Last Updated : 10 Apr, 2017 09:00 AM

 

Published : 10 Apr 2017 09:00 AM
Last Updated : 10 Apr 2017 09:00 AM

சிரியா: சொந்த மக்களை கொல்லும் அரசு!

அந்தப் புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. தளிர்களைப் போன்ற அந்தக் குழந்தைகள் உயிரற்ற உடல்களாகக் கிடக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ரசாயன அரக்கன் அவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறான். அந்தக் கொடுங்கரங்களின் மறுமுனையில் அதிகார வெறி, வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி, வன்முறையின் ருசியைச் சுவைத்த கிளர்ச்சிக் குழுக்கள், ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் பொறுப்பற்ற தனம் என்று எத்தனையோ விஷக் கிளைகள்.

சிரியாவின் வடக்கு மாகாணமான இத்லிபின் கான் ஷெய்கான் நகரில் கடந்த திங்கள் கிழமை அதிகாலை நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் இது. குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே பறந்து செல்லும் அடையாளம் தெரியாத விமானம் ரசாயன வாயு அடங்கிய குண்டுகளை வீசிவிட்டுச் செல்கிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் வாயில் நுரை தள்ள, துள்ளத் துடிக்க இறந்துபோகிறார்கள் மக்கள். மொத்தம் 72 பேர் என்கிறது சிரியா. ஆனால், 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். இவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். சரின் விஷ வாயுக் குண்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அநேகமாக இத்லிப் மாகாணத்தின் எல்லா மருத்துவ மனைகளும் நிறைந்து வழிகின்றன. கடந்த ஆறு ஆண்டு களாக உள்நாட்டுப் போராலும், ஐஎஸ் பயங்கர வாதிகள் நிகழ்த்திவரும் கொடூரங்களாலும் சிதைந்து, துவண்டு கிடக்கும் சிரியா மக்கள், இந்தக் கொடுமையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

என்னதான் நடக்கிறது சிரியாவில்?

இது போர்க் குற்றமா என்று விசாரணை நடத்தப்படும் என்று ஐநா தெரிவித்திருக்கிறது. வழக்கம்போல், இந்தப் படுகொலைகளுக்கு யார் காரணம் என்று பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், மழுப்பல்கள். சிரியா அதிபர் அல் பஷார் அஸாதின் ராணுவம்தான் காரணம் என்று அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் குற்றம்சாட்டுகின்றன. ஐ.நா.வும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா அதை மறுக்கிறது. என்னதான் நடக்கிறது சிரியாவில்?

2011-ல் தொடங்கியது சிரியா உள்நாட்டுப் போர். அந்தக் காலகட்டத்தில்தான் ‘அரபு வசந்தம்’ எனும் பெயரில் துனீஷியாவின் அதிபர் ஜினே எல் அபிதினி பென் அலியின் ஆட்சியையும், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியையும் கவிழ்க்கிறது மக்கள் புரட்சி. சிரியாவிலும் அரபுப் புரட்சிக்கு ஆதரவான குரல்கள் எழுகின்றன. அதிபர் அல் பஷார் அஸாதுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கின்றன. அப்போது அரபு வசந்தத்தை ஆதரித்து சுவர்களில் எழுதியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 15 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இவர்களில் 13 வயதேயான சிறுவன் கொல்லப்படுகிறான். தொடர்ந்து எதிர்ப்பாளர்களை நசுக்குகிறது சிரியா அரசு. ராணுவத்திலிருந்து வெளியேறும் அதிருப்தியாளர்கள் ‘சுதந்திர சிரியா ராணுவம்’ எனும் படையைத் தொடங்குகிறார்கள். அஸாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். சர்வதேச நாடுகள் இவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. ரஷ்யாவும் ஈரானும் சிரியா அரசை, அதாவது அஸாதை ஆதரிக்கின்றன. இடையில், மனிதகுலம் இதுவரை பார்த்திராத கொடூரங்களை இராக்கிலும் சிரியாவிலும் அரங்கேற்றுகிறது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு.

இன்று வரை சிரியா நாட்டு மக்களின் ரத்தம் சிந்திக்கொண் டேயிருக்கிறது. 4.5 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வீடிழந்திருக்கிறார்கள். சிறார்களின் நிலைமை படுமோசம். கடந்த ஆண்டு மட்டும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக் கிறார்கள். பல குழந்தைகள் ஆதரவின்றி உடலுழைப்பில் ஈடுபட வேண்டிய அவலம் வேறு. ஒருபக்கம், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுபெற்ற கிளர்ச்சிப் படையினர், மறுபுறம் அஸாத் அரசு என சிரியா மக்கள் எதிர்கொள்ளும் வலிகள் வார்த்தைகளில் அடங்காதவை.

சர்வதேச நாடுகளின் எதிர்வினை

சரி, சர்வதேச நாடுகள், ஐநாவெல்லாம் என்னதான் செய்கின்றன? உண்மையில், உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதுதான் கொடுமை. 2013 ஆகஸ்ட் 22-ல், சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் சரின் வாயு குண்டுகளைப் பயன்படுத்தி அஸாத் அரசு தாக்குதல் நடத்தியது. இதில் 281 பேர் கொல்லப்பட்டார்கள். உலகத்தை யே அதிரச்செய்த அரச பயங்கரவாதத்துக்குப் பிறகு, அமெரிக்காவும் ரஷ்யாவும் கொஞ்சம் முயற்சி எடுத்து, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. நல்ல பிள்ளையாக அந்த ஒப்பந்தத்துக்கு சிரியா ஒத்துழைத்தது. ஒப்பந்தத்தின்படி தன்வசம் உள்ள ரசாயன ஆயுதங்கள் தொடர்பாக, தானே அறிக்கை அளிப்பதற்கு சிரியா அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சிரியாவுக்கு வசதியாகப் போய்விட்டது.

இன்றைக்கு கான் ஷெய்கான் நகரில் இளம் தளிர்கள் உட்பட தன் சொந்த மக்களையே கொன்று குவித்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் நாடகமாடுகிறது அஸாத் அரசு. நட்பு நாடான ரஷ்யா வேறு கோணத்தில் விளக்கம் தருகிறது. “சிரியா ராணுவ விமானங்கள் கான் ஷெய்கான் நகரில் தாக்குதல் நடத்தியது உண்மைதான். ஆனால், அந்நகரில் இருக்கும் கிளர்ச்சிப் படையினரின் முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சிப் படையினரின் ஆயுதக் கிடங்கில் இருந்த ரசாயன ஆயுதங்கள் வெடித்துவிட்டன” என்று முரணான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் ரஷ்ய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனஷென்கோவ். கான் ஷெய்கான் கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், சரின் வாயு கொண்ட குண்டு வீச்சு நடத்தியது சிரிய அரசுதான் என்பதற்கு சர்வதேசப் பார்வையாளர்கள் முன்வைக்கும் ஆதாரம், அரசிடம் மட்டும்தான் விமானங்கள் இருக்கின்றன என்பது. இதை ஆதாரபூர்வமாக மறுக்க முடியாமல் திணறிவருகிறது அஸாத் அரசு.

துருக்கியின்மீது பழிபோடும் சிரியா

மறுபுறம், அண்டை நாடுகள் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்ளவும் சிரியா அரசு தயங்குவதில்லை. மேற்கத்திய நாடுகளின் துருக்கி உளவு அமைப்புகளும் அண்டை நாடான துருக்கியும் பயங்கரவாத அமைப்பி னரைப் பயன்படுத்தி சிரியாவில் வன்முறைக் கலாச்சாரத்தை வளர்க்கின்றன என்று சிரியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆயுதம் ஏந்திய போராளிகளைச் சிரியாவுக்கு அனுப்பும் நாடுகளில் மிக முக்கியமான இடத்தைத் துருக்கி வகிக்கிறது என்கிறது. விஷ வாயு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதும் துருக்கிதான் என்று சிரியா அரசின் இணைய நாளிதழ் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பலர், துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர் களில் மூன்று பேர் இறந்துவிட்டார்கள். பிரேதப் பரி சோதனை நடத்திய துருக்கி மருத்துவர்கள், விஷ வாயுத் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்துகிறார்கள். அஸாத் அரசுதான் காரணம் என்று துருக்கி பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது. ஆனால், “சிரியா ராணுவம் ஒருபோதும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில்லை. சிரியா குடிமக்கள் மீது மட்டுமல்ல, பயங்கரவாதிகள் மீதுகூட அத்தகைய கொடூரமான தாக்குதலை நடத்த மாட்டோம்” என்று கூசாமல் சொல்கிறார் சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவல்லெம்.

இதற்கிடையே, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக ஐநா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், சிரியா அரசின் மீது இரண்டு நாடுகளும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டின. அமெரிக்காவும் இது தொடர்பான வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. இதுவரை, சிரியா விவகாரத்தில் தான் கொண் டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, சிரியாவைக் கடுமை யாகச் சாடுகிறார் ட்ரம்ப். சிரியாவின்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பல்கள் சிரியா மீது 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றன.

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டுகளை ஏற்க ரஷ்யா மறுக்கிறது. சிரியாவை அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. “சிரியாவில் ரஷ்யாவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்றால், சிரியாவின் இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டியதுதானே? இன்னும் எத்தனைக் குழந்தைகளைப் பலிகொடுப்பது?” என்று ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே கேட்கிறார். உண்மையில், எந்த அளவுக்கு மனசாட்சியுடன் அமெரிக்கா இந்தக் கேள்வியை எழுப்புகிறதோ தெரியவில்லை? சிரியாவின் சிறார்கள் துடிதுடித்து இறந்த காணொலிக் காட்சிகளைக் கண்டவர்கள் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் கேள்வி அது என்பதில் சந்தேகமில்லை!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x