Published : 15 Jun 2017 09:21 AM
Last Updated : 15 Jun 2017 09:21 AM

இணைய களம்: பத்திநாதன்

பத்திநாதன்

இலங்கை அகதிகள் முகாம் நண்பர்கள் நூற்றுக்கணக்கில் எனது முகநூல் நட்பில் இருக்கிறார்கள். ஒருசிலர் தவிர, ஏனையவர்களின் பதிவுகள் பெரும்பாலும் பிறந்த நாள் வாழ்த்து, புகைப்படங்களோடு முடிந்துவிடும். பலர் முகம்கூடக் காட்டுவதில்லை. கால் நூற்றாண்டைக் கடந்தும் அவர்களுடைய முதுகெலும்பை முறித்து அவர்களுடைய வாயிலேயே திணித்திருக்கும் இந்திய அகதிகள் வாழ்வில் அவர்கள் பேசத் தயங்கும் உளவியலையாவது புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவர்கள் ஏன் பேசுவதில்லை. தமிழ் இலக்கியச் சூழலில், நீண்ட அகதிகள் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றனவா? முகாமில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் என்றாவது அவர்களுக்காகப் பேசியிருக்கிறார்களா? முகாமிலும் சாதி இருக்கிறது. தலித்துகள் இருக்கிறார்கள். முகாம்வாழ் தலித்துகள் பற்றி தலித்திய செயல்பாட்டாளர்கள் என்றைக்காவது பேசியிருக்கிறார்களா? தமிழ், தமிழர் என்று பேசும் நாம் நம்முடைய சகோதரர்களை இந்த நிலையில்தான் வைத்திருக்கிறோம்.

இளங்கோ கல்லானை

கொளுத்தப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆறு பேர். பெண்களைத் தெருவில் இழுத்துப்போட்டு அடிக்கிறார்கள் போலீஸ்காரர்கள். கைதுகள் ஆயிரக்கணக்கில். ஆனால், நமது ஊடகங்கள் வாய்மூடி நிற்கின்றன. சிவராஜ் சௌகான் உண்ணாவிரத நாடகமாடுகிறார். விவசாயிகளின் போராட்டத்தைக் குறைந்தபட்ச விலை என்கிற ஒற்றைக் கோரிக்கைக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இது விவசாயிகளின் பல்முனைப் பிரச்சினை. கடன் சுமைகளைத் தூக்கிக்கொண்டு மக்கள் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். நகர மக்கள் எள்ளலாகக் கடந்து செல்கிறார்கள். விவசாயி என்பவன், தனது இறையாண்மை எனப்படும் தனது இருப்பின் எல்லைகளுக்காகத் தனது தற்சார்புக்காக மட்டுமே வேளாண்மையில் உள்ள அனைத்துக் கடுமையான சவால்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறான். பிறருக்கு நேரும் துன்பம் கண்டு சிரித்து, நமது வர்க்க புத்திகளின் வழியே பார்ப்பதால், ஒவ்வொன்றாக நாம் இழந்து. நகர அநாதைகளாக, வட்டி கட்டும் கழுதைகளாக மாறிவருகிறோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x