Last Updated : 08 Sep, 2014 09:38 AM

 

Published : 08 Sep 2014 09:38 AM
Last Updated : 08 Sep 2014 09:38 AM

நம் மனசாட்சி முன் 6 கோடி சிறார்கள்

முதல் பொது மாநாடு 1946-ல் நடைபெற்றபோது, உலக அளவில் கல்விக்கான சிறப்புக் கவனம் தேவை என்ற விவாதம் எழுந்தது. ஆனால், 1965-ம் ஆண்டில் டெஹ்ரானில் நடைபெற்ற பொதுஅமர்வில்தான், செப்டம்பர் 8-ல் உலக எழுத்தறிவு தினத்தைக் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின் பொன்விழா நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், எழுத்தறிவு தினத்தின் தேவைகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தியா என்ன செய்கிறது?

இன்றும் இந்தியாவில் எழுத்தறிவற்ற மக்கள் ஏராளமானோர் உள்ளனர். 2001-ல் 64.83 சதவீதமாக இருந்த இந்திய எழுத்தறிவு விகிதம் 2011-ல் 73.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் எழுத்தறிவு வளர்ச்சி விகிதத்தில் இந்தியா 10% பின்தங்கியுள்ளது. இதற்கு யுனெஸ்கோ சொல்லும் காரணங்கள்: “இந்திய நகரங்களில் உள்ள 6 லட்சம் குடிசைப் பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். குடிநீர், கழிப்பறை, வகுப்பறை போன்றவை இல்லாததும் ஒரு காரணம். இந்தியாவில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:42 என்ற நிலையில்தான் இருக்கிறது. இது வகுப்பறையை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள உதவாது. மேலும், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் சுமார் 6 கோடிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வில்லை.’’

தமிழகத்தில் 80.33 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள். இதில், இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 14-வது இடம். ஆனால், 2001-ல் 73.45 சதவீதத்தில் இருந்த தமிழகம் 13-வது இடத்திலிருந்து 14-வது இடத்துக்குப் பின்னோக்கிச் சென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 6.88% வளர்ச்சியை மட்டுமே தமிழகத்தில் பெற முடிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விகிதாச்சாரம் 9.28% என்ற அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் எங்கே தவறிழைத்தது என் பதைக் கண்டறிய வேண்டும்.

மதிய உணவு, சத்துணவு ஆகிய திட்டங்களை அமலாக்கம் செய்து, தமிழகம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் முன்னோடியாக விளங்கினாலும், தமிழகத்தை விடவும் 13 மாநிலங்கள் கல்வியில் முன்னேறிய நிலையில் இருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ‘அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்ட’ அமலாக்கத்தில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய தருணமிது.

கட்டாயக் கல்விச் சட்டம்

பின்தங்கிய மாவட்டங்களில், மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மத்திய-மாநில அரசுகளின் முக்கியக் கடமை. தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி 92.14 சதவீதத்துடன் அதிக எழுத்தறிவு உள்ள மாவட்டமாக இருக்கிறது. தருமபுரி 64.71 சதவீதத்துடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பக் கல்வியில் சேர்ந்த குழந்தைகளில் 59 சதவீதத்தினர் பாதியில் நின்று விட்டார்கள். அப்படி நின்றவர்களில் 80 சதவீதக் குழந்தைகள் சிறார் தொழிலாளர்களாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள்தான்.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதி தொழில் வளர்ச்சியையும் விவசாய வளர்ச்சியையும் பெற்றிருந்தாலும் சமூக வளர்ச்சியைப் பெறவில்லை. மற்றொரு பகுதி பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் பெற்றிருக்கவில்லை. எனவே, இங்கு அரசு கட்டாய இலவசக் கல்வி வழங்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டி யுள்ளது. அதே நேரத்தில், இங்குதான் மிக அதிக அளவில் தனியார் பள்ளிகளும் உள்ளன. அதில் 25% இடஒதுக்கீட்டைக் கட்டாய இலவசக் கல்விக்காக அரசு உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் கையாள வேண்டும்.

‘அனைவருக்கும் கல்வி’என்ற இயக்கம் ஓரளவு வெற்றிபெற்றுள்ள பின்னணியில், ‘அனைவருக்கும் சமூக விழிப்புணர்வுக்கான கல்வி என்ற இயக்கம்’ பள்ளிகளில் தொடங்கப்படுவதே உலக எழுத்தறிவு தினத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க முடியும். அடுத்த தலைமுறை நம்மிலும் சிறப்பாகச் செயலாற்றுவதற்குக் கல்விதான் மிகச் சிறந்த தூண்டுகோல் என்பதை மறந்துவிடக் கூடாது.

- எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்), தொடர்புக்கு: prekan07@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x