Published : 14 Jun 2017 09:57 AM
Last Updated : 14 Jun 2017 09:57 AM

கார் பயணம் தரும் நச்சுப் பரிசு

காரில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள் நச்சு மிகுந்த காற்றை அதிகம் சுவாசிக்கின்றனர் என்று எச்சரித்திருக்கிறார் பிரிட்டன் அரசின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் சர் டேவிட் கிங்.

குழந்தைகள் காரில் செல்லும்போது பிற வாகனங்களின் நச்சுப் புகைகளும் அந்தக் காருக்குள் நுழைந்துவிடுகின்றன. பயணத்தின்போது விபத்து நடந்தால் குழந்தைகள் அடிபடக் கூடாது என்பதற்காக பின் இருக்கையில்தான் குழந்தைகளை அமர்த்திச் செல்ல வேண்டும் என்று மேலைநாடுகளில் உத்தரவிட்டிருக்கிறார்கள். கார் என்பதே நகரும் பெட்டி போலத்தான் இருக்கும். கதவிடுக்குபோல அதில் வெளிக்காற்று நுழைய இடங்கள் உண்டு. அதன் வழியாக பிற வாகனங்களின் நச்சுக்காற்று எல்லா காருக்குள்ளும் நிரம்பிவிடும். சரக்கு லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களிலும் இதைப்போல நச்சுக்காற்று சேரும் என்றாலும் கார்களில்தான் பெரும்பாலும் குழந்தைகளை, சிறார்களை பின் இருக்கையில் உட்கார வைக்கிறார்கள். காருக்குள் மின் விசிறியை அல்லது குளிரூட்டியைப் போடுவது வழக்கமாக இருக்கிறது. இவை வெளியில் இருக்கும் நச்சுக்காற்றைப் பல மடங்கு வேகமாக உள்ளிழுத்து நச்சுக்காற்றின் அடர்த்தியை அதிகப்படுத்திவிடுகின்றன.

குழந்தைகள் சுவாசிக்கும்போது உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ள கந்தகம், நைட்ரிக் ஆக்ஸைடு உள்ளிட்ட நஞ்சு வேகமாக நுரையீரலில் நிரம்புகின்றன. இதனால் இளம் நுரையீரல் பாதிப்படைகிறது. அத்துடன் மரபணுக்களிலும் இந்த நஞ்சு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் புத்திசாலிக் குழந்தைகள் கூட படிப்பில் மந்தமடைகின்றன.

இதற்கு மாற்று வழி, அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்களாக இருந்தால் நடந்து செல்லுமாறும், இடைநிலைத் தொலைவு என்றால் சைக்கிளிலும் செல்லுமாறும் ஊக்கப் படுத்தலாம் என்கின்றனர். மின்சார ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துகளில் இந்த நச்சுக் கலப்பு குறைவு. 2001-ல் நடந்த வெவ்வேறு பரிசோதனைகளில் காரை ஓட்டுபவர்களும் வெளியில் நடந்து செல்பவர்களைவிட அதிக அளவு நச்சுக்காற்றை உள்ளே இழுப்பது தெரியவந்தது என்கிறார் சர் டேவிட் கிங்.

சௌதாம்டன் பல்கலைக்கழகத்தில் ஆஸ்துமா நோயைக் குணமாக்கும் நிபுணராக இருக்கும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோல்கேட் இக்கருத்தை ஆமோதிக்கிறார். காரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் குழந்தைகளைவிட நடந்தோ சைக்கிளிலோ செல்லும் குழந்தைகள் மிகவும் குறைவான நச்சுக்காற்றையே சுவாசிக்கிறார்கள் என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, வெளியில் இருப்பதைவிட காருக்குள் இருக்கும் காற்றில் 9 முதல் 12 மடங்கு நச்சு அதிகம் என்கிறார் அவர். நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆஸ்துமாவில் விட்டுவிடும். மூச்சிரைப்பு அதிகமாகும். வேகமாக ஓடுவது, தொடர்ந்து பேசுவது கூட எளிதாக இருக்காது. ஆனால் பெரும்பாலான பெற்றோர் வீதியை விட காருக்குள் தான் சுத்தமான காற்று அதிகம் என்று நம்புவதுதான் விநோதம்!

© தி கார்டியன் - சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x