Last Updated : 20 Feb, 2017 09:48 AM

 

Published : 20 Feb 2017 09:48 AM
Last Updated : 20 Feb 2017 09:48 AM

மக்கள் கருத்துக்கு என்ன மரியாதை?

எண்ணிக்கை பலமே ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறது. தேர்தல் அரசியல் களத்தில் இந்த எண்ணிக்கையின் பங்கு ஒன்றாகவும் மக்களவை, சட்டமன்றங்களில் வேறொன்றாகவும் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களின் ஆதரவு பெற்றவர் முதல்வராகவோ பிரதமராகவோ ஆகலாம். ஆனால், தேர்தலில் பெற்ற வாக்குகளுக்குப் பின் இருந்த மக்களின் விருப்பத்தை முற்றாகப் புறக்கணித்துவிட்டு, உறுப்பினர்கள் செயல்படுவது சட்டத்தின் ஏட்டளவிலான பொருளில் சரியாக இருக்கலாம். சட்டத்தின் உணர்வின்படி, சட்டத்துக்கு அடிப்படையான நீதியின்படி சரியல்ல. அரசியல் சட்டத்தில் எழுதப்பட்ட சொல் மட்டுமல்ல, அதன் உட்பொருளும் உள்ளார்ந்த நோக்கமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதைப் புறக்கணிப்பது சட்டத்தை, ஜனநாயக உணர்வைப் புறக்கணிப்பதாகவே அமையும்.

மிகவும் விசித்திரமான, அருவருப்பான காட்சிகளைத் தமிழகம் கண்டுவருகிறது. அதிமுக உறுப்பினர்களால் முதல்வராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட கணத்தி லிருந்துதான் இந்தக் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் கூவத்தூரில் சொகுசு விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டதும், சட்டமன்றம் கூடும்போது மட்டுமே அவர்கள் அனைவரும் வெளியில் வந்ததும் சமீப கால அரசியல் வரலாற்றின் மாபெரும் களங்கமாகவே மக்கள் மனதில் தங்கியிருக்கின்றன. ஆளுநருக்கு மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பல்வேறு சவடால்களை வெளிப்படுத்திய சசிகலா, தான் சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஆட்சிக்கும் கட்சிக்குமான தன்னுடைய தேர்வுகளைத் தீர்மானித்துவிட்டே சென்றார். அவர்களின் ‘யோக்யதை’ ஊடகங்களில் சந்தி சிரிப்பதை சசிகலாவோ ஆளும் அதிமுக அணியோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

வரலாறு காணாத எதிர்ப்பு

வரலாறு காணாத அளவில் ஒரு தனிநபர் மீது இந்த அளவுக்கு வெறுப்பும் எதிர்ப்பும் வெளிப்படுகிறது. ஆனால், இவற்றுக்கு இலக்கான அந்த நபரோ தார்மிகக் குரல் எழுப்புகிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் எதுவுமே நடக்காததுபோல வளைய வருகிறார்கள்.

முன்பெல்லாம் மக்கள் கருத்தை அறிவது அரிதினும் அரிதாக இருக்கும். தேர்தல் காலங்களில் மட்டுமே மக்கள் கருத்தை அறிய முடியும். பத்திரிகைகளில் வெளியாகும் வாசகர் கடிதங்கள், அரசுசாரா அமைப்புகளின் குரல்கள், போராட்டங்கள் ஆகியவை மட்டுமே தேர்தல் களத்தைத் தாண்டி மக்கள் கருத்தை வெளிப்படுத்தின. பிறகு கருத்துக்கணிப்பு, வாக்குக்கணிப்புகள் ஆகியவை ஓரளவு வெளிப்படுத்தின. ஊடகங்களில் வரும் அலசல் கட்டுரைகளும் மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதப்பட்டன. ஆனால், பெருவாரியான மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பது தேர்தல் வரும்வரை தெரிவதில்லை.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 1988-ல் சபாநாயகர் உதவியுடன் ஜானகி அணி வென்றது. ஆனால், அடுத்து வந்த தேர்தலில் மக்கள் ஜானகி அணியைப் புறக்கணித்தார்கள். அந்தத் தீர்ப்பு வருவதுவரை மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இணைய தொழில்நுட்பத்தின் மூலம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்துவிடுகிறது. சமூக ஊடகங்களில் நொடிக்கு நொடி பதிவுசெய்யப்படும் கருத்துகள் வேகமாகப் பரவுகின்றன. யூடியூப் காணொளித் தளத்தில் தங்கள் கருத்துகளைப் பேசிப் பதிவுசெய்கிறார்கள். தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ளாமல் துணிச்சலுடன் வெளிப்படுகிறார்கள். தொகுதி மக்கள் தங்கள் உறுப்பினர்களிடம் தொலைபேசி மூலம் பேசித் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அதைப் பதிவுசெய்து வெளியிடுகிறார்கள்.

ஆதரித்து ஒன்றுகூட இல்லை

ஆயிரக்கணக்கில் பதிவுசெய்யப்பட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டும் வரும் இந்தப் பதிவுகளில் பல விதமான பார்வைகள் வெளிப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர், பிரதமர், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எனப் பல தரப்பினரைப் பற்றியும் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகள் பதிவாகின்றன. ஆனால், சசிகலாவை ஆதரித்து ஒரு பதிவுகூட வரவில்லை. அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என யாரும் சசிகலாவை ஆதரித்துப் பேச / எழுதவில்லை. அது மட்டுமல்ல. மிகக் கடுமையான சொற்களால் திட்டவும்செய்தார்கள். கூவத்தூரில் தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஏசினார்கள். முதல்வராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பற்றியும் மோசமான பதிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அரசியலைப் பற்றி வாயே திறக்காத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள்கூட இன்று சசிகலா தரப்புக்கு எதிராகக் குரலெழுப்புகிறார்கள்.

இந்தக் குரல்கள் எதுவும் சசிகலா தரப்புக்குக் கேட்டிருக்காதா? கேட்டன. சசிகலாவைப் பரிகசித்து இணையத்தில் எழுதுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்தரப்பு அறிவித்திருப்பதே இவையெல்லாம் அவர்களையும் எட்டியிருக்கின்றன என்பதற்கான சான்று. எனில், அவர்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை? எதிர்க் கட்சியினர், ஊடகங்கள் சொல்வதையெல்லாம் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது புதிதல்ல. ஆனால், மக்கள் கருத்து நேரடியாகவும் அழுத்தமாகவும் தெரிவிக்கப்பட்டும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்?

அதிகாரம் ஒன்றே குறிக்கோள்

கூவத்தூரில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும் ரெளடிகளின் நடமாட்டம் குறித்தும் செய்திகள் வந்தன. விடுதியை அணுக முயன்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட செய்தி வந்தது. இதற்கெல்லாம் எந்தப் பதிலும் இல்லை. உறுப்பினர்கள் தத்தமது தொகுதிகளுக்குச் சென்றுவந்த பிறகு வாக்களிக்கட்டும் என்று பன்னீர்செல்வம் கோரியதன் பொருள், தங்களுக்கு வாக்களித்த மக்களின் கருத்தை அவர்கள் அறிய வேண்டும் என்பதுதான். ஜனநாயகரீதியான இந்தக் கோரிக்கையைப் பற்றியும் சசிகலா தரப்புச் சட்டமன்ற உறுப்பினர்கள் வாயைத் திறக்கவில்லை. கூவத்தூரிலிருந்து நேரே சட்ட மன்றத்துக்கு வந்தார்கள். அமளிகளுக்குப் பிறகு வாக்களித்தார்கள்.

மக்களின் கண்டனங்கள், கோரிக்கைகள், எதிர்ப்புகள் ஆகிய அனைத்துக்கும் மௌனமே பதில் என்றால், அதற்கு என்ன பொருள்? மக்களைச் சிறிதளவும் மதிக்கவில்லை என்பதைத் தவிர, வேறு எந்தப் பொருளையும் கொள்ள முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றே குறிக்கோளாக சசிகலா தரப்பு செயல்படுவதையே இது காட்டுகிறது.

அதிகாரம் எத்தனை காலம்?

சட்டமன்றத்தில் சசிகலா தரப்பு வென்றிருக்கிறது. சட்டத்தின் ஏட்டளவில் செல்லுபடியாகக்கூடிய இந்த முடிவின் பலனாகக் கிடைக்கும் அதிகாரத்தை அவர்கள் எவ்வளவு காலம் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. ஆனால், மக்கள் மன்றத்துக்கு ஒருநாள் அவர்கள் வந்துதான் தீர வேண்டும். அன்று இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பெருந்திரளாக மக்கள் தன்னெழுச்சியுடன் திரண்டபோது, அதைக் கண்டு உலகமே வியந்தது. பல்வேறு கோபங்கள், ஆற்றாமைகளால் பல காலமாக உருவாகிவந்த குமுறல்களின் வெளிப்பாடே இந்த எழுச்சி என்று சமூகவியலாளர்களும் சிந்தனையாளர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் இறக்கிவைக்கும் சுமைதாங்கியாக மக்கள் அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை அப்போராட்டத்தின்போது எழுந்த பன்முகக் குரல்கள் பிரதிபலித்தன.

உணர்ந்ததை உணரவில்லை

மக்களின் கருத்துகளுக்கு, உணர்வுகளுக்குச் செவிசாய்க்கவில்லை எனில், அவற்றை வெளிப்படுத்த மக்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். செய்திகள் தணிக்கை செய்யப்பட்டு, தகவல் தொடர்புச் சாதனங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருந்த நெருக்கடி நிலைக் காலத்தில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஆனால், தங்களுக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர்கள் உணர்ந்துகொண்டதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. மக்கள் தங்கள் கருத்தைத் தேர்தலில் வெளிப்படுத்தி அதை உணர்த்தினார்கள்.

கருத்துகளும் உணர்வுகளும் உடனுக்குடன் பீறிட்டு எழும் காலம் இது. மக்கள் கருத்தை அறிய எல்லாத் தரப்பினருக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுக்கு முகம் கொடுக்காமல் இருப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல. தற்கொலைக்கு ஒப்பான பிழையாகவும் அது அமைந்துவிடக்கூடும்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x