தியாகம் செய்தவர் என்பது மட்டுமல்ல, தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலையைச் சாதித்த வழிமுறைகளாலும் அல்ல. ஏனெனில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் சுதந்திரப் போராட்டம் முழுமையான காந்திய வழியில் அமைந்தது அல்ல.

27 ஆண்டுகள் கொடும் சிறைவாசத்துக்குப் பிறகு, சுதந்திர தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தலில் வென்று, தென்னாப்பிரிக்க அரசின் தலைவரானபோது, வெள்ளை இன மக்களிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், மக்களாட்சிகுறித்த அவரது புரிதலும், தொலைநோக்கும்தான் அவர் எத்தகைய மகத்தான தலைவர் என்பதைக் காட்டுகிறது. இங்குதான் அவர் காந்திய வழியை முழுமையாகப் பின்பற்றுகிறார்.

தங்கள் மக்களின் சுதந்திரத்துக்காக, நல்வாழ்வுக்காகப் பெரும் தியாகங்கள் செய்து, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா வழிமுறைகளையும் கையாளும் தலைவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மண்டேலா. அவர் உயிருடன் இருக்கும்வரை பதவியில் தொடர்ந்திருக்க முடியும் என்றாலும், இரண்டாம் முறையாகத் தேர்தலில் நிற்கவே மறுத்துவிட்டார். அமைதிக்கான நோபல் பரிசு உட்பட உலக நாடுகள் பலவற்றின் உயர்ந்தபட்ச விருதுகள் அவருக்குக் குவிந்தன. மண்டேலா அளவுக்கு ஏராளமான சர்வதேச விருதுகளைப் பெற்ற தலைவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது அவரது மகத்துவத்துக்கான ஒரு சிறு சான்று.

கம்யூனிஸ்ட் கட்சியில்...

தொடக்க காலத்தில் காந்தியின் அகிம்சை வழியை ஏற்றிருந்த மண்டேலா, பின்னர் அதைக் கைவிட்டு, ஆ.தே.கா-வின் அன்றைய தலைவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிய குழு ஒன்றை அமைத்தார். காந்தியின் அணுகுமுறையை அன்றைய ஆ.தே.கா. ஏற்றிருந்ததை எதிர்த்த தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, ஆயுதம் தாங்கிய போராட்டம் என்ற தனது வழிமுறையை சுதந்திரப் போராட்டத்தில் மண்டேலாவின் உதவியுடன், தலைமையுடன் புகுத்தியது. அப்போது மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக, அதிலும் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தார். அது ஒரு மிகக் குறுகிய, ஓராண்டுகூட நீடிக்காத காலகட்டம். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியபோதிலும் கம்யூனிஸ்ட்டுகளுடனான தனது நெருக்கமான உறவையோ, ஆயுதம் தாங்கிய போராட்டத்தையோ அவர் கைவிடவில்லை.

அகிம்சை - ஒரு போராட்ட உத்தி

ஹிட்லரின் இனப் படுகொலையை யூதர்கள் எப்படி எதிர்கொள்வது என்று கேட்டபோது, ‘‘யூதர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதுவே ஹிட்லரின், ஜெர்மன் மக்களின் மனசாட்சியை உலுக்குவதாக அமையும்’’ என்றவர் காந்தி. அவருக்கு அகிம்சை ஒரு முழுமுதலான, தார்மீகக் கோட்பாடு. காந்தியை முழுமையாக ஏற்ற மார்ட்டின் லூதர் கிங்குக்கோ அகிம்சை வழி ஒரு தார்மீகக் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு போராட்ட உத்தியும்கூட. ‘15 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் கருப்பின மக்கள், நீதிக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுவது என்பது தற்கொலைக்குச் சமம்’ என்று கிங் கருதினார். மண்டேலாவைப் பொறுத்தவரை அது ஒரு போராட்ட உத்தி மட்டுமே.

நீங்கள் பின்பற்றும் அதே விதிமுறைகளை உங்களது எதிராளியும் பின்பற்றும்போதுதான் அகிம்சை வழியிலான போராட்டம் சாத்தியம். ஒரு சுதந்திரப் போராட்டத்தின் வழிமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது, ஒடுக்குபவர்களின் வழிமுறைகள்தான் என்பது மண்டேலாவின் புரிதல். வன்முறையை ஆ.தே.கா. முழுமையாகக் கைவிட ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், மண்டேலாவைச் சிறையிலிருந்து விடுவிப்பதாக நிறவெறி அரசு 1980-களின் மத்தியில் கூறியபோது, மண்டேலா அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும், ஆ.தே.கா. போராட்டங்கள் பெருமளவுக்கு அமைதியான வழிமுறைகளையே கொண்டிருந்ததை மறுக்க முடியாது.

சமத்துவமும் சுதந்திரமும்

1990-ல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, தானும் ஆயிரக் கணக்கான தனது தோழர்களும் அனுபவித்த கொடுமைகளை முற்றிலும் மறந்து 1994-ல் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி அமைந்தபோது, எந்த விதமான கசப்புணர்வும் பழிவாங்கல் உணர்வும் இல்லாமல் எல்லா இன மக்களின் உரிமைகளையும் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் ஆட்சியை மண்டேலா வழங்கினார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது காட்டிய பெருந்தன்மை அசாதாரணமானது.

தான் 18 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த, சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கப் பணிக்கப்பட்டிருந்த (அதனால் மண்டேலாவின் கண் பார்வை நிரந்தரப் பாதிப்புக்குள்ளானது) மிகக் கொடூரமான சிறைச்சாலையான ராபென் தீவு சிறையின் அதிகாரியைத் தனது பதவியேற்புக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். ரிவோனியா வழக்கில் (மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனையைப் பெற்றுத்தந்த வழக்கு) தனக்கு மரண தண்டனை வாங்கித்தர மிகவும் போராடிய அரசு வழக்கறிஞரையும் விருந்துக்கு அழைத்திருந்தார். நிறவெறி ஆட்சிக் காலத்தில் நடந்த கொடூரங்களுக்கு, அவற்றை இழைத்தவர்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கியிருந்தால், அதை யாரும் இம்மியும் தவறாகப் பார்த்திருக்க முடியாது. ஆனால், ‘உண்மை, நல்லிணக்க ஆணையம்’ அமைத்ததன் மூலம் வெள்ளை மற்றும் கருப்பின மக்களிடையே கசப்புணர்வு வராமல் பார்த்துக்கொண்டார். அத்துடன், தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் தென்னாப்பிரிக்காவில் சிறந்த ஜனநாயக மாண்புகள் நன்றாக வேர்கொள்வதையும் உறுதிசெய்தார்.

மக்களுக்காக இழந்தவை

தனது மக்களின் சுதந்திரத்துக்காக மண்டேலா இழந்தது மிக அதிகம். அவரே குறிப்பிட்டது போல, ‘‘எனது மக்களுக்கான எனது கடமையின் காரணமாக, நான் என்றைக்குமே (நேரில்) சந்திக்க முடியாத, அறிய முடியாத கோடிக் கணக்கான தென்னாப்பிரிக்கர்களுக்காக நான் மிகவும் நெருக்கமாக அறிந்திருந்த, நேசித்திருந்த மக்களை இழந்தேன்.” அமைதியான குடும்ப வாழ்வுக்காக ஏங்கிய மனிதர் மண்டேலா. ஆனால், அது அவருக்கு வாய்க்கவே இல்லை. முதல் இரண்டு திருமணங்களும் பிரிவில் முடிந்தன. குறிப்பாக, வின்னியுடனான இரண்டாவது திருமணம், அவரது மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவதில் முடிந்தது. ஆனால், எப்போதும் யார்மீதும் காழ்ப்புணர்வையோ கசப்புணர்வையோ அவர் வளர்த்துக்கொள்ளவே இல்லை. அது தனி வாழ்விலாக இருந்தாலும் சரி, பொதுவாழ்விலாக இருந்தாலும் சரி.

க. திருநாவுக்கரசு,
அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x