Last Updated : 04 May, 2017 09:19 AM

 

Published : 04 May 2017 09:19 AM
Last Updated : 04 May 2017 09:19 AM

அழிவை நோக்கிச் செல்கிறது இந்தியா: ஃபரூக் அப்துல்லா பேட்டி

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மூன்று முறை காஷ்மீர் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தேசிய அரசியலின் போக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தின் திசையை மாற்றியதாகச் சொல்கிறார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகக் கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை எனும் சூழலிலும் தேர்தலில் நின்றார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் அவர் அளித்த நேர்காணலின் தொகுப்பு இது:

ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மிகக் குறைவான வாக்கு சதவீதம் பதிவாகியிருக்கிறது. இதை எதிர்பார்த்தீர்களா? இந்த வன்முறைக்கு என்ன காரணம்?

மக்கள் விரோத அரசியலின், அதிகார வேட்கை கொண்ட அரசியலின் ஆபத்தான விளைவு இது என்பதை மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜக கூட்டணி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தியதற்கு ஆளும் கூட்டணி அரசுதான் பொறுப்பு. தேர்தல் அமைதியாக நடைபெற்றிருக்க வேண்டும். அதைச் செய்ய அரசு தவறிவிட்டது. ஸ்ரீநகர் தேர்தலின்போது ஏற்பட்ட மரணங்கள் காஷ்மீரில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

2002-லிருந்து தேர்தலில் போட்டியிட்ட முக்கியக் கட்சிகள் மின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய பிரச்சினைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தன. ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் சித்தாந்தம்தான் உங்கள் பிரச்சாரத்தின் மையமாக இருந்தது. இந்த மாற்றம் என்ன சொல்கிறது?

வகுப்புவாத சக்திகள் சூழலை மாற்றிவருகின்றன. அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட பன்முகத்தன்மை இப்போது சிதைக்கப்பட்டுவருகிறது. காஷ்மீர் அரசியலின் தன்மையையே அது மாற்றிவிட்டது. 2002-ல் ஒற்றுமையும் பன்மைத்துவமும் பலமான அம்சங்களாக இருந்தன. அப்போது பெரிய அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை. இப்போது நிலைமை தலைகீழாகியிருக்கிறது. இந்தியாவை முழுமையான இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு டெல்லியி லிருந்து ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்து ராஷ்டிரம் என்பது இந்தியா உருவான சமயத்தில் இல்லாத ஒரு விஷயம். இந்தியா அழிவை நோக்கிச் செல்வதாகவே நான் கருதுகிறேன். பிரிவினைவாதக் கொள்கையும், ஒற்றை மதத்தின் ஆட்சியும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினால், இருண்ட எதிர்காலத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது என்று கருதுகிறேன். நம்பிக்கையின்மை இருக்கும் வரை வளர்ச்சி இடம்பெறப்போவதில்லை.

மிக மோசமான சூழல் நிலவிய 1996 தேர்தலில் நீங்கள் போட்டியிட்டீர்கள். அதை ஒப்பிட 2017-ல் சூழல் எப்படி இருக்கிறது?

இப்போதும் துன்பங்களுக்குக் குறைவில்லை. மிகப் பெரிய அளவில் பதற்றம் நிலவுகிறது. இளைஞர்கள் கல்லெறிகிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள். சாதகமான சூழல் இப்போது இல்லை. தேர்தல்கள் நடப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பிரச்சினைகள் மிக அதிகமாக இருக்கும் சூழலில் தேர்தல்கள் எதற்கு? ஒரு அரசியல் கட்சி எனும் முறையில் நாங்களும் வேறு வழியின்றி களத்தில் குதிக்க வேண்டியதாயிற்று!

களநிலவரம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

தனிமைப்படுத்தப்படும் முயற்சி மிகப் பெரிய அளவில் நடப்பதாகக் கருதுகிறேன். இளைஞர்கள் ஆயுதமேந்துவது அதிகரித்திருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து அச்சப்படுவதில்லை. காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. அழிவுச் சூழல் நிலவுகிறது. மின் திட்டங்களாக இருக்கட்டும், மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜக கூட்டணி அரசின் கூட்டு ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் நடக்க வேண்டிய ஹுரியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையாகட்டும், இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழலை உருவாக்குவதாகட்டும் எல்லா விஷயங்களிலும் பின்னடைவுதான்.

அடக்குமுறைக்கும், பாசிஸத்துக்கும் எதிரான விஷயமாக இடைத்தேர்தலைப் பார்ப்பதாகத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினீர்கள். காஷ்மீர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்னென்ன?

நாட்டில் உருவாகிவரும் வகுப்புவாத சக்திகளால் காஷ்மீர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிறது. நாங்கள் போராடுவது அந்தச் சக்திகளுக்கு எதிராகத்தான்.

உங்கள் கட்சியும் முன்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் எந்த விதத்தில் வாஜ்பாயிலிருந்து வேறுபடுகின்றன?

வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வந்தவர்தான். ஆனால், இந்தியா தழைத்திருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தழைத்திருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது சிந்தனை முற்றிலும் வித்தியாசமானது. எல்லா மதங்களையும் உள்ளடக்கி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்வதையே அவர் விரும்பினார். ஆனால், தற்போதைய அரசின் நிலைப்பாடு முற்றிலும் வேறு.

காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசும்போது, வாஜ்பாய் பயன்படுத்திய ‘ஜமூரியத்’, ‘இன்சானியத்’, ‘காஷ்மீரியத்’ போன்ற பதங்களை மோடி பயன்படுத்துகிறாரே…

மோடி அவற்றை நம்பவில்லை. அவரைப் பொறுத்தவரை அவை வெறும் வார்த்தைகள். ‘ஜமூரியத்’, ‘இன்சானியத்’, ‘காஷ்மீரியத்’ ஆகியவற்றில் அவருக்கு நம்பிக்கை இருந்தால் ஏன் அவர் ஹுரியத் அமைப்பினருடன் பேசுவதில்லை? அவர்களும் காஷ்மீர் அரசியலின் ஓர் அங்கம்தான். ஹுரியத்தின் பல்வேறு விஷயங்களை நீங்கள் அங்கீகரிக்காமல் போகலாம்.

ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு தரும் ஒரு சில விஷயங்களையாவது ஏற்றுக்கொள்ளலாமே? பாகிஸ்தான் பிரதமரின் பிறந்தநாளன்று அவரைச் சென்று பார்ப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மத்திய அரசு காஷ்மீர் நிலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். பாகிஸ்தானும் அதில் ஓர் பங்கு. பாகிஸ்தானைப் பேச்சுக்கு அழைக்க இயலாதபட்சத்தில் நாம் இங்கே அமைதியைக் கொண்டுவர ஒருபோதும் முடியாது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நெருக்கத்தை உருவாக்க உங்களிடம் ஏதேனும் திட்டம் உண்டா?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கும் வகையிலான ஒரு பொதுச் செயல்திட்டத்தை உருவாக்க காஷ்மீரின் எல்லா சக்திகளுடனும் கைகோக்கும் பணியை மேற்கொள்வேன். இரண்டாவதாக, வகுப்புவாத அச்சுறுத்தலைக் கூட்டாக எதிர்கொள்ள நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன்.

காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும் தெரிவித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காஷ்மீர் பிரச்சினை இரு தரப்புக்கு இடையில் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதுமே நம்புகிறது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவும் பாகிஸ்தானும் எதையுமே செய்யவில்லை. பாகிஸ்தானுடனான பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் இந்தியா எடுக்கவில்லை என்று நினைத்தால் நாம் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை நாம் பரிசீலிக்கலாம்.

சுயாட்சியைத்தான் அரசியல் தீர்வாக உங்கள் கட்சி கருதுகிறது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக மாற்ற வேண்டும் என்று முன்பு கோரியிருந்தீர்கள். இவ்விஷயத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் இன்றைய நிலைப்பாடு என்ன?

சுயாட்சி விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை. தொடக்கம் முதலே எங்கள் நிலைப்பாடு அதுதான். 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவருகிறது. ஆனால், காஷ்மீரில் அமைதி வேண்டும் என்றால் 1953-ல் இருந்த நிலைமையைத் திரும்பிப் பார்க்க வேண்டும். 2000-ல் எனது தாய் மறைந்தபோது அப்போதைய பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் வந்திருந்தனர். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்திருந்தோம். கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டாம் என்று இருவரும் கேட்டுக்கொண்டதுடன், சுயாட்சி தொடர்பாக விவாதிப்பதாகவும் உறுதியளித்தனர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு, திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்த கே.சி.பந்தை நியமித்தார்கள். அவர் ஒரு கூட்டத்தை நடத்தினார். எனினும், எந்தத் தீர்வுக்கும் வர முடியவில்லை. பிறகு, பாஜக தலைவர் அருண் ஜேட்லி அதைத் தொடர்ந்தார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேர்தலில் தோற்றது. எங்கள் அறிக்கை இன்னமும் பாஜகவிடம் இருக்கிறது. ஒரு நாள் அதை அக்கட்சி எதிர்கொண்டாக வேண்டும். எல்லையைப் பொறுத்தவரை, எல்லைக்கு அந்தப் பக்கமும் காஷ்மீர்; இந்தப் பக்கமும் காஷ்மீர். இரு பகுதி மக்களும் கடந்துசெல்லும் வகையில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நாம் மாற்ற வேண்டும். அதன் மூலம், இரு பகுதி மக்களும் வணிகம் செய்துகொள்வதும் தங்கள் உறவினர்களைச் சந்தித்துக்கொள்வதும் எளிதாக நடைபெறும். காயம் கொஞ்சம் ஆறும்!

இத்தனை ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் தருணம் என்று எப்போதாவது உணர்ந்ததுண்டா? காஷ்மீரில் என்றைக்காவது அமைதியை உணர்ந்திருக்கிறீர்களா?

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரபுடனான பேச்சுவார்த்தைகள் எங்களுக்கு நம்பிக்கையளித்தன. நான்கு முனை சமன்பாட்டின் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நினைத்தோம். தீர்வு மிக அருகில் இருக்கிறது என்று டெல்லியில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் என்னிடம் சொன்னார். அவர்களை வெளிநாட்டிலும் சந்தித்தேன். தீர்வு கிடைத்துவிடும் என்று அந்தச் சமயத்தில் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு அதிக வலி தரும் நிகழ்வு எது? 1953-ல் உங்கள் தந்தை ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்ட சம்பவமா, 1975-ல் ஷேக் அப்துல்லாவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வா, 1984-ல் உங்கள் அரசு கவிழ்க்கப்பட்ட நிகழ்வா?

1953-ல் நான் மிகவும் இளையவன். எனினும், கூட்டங்களில் பேசிவந்தேன். கைதுசெய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தேன். மிக மோசமான விஷயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசு 1984-ல் கவிழ்க்கப்பட்டது தான். எங்கள் தரப்பு ஆட்களை விலைக்கு வாங்கினார்கள். அது எனக்கு இன்றும் வலியைத் தருகிறது. மத்திய அரசு எனது தந்தையை எப்போதுமே சந்தேகத்துடனேயே நடத்தியது. அவர்கள் எங்களுக்குச் செய்தவற்றுக்காக இன்றைக்கு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

உங்கள் தந்தை ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவத்தை ஆதரித்தவர். இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்ததை ஆதரித்தவர்...

இல்லை. எனது தந்தைக்கும் மஹாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 370-வது சட்டப் பிரிவை நிறைவேற்றித் தந்தது எனது தந்தை. தொடக்கம் நன்றாக இருந்தாலும் இந்த ஜனநாயகத்தின் அடித்தளம் உறுதியானதாக இல்லை என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

உங்கள் அரசியல் வாழ்வின் தொடக்கத்திலிருந்து இதுவரை உங்களுக்கு வருத்தம் தரும் உங்கள் அரசியல் முடிவு எது?

எனக்கு வருத்தம் தரும் எந்த அரசியல் முடிவையும் நான் எடுத்ததாக நினைக்கவில்லை. நான் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தேன். அதற்காக ஆட்சியையும் இழந்தேன். ஏனெனில், எனது கொள்கைகளில் உறுதியாய் நின்றேன். 1983-ல் நான் கொண்டுவந்த மீள்குடியேற்ற மசோதா மத்திய அரசுக்கு அதிருப்தி அளித்தது. அதற்கான விலையை 1984-ல் நான் கொடுக்க வேண்டிவந்தது!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x