Published : 27 Jun 2017 09:16 AM
Last Updated : 27 Jun 2017 09:16 AM

குடியரசுத் தலைவர்களும் சர்ச்சைகளும்!

பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுகின்ற நாடாளுமன்ற ஜனநாயக நாடு இந்தியா. அமெரிக்கா, பிரான்ஸைப் போல நேரடித் தேர்தலின்றி, இங்கு மறைமுகத் தேர்தலின் மூலமாகவே குடியரசுத் தலைவர் தேர்வுசெய்யப்படுகிறார். அவரது அதிகாரம் ‘இருக்கு.. ஆனா இல்லை’ ரகம். சர்ச்சைகளுக்கும் குறைவில்லாத பதவி இது. விடுதலைக்குப் பின், ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க வேண்டுமென்று முயன்றார் நேரு. ஆனால், கட்சியில் ராஜேந்திர பிரசாத்துக்கு ஆதரவான நிலை இருந்ததால், அவரையே குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொண்டார் நேரு. கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு எப்படி மதிப்பளிப்பவராக நேரு இருந்தார் என்பதற்கு உதாரணம் அது.

பனிப் போர் தொடங்கியது

நாடு விடுதலை பெற்ற பின் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமா, பிரதமருக்கு அதிகாரமா என்ற சர்ச்சை எழுந்தது. குடியரசுத் தலைவருக்கே உச்சபட்ச அதிகாரங்கள் உள்ளன என்று 18.09.51-ல் நேருவுக்குக் கடிதம் எழுதினார் ராஜேந்திர பிரசாத். ஏற்கெனவே, அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளையெல்லாம் எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியையும் 21.03.1950-ல் அவர் எழுப்பியிருந்தார். நேருவுக்கும் ராஜேந்திர பிரசாதுக்குமிடையே இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்தன. ‘இந்து மதச் சீர்திருத்தச் சட்டம்’ தொடர்பாக இருவரிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. டெல்லியில், ‘இந்திய சட்ட நிறுவன’த்தின் தொடக்க விழாவில் இதுகுறித்து குடியரசுத் தலைவர் கடுமையாகப் பேசியதுண்டு. ‘சர்ச்சைக்குரிய சோம்நாத் கோயிலுக்குச் செல்வதைக் குடியரசுத் தலைவர் தவிர்க்க வேண்டும்’ என்று நேரு கடுமையான குறிப்புகளை ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பியதும் உண்டு. இந்தியக் குடியரசுத் தலைவர் மதச்சார்பின்மையின் உதாரணமாகத் திகழ வேண்டும் என்பது நேருவின் விருப்பம். அங்கு குடியரசுத் தலைவராக அல்ல, சாதாரண பிரஜையாகத்தான் செல்ல வேண்டும் என்பது அவரின் எண்ணம்.

குடியரசுத் தலைவர் - பிரதமர் அதிகார வரம்புகளைக் குறித்த பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்று, இந்திய தலைமை வழக்கறிஞர் செட்டுல்வார்டு சட்ட ஆலோசனைகளை வழங்கியதும் உண்டு. விடுதலை பெற்றவுடன் தொடக்கத்திலேயே இப்படியான பனிப் போர் ஏற்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1962 சீனப் போர் பிரச்சினையிலும், பாதுகாப்பு வாகனங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் விவகாரத்திலும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனைப் பதவி விலக வேண்டுமென்று நேருவிடம் நேரடியாக வலியுறுத்தினார். இதன் விளைவாக, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே மனவருத்தங்கள் ஏற்பட்டன. தூக்குத் தண்டனைக் கைதிகள் விவகாரத்தில் கருணை மனுக்களைத் தினமும் பெற்று உடனுக்குடன் ராதாகிருஷ்ணன் பைசல் செய்ததை நேரு விரும்பவில்லை.

இந்திரா காந்தி காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன், வி.வி. கிரி, பக்ருதீன் அலி அகமது ஆகியோர் ஆட்சியை அனுசரித்துச் சென்றனர். நெருக்கடிநிலை காலத்தில் பக்ருதீன் அலி அகமது நடந்துகொண்ட முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. வி.வி. கிரி தன்னுடைய பதவிக் காலம் நிறைவுபெற்றுச் சென்றபோது, அவரது குடும்பத்தார் லாரிகள் நிறைய ராஷ்டிரபதி பவனிலிருந்து பொருட்களை எடுத்துப் போய்விட்டார்கள். அசோகச் சக்கரம் பொறித்த இருக்கையையும் எடுத்துச் செல்ல முயன்றபோது, அவரது துணைவியாரிடம் போராடி ராஷ்டிரபதி பவன் அதிகாரிகள் திரும்பப் பெற்றனர். ஜனதா ஆட்சிக் காலத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்தபோது சஞ்சீவ ரெட்டி இந்திரா காந்திக்கு ஆதரவு நிலையை எடுத்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதே சஞ்சீவ ரெட்டி வி.வி.கிரியை எதிர்த்து 1969-ல் போட்டியிட்டபோது, இந்திரா காந்தி ரெட்டியை நிராகரித்ததால் காங்கிரஸ் பிளவுபட்டது.

ராஜீவ் - ஜெயில் சிங் மோதல்

சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவராக ஜெயில் சிங் பொறுப்பேற்றது முதல், இந்திரா காந்தி மறையும் வரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி பிரதமர் பொறுப்புக்கு வந்தவுடன் முட்டல், மோதல் துவங்கியது. ராஜீவ் அரசு பரிபாலனங்களைக் குறித்துத் தன்னிடம் சொல்வதில்லை என ஜெயில் சிங் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அஞ்சல் நிலைய மசோதாவை அவர் 1986-ல் திருப்பி அனுப்பியதால் சர்ச்சைகள் நிகழ்ந்தன. சீக்கியர் பிரச்சினையில் ஜெயில் சிங்கின் அணுகுமுறை வேதனை தருகிறது என ராஜீவ் குறிப்பிட்டதுண்டு. இதுதொடர்பாக ராஜீவும், ஜெயில் சிங்கும் அமர்ந்து பேசியும் முழுமையான இணக்கம் ஏற்படவில்லை. ஆர்.வெங்கட்ராமன் 1991-ல் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய மசோதாவைக் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துத் தனது ஆட்சேபணையைத் தெரிவித்தார். சங்கர் தயாள் சர்மா பொறுப்பில் இருந்தபோது, ராஷ்டிரபதி பவன் நிர்வாகத்தில் சிறுசிறு மனத்தாங்கல்கள் ஏற்பட்டன. பின்வந்த கே.ஆர்.நாராயணன், 1997-ல் உத்தர பிரதேசத்தின் கல்யாண் சிங்கின் பாஜக அரசைக் கலைக்க வேண்டுமென்று பிரதமர் ஐ.கே.குஜ்ரால் சொல்லியும், பிரிவு 356-ஐப் பயன்படுத்த ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல பிஹாரில், ராப்ரி தேவி அரசைக் கலைக்க வாஜ்பாய் அரசு பரிந்துரைத்தபோதும் மறுத்துவிட்டார். கே.ஆர். நாராயணன் வெற்றி பெற்ற தேர்தலில்தான் புதுச்சேரி, புதுடெல்லி முதலிய யூனியன் பிரதேசங்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய உரிமையைப் பெற்றன. அப்துல் கலாம் பொறுப்புக்கு வந்தபோது, 2006-ல் ஆதாயமும் சலுகைகளும் பெறும் பொறுப்புகளை வகிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலே முன்தேதியிட்ட மசோதாவை மன்மோகன் சிங் வலியுறுத்தியும் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தால் முழுமையாக நிராகரித்தார் கலாம்.

கருணை ஒருபக்கம், படாடோபம் மறுபக்கம்

முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீல், தன்னுடைய மன்னிப்பு அளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி 35-க்கும் மேற்பட்ட தூக்குத் தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றினார். மரண தண்டனைக்கு எதிராகவே அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன. ஆனால், அப்துல் கலாமுக்கு நேர்மாறாக இவர், குடியரசுத் தலைவர் மாளிகையில் பெருங்கூட்டத்துடன் குடியேறினார். தன்னுடைய பதவிக் காலத்தில் ரூ.205 கோடி செலவில் 252 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

பிரணாப் முகர்ஜி அரசியலில் அனுபவம் பெற்றதால் ராஷ்டிரபதி பவனைக் குறித்தான வரலாறுகளை ஆவணப்படுத்தினார். நடைமுறை மற்றும் செயல்பாடுகளில் தெளிவாகவும் கறாராகவும் இருந்தார். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 77 (1)ன்படி, நாட்டில் நடக்கும் அரசு பரிபாலனங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவருடைய திருப்தியைக் கொண்டுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது சம்பிரதாயம். மத்திய அரசின் முடிவுகள், மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான் அவற்றைச் செயல்படுத்த முடியும். பிரிவு 85-ன் படி, நாடாளுமன்றத்தைக் கூட்டவும் கலைக்கவும் அதிகாரம், போர், வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரங்கள், பொருளாதார நெருக்கடி, உள்நாட்டுக் குழப்பங்கள் ஆகியன எழுந்தால், நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துவது, மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு கெட்டால் பிரிவு எண். 356-ஐ பயன்படுத்துவது, தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குப் பிரிவு 72-ன்படி கருணைகாட்டுவது என்ற அதிகாரங்களைக் குறிப்பிடலாம். இதெல்லாம், குடியரசுத் தலைவர் மாளிகை குறித்த வெளிப்படையான தகவல்கள். கிசுகிசுக்களுக்கும் ரகசியத்துக்கும் பெயர் போனவைதான் ராஷ்டிரபதி பவன். இங்கு சமைக்கப்படும் சுவையான உணவு வகைகளை டெல்லியிலுள்ள பல உணவு விடுதிகளுக்கு அனுப்பி, அதைக் காசாக்கியதும் உண்டென்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் முன்னொரு முறை எழுதியது. கடந்த 70 ஆண்டுகளாக இந்திய அரசியல் சதுரங்கத்தில் நடந்த பல கமுக்கமான செய்திகள், இப்போதைக்கு ராஷ்டிரபதி பவன் சுவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

கட்டுரையாளர், திமுக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x