Published : 22 Oct 2014 07:39 AM
Last Updated : 22 Oct 2014 07:39 AM

மானியம் பிச்சை அல்ல!

நீண்ட காலத்துக்குப் பிறகு, டீசல் விலை கணிசமாகக் குறைந்திருக்கும் செய்தி முகத்தில் புன்னகையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே, முதுகில் வலியே தெரியாமல் மயக்க மருந்து தடவிய கத்தியைச் செருகியிருக்கிறது மோடி அரசு.

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை சரிந்துவிட்ட நிலையில், லிட்டருக்கு ரூ. 3-க்கு மேல் குறைத்து, அந்த மகிழ்ச்சியில் நுகர்வோர் ஆழ்ந்திருக்கும்போதே, டீசல் விலைக் கட்டுப்பாட்டு மீதான தன்னுடைய அதிகாரத்தைக் கைவிட்டிருக்கிறது.

அதாவது, பெட்ரோல் விலையைப் போலவே இனி, டீசல் விலை நிர்ணயத்திலும் அரசு தலையிடாது. அதாவது, அரசு மானியம் தராது; எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை.

மன்மோகன் சிங் அரசு தொடங்கிய ‘சீர்திருத்தம்’ மோடி அரசிலும் தொடர்கிறது. மழை பெய்யும்போது வீட்டுச் சாக்கடையைத் திறந்து வீதியில் விடும் சாமர்த்தியம்தான் இது. அமெரிக்கப் பயணத்தின்போது, ‘பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்’ தொய்வில்லாமல் தொடரும் என்று மோடி வாக்குறுதி அளித்ததன் தொடர்ச்சியாக இதையெல்லாம் பார்க்கலாம்.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மானியங்களுக்கான மொத்த செலவு ரூ. 2,46,000 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் ரூ.63,500 கோடி. பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாடு நீக்கத்தால் அரசின் இந்த மானியச் செலவு கணிசமாகக் குறையும்; நிதிப் பற்றாக்குறையும் கணிசமாகக் குறையும் என்று சொல்கின்றன நிதித் துறை வட்டாரங்கள்.

தன்னுடைய பெட்ரோலியத் தேவையில் ஏறத்தாழ 80% அளவுக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடு, தன்னுடைய மானியத்தில் பெரும் பகுதியை பெட்ரோலியப் பொருட்களுக்காக அளிக்கும் ஒரு நாடு இது தொடர்பாகச் சீர்திருத்தங்களை யோசிப்பது அவசியமானது. ஆனால், சீர்திருத்தம் என்பது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு எஸ்யுவி ஆடம்பர காரில் செல்லும் பணக்காரருக்கும் பொதுமக்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச்செல்லும் பேருந்து - லாரிகளுக்கும் ஒரே விலையில் பெட்ரோல் - டீசல் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

அதிக அளவு பெட்ரோல் தேவைப்படும் வெளிநாட்டு அதிவேக மோட்டார் சைக்கிளில் தன்னுடைய பந்தாவுக்காகச் சுற்றும் ஒரு இளைஞர், நாட்டின் எண்ணெய் தேவைச் சுமையை மேலும் அதிகரிக்கிறார். நகரத்திலிருந்து எல்லாப் பொருட்களையும் அள்ளித் திணித்துக்கொண்டு மொபெட்டில் கிராமம் நோக்கிப் பயணிக்கும் ஒரு விவசாயி அந்தச் சுமையை ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும்? இந்த மாதிரி கேள்விகளிலிருந்து ஒரு மக்கள் நல அரசு எப்படித் தப்பித்துக்கொள்ள முடியும்?

மானியம் என்பது பிச்சை அல்ல; தன்னுடைய கொள்கைகளால் மெலிந்த மக்களுக்கு ஓர் அரசு தரக்கூடிய ஆதரவு. ஒருவகையில் அதை இழப்பீடு என்றும்கூடச் சொல்லலாம். அடுத்த இலக்கு என்ன? உலக வர்த்தக நிறுவனம் வலியுறுத்தும் உணவு மானியச் செலவுக் குறைப்பா?

காங்கிரஸின் தொடர் வீழ்ச்சியைக் கொண்டாடும் மோடி அரசும் பாஜகவும், காங்கிரஸை இந்த அளவுக்கு மக்கள் வெறுப்பதற்கு அது முன்னெடுத்த இப்படியான ‘சீர்திருத்தக் கொள்கைகள்’தான் காரணம் என்பதை உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x