Last Updated : 24 May, 2017 09:14 AM

 

Published : 24 May 2017 09:14 AM
Last Updated : 24 May 2017 09:14 AM

வரலாற்றை வசதிக்கேற்ப வளைக்கக் கூடாது!- எதிர் வினை

செ.அருள்செல்வன் எழுதிய ‘திராவிட இயக்கத்தின் ஆங்கிலக் குரல்’(மே 22) கட்டுரையில், நீதிக்கட்சியைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியத்தின் பல பங்களிப்பு களைக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட இயக்க முன்னோடிகள், ஆளுமைகள், அவர்களுடைய பங்களிப்புகள் பற்றி எழுத வேண்டிய தேவை இன்று பெரிய அளவில் எழுந்திருக்கிறது. அதை முன்னெடுக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியவை. அதேசமயம், வரலாற்றை எழுதும்போது நம்முடைய வசதிக்கேற்ப வளைக்க முற்படக் கூடாது. அது திரிப்பாகிவிடும். பாலசுப்பிரமணியத்தை, ‘அண்ணாவின் அரசியல் ஆசான்’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை. அப்படியென்றால், பெரியார் யார்? முதலில் அண்ணா அப்படி எங்கேனும் குறிப்பிட்டிருக்கிறாரா?

“1944-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயரை திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தபோது, தமிழர் கழகம் என்று பெயரிட வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் ஒருவர் பி.பா.” என்று கட்டுரை கூறுகிறது. 1937-ல் சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி கடும் தோல்வியடைந்து, மூழ்கிக்கொண்டிருந்த கப்பலைப் போல இருந்த நிலையில், அதற்குத் தலைமையேற்று வழிகாட்ட வேண்டும் என்று ஏ.டி.பன்னீர்செல்வம் போன்ற நீதிக்கட்சித் தலைவர்கள் சிலர் விடுத்த வேண்டுகோளின் பேரில், 1938-ல் - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பெல்லாரியில் சிறைத் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த ஆண்டில் - பெரியார் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதுவரை அவர் நீதிக்கட்சியில் (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) சாதாரண உறுப்பினராகக்கூட இருந்ததற்கான சான்றுகள் இல்லை. 1940, ஆகஸ்ட் 24, 25-ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சியின் 15-வது மாநாட்டில் பெரியார் மீண்டும் அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களில் திராவிட நாடு (அன்றைய சென்னை மாகாணம்) பிரிவினைக் கோரிக்கை, வகுப்புரிமை (இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதி), தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஆகியன அடங்கும் (’நகரதூதன்’1.9.1940). பெரியாரின் தலைமையிலிருந்த நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு 26.11.1943 அன்று கூடி நிறைவேற்றிய தீர்மானங்களில் முக்கியமானவை : 1. திருவாரூர் மாநாட்டில் முடிவெடுத்தபடி அடுத்த மாநாடு சேலத்தில் நடத்தப்பட வேண்டும். 2. நீதிக் கட்சி உறுப்பினர்கள் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். 3. ஜஸ்டிஸ் கட்சிக்கு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரை திராவிடர் கழகம் என்றும் ஆங்கிலத்தில் ‘சவுத் இந்தியன் திராவிடியன் பெடரேஷன்’ என்றும் மாற்ற வேண்டும் (‘குடிஅரசு’ 4.12.1943).

13.2.1944-ல், சென்னையில் சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதை - சென்னை மாகாண திராவிடர் கட்சி என்று மாற்றுமாறு, சேலத்தில் நடைபெறப் போகும் மாகாண மாநாட்டுக்கு இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வே.ஆனைமுத்து கூறுகிறார் ( ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்). இந்தப் பெயர் மாற்றம் ஏற்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீதிக்கட்சிக் கிளைகள் சில ‘ திராவிடர் கழகம்’ என்ற பெயரில் இயங்கிவந்தன என்பது வேறு விஷயம்.

திருவாரூர் மாநாடு நடந்த காலத்திலிருந்து, பல விஷயங்களில் பெரியாருக்கு எதிராகச் செயல்பட்ட நீதிக்கட்சிப் பிரமுகர்களில் பி.பாலசுப்பிரமணியமும் ஒருவர். அப்படியிருந்தும் அந்த மாநாட்டில் கட்சிக் கொடியை அவரே ஏற்றி வைக்கும்படி செய்தார் பெரியார் (‘குடிஅரசு’ 2.9.1944). அண்ணாவால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டவையும் ‘சி.என். அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்று சொல்லப்பட்டவையுமான தீர்மானங்களில் ஒன்றுதான் நீதிக்கட்சியின் பெயர் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட வேண்டும் என்பதாகும் (‘குடிஅரசு’, 2.9.1944). அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சமூக, அரசியல் தீர்மானங்கள், பெரியாரின் தலைமைக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் ஆகியன ‘குடிஅரசு’ 2.9.1944, 9.9.1944 இதழ்களில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த மாநாட்டில் பி.பா., ‘தமிழர் கழகம்’ என்ற ஆலோசனையைக் கூறியதாகத் தெரியவில்லை. மாறாக, அந்த மாநாடு நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, பி.பா. உள்ளிட்ட சில நீதிக்கட்சிப் பிரமுகர்கள் தொடர்ந்து பழைய ‘நீதிக்கட்சி’யின் பெயரில்தான் இயங்கிவந்தனர்.

சென்னை கன்னிமரா ஹோட்டலில் நீதிக்கட்சியினர் தந்த வரவேற்புக்கு நன்றி கூறும் விதமாக, “அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய ஒப்பற்ற உரையை அம்பேத்கர் தொகுதி 37-ல் காணலாம்” என்று கட்டுரை சொல்கிறது. இந்த உரை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும்’ தொகுதி 37-ல் பக்கம் 405-408-ல் தரப்பட்டுள்ளது. இந்த உரை எந்த மூல நூலிலிருந்து அல்லது ஏடுகளிலிருந்து பெறப்பட்டது என்பதற்கான குறிப்புகள் ஏதும் இந்தத் தமிழாக்கத்தில் இல்லை. அதன் ஆங்கில மூலத்திலாவது ( Babasaheb Ambedkar Speeches and Writings, Vol 17, Part III) இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. வேறு எங்கோ முதலில் வெளியிடப்பட்ட இந்த உரையின் சுருக்கம், இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதில் சில விடுபடல்கள் இருக்கின்றன என்றும் ஊகிக்க முடிகிறது.

ஏனெனில், 1. அவரால் ஒருபோதும் பயன்படுத்தப் படாத, ‘அரிஜன்’, அரிஜன வகுப்பினர்’ என்னும் சொற்கள் இந்தத் தமிழாக்கத்தில் காணப்படுகின்றன. 2. பி.பா. தலைமை வகித்த வரவேற்புக் கூட்டத்துக்குச் செல்வதற்கு முன், ‘திராவிடர் கழக’மாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த கட்சியின் தலைவராக இருந்த பெரியாரை அவரது இல்லத்தில் அம்பேத்கர் சந்தித்து, அவரது கொள்கைகளையும் கட்சியையும் பாராட்டிச் சென்றதாகவும் பழைய நீதிக்கட்சியின் பெயரிலேயே இயங்கிவருபவர்களைப் பற்றிய விமர்சனத்தை அவர் கூறியதாகவும் ‘குடிஅரசு’ 30.9.1944 இதழ் தலையங்கம் கூறுகிறது. எனினும், மேற்சொன்ன 37-ம் தொகுதியில் உள்ளவற்றிலும்கூட பி.பா.வின் பழைய நீதிக்கட்சி பற்றிய அவரது விமர்சனங்களைக் காணலாம். இவை, தனஞ்சய் கீர் எழுதிய ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’, வசந்த் மூன் எழுதிய ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ ஆகிய நூல்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பெரியாரைப் பொறுத்தவரை ‘நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம். இந்தியாவில் அதிகார மாற்றம் குறித்து அப்போதைய வைசிராய் வெளியிட்ட அறிக்கையில், திராவிடர் கழகமும் ஷெட்யூல் வகுப்பார் கூட்டமைப்பும் அலட்சியம் செய்யப்பட்டதைக் குறித்த ‘விடுதலை’ 14.6.1946 தலையங்கம், பழைய நீதிக்கட்சியைச் சேர்ந்த சர் ராமசாமி முதலியார், சர் குமாரராஜா, சர். பி. டி.ராஜன் முதல் பி.பாலசுப்பிரமணியம் வரை யாவரும் தங்களை இந்துக்கள் என்றே அடையாளப்படுத்திக்கொண்டு வந்ததைச் சுட்டிக்காட்டியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய பெரியாரிய ஆய்வாளர்,

தொடர்புக்கு: sagumano@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x