Published : 20 Feb 2017 09:26 AM
Last Updated : 20 Feb 2017 09:26 AM

உள்ளாட்சி பிரதிநிதிகளின்றி சீரழிகிறது நிர்வாகம்... தேர்தல் எப்போது?

உச்சபட்சக் கோபத்தில் இருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்தக் கோபம் தமிழகத்தின் முதல்வர் பதவி தொடர்பிலானது மட்டும் அல்ல; உள்ளூர் அளவில் அவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை இந்த அதிகாரப் போட்டி அழுத்தி மறைத்துவிட்டது தொடர்பிலானது. அரசியல் சூழலுடன் அடிப்படை பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. நான்கு மாதங்களுக்கு மேலாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இல்லாதது தொடர்பில் அரசில் தொடங்கி ஊடகங்கள் வரை யாருக்குமே கவலையில்லை.

நமது அரசாங்கம் மக்களுக்கு அளிக்கும் சேவைகளில் பெரும் பங்கை உள்ளாட்சி என்னும் ஜனநாயக அமைப்பின் மூலமாகவே வழங்குகிறது. குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, சுகாதாரப் பணிகள் ஆகிய அடிப்படைப் பணிகளுடன் பெண்களுக்கான திருமண உதவியில் தொடங்கி ஈமக் கிரியைக்கான உதவி வரையிலான பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்கின்றன.

முடங்கிய மக்கள் பணிகள்

ஆனால், பதவிக் காலம் காலாவதியாகிவிட்ட உள்ளாட்சி அமைப்பை உயிர்ப்பிக்காததால் மொத்த நிர்வாகமும் சீர்குலைந்திருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் பணிகளைக் கவனிக்க, தமிழக நகர உள்ளாட்சியில் மொத்தம் 12,820 மக்கள் பிரதிநிதிகளும், ஊரக உள்ளாட்சியில் 1,19,399 மக்கள் பிரதிநிதிகளும் இருந்தார்கள். இப்போது நகர உள்ளாட்சிப் பகுதிகள் முற்றிலுமாக அனாதைகளாகிவிட்டன. ஊரக உள்ளாட்சியில் 30 முதல் 40 கிராமங்களுக்கு ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.

அடிப்படைத் தேவைகள் கேள்விக்குறியாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, கரூர், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங் களிலும் நிலத்தடி நீர் வெகுவாக உள்வாங்கி விட்டது. இதுபோன்ற சூழலில், மக்கள் பிரதிநிதிகள் பஞ்சாயத்து நிதியில் ஆழ் துளைக் கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்வார்கள். இது நின்றுபோயிருக்கிறது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் நான்கு மாதங்களாகக் கழுவப்படவில்லை. குடிநீர்த் தொட்டியை இயக்குபவர்களுக்குச் சம்பளம் வழங்கப் படவில்லை. மின் மோட்டார்கள், தெருவிளக்கு கள் பழுதாகிக் கிடக்கின்றன. ஆயிரக்கணக் கான கிராமங்களில் குப்பைகள், சாக்கடைகள் தேங்கிக் கிடக்கின்றன. பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகிவருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலில் 20 பேர் இறந்துவிட்டார்கள். 60 பேர் வரை சிகிச்சை பெறுகிறார்கள்.

கேள்விக்குறியான சமூக நலத் திட்டங்கள்

ஒவ்வொரு மாதமும் கிராம சபை மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போர் பட்டியலில் புதிய ஆட்கள் சேர்ப்பது, இறந்தவர்களை நீக்குவது வழக்கம். இதன் மூலமாகவே திருமண உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, வீடு கட்டுதல் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் வரை சாத்தியமாகும். இதுவும் நின்றுவிட்டது. தமிழக அரசின் புதுவாழ்வுத் திட்டம் கிராம மக்களின் வறுமையை ஓரளவு போக்கிவந்ததைக் கடந்த காலங்களில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆடு, மாடு வாங்கியிருந்தார்கள். பெட்டிக் கடை, காய்கறிக் கடை, இஸ்திரி கடை, சிறு உணவகங்கள் வைத்திருந்தார்கள். நிதிச் சுழற்சி நின்றுவிட்டதால் அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துவிட்டன. ஊரகப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கான திட்ட அங்கீகாரத்துக்கு பஞ்சாயத்துத் தலைவர் முத்திரையே போதுமானதாக இருந்தது. இப்போது ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் தேங்கிக்கிடக்கின்றன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க சமீபத்தில் கணக்கெடுப்பு நடந்தது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால் தங்கள் கிராமத்தின் பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் வாதாடி சரியான கணக்கைச் சேர்த்திருப்பார்கள். இப்போது பொத்தாம் பொதுவாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சிகள் மட்டுமல்ல, நகர உள்ளாட்சிகளும் செயலிழந்திருக்கின்றன. சென்னை மாநகராட்சியால் எழும்பூர் அரசு மருத்துவமனை வளாகம் உட்பட 30 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட இரவு நேரக் காப்பகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அம்மா உணவகங்களுக்கான மளிகைப் பொருட்கள் விநியோகம் பாதியாகக் குறைந்து விட்டது.

அரசியல் சாசனச் சட்ட அவமதிப்பு

கடந்த 2016 அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. தமிழக அரசு கடைசி நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதனால், ‘பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை’ என்று கூறி திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கை நடத்துவதிலும் அக்கறை காட்டவில்லை தமிழக அரசு. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் மாநிலத் தேர்தல் ஆணையம், ‘தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு இல்லை’ என்று வெளிப்படையாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியது.

ஆரம்பத்தில் இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னது நீதிமன்றம். ஆனால், அதுவே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஓர் அரசு பாதியில் கவிழ்ந்தாலோ கலைக்கப்பட்டாலோ மட்டுமே ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசியல் சாசனச் சட்டம். ஆனால், பதவிக்காலம் இயல்பாகக் காலாவதியான ஓர் அரசை, அது காலாவதியாகும் தேதிக்கு முன்னதாகவே ஆட்சி ஏற்க வைக்க வேண்டும்.

புறக்கணிக்கப்படும் விதிமுறைகள்

உதாரணத்துக்கு, 2011-2016 ஆண்டு கால அதிமுக அரசை எடுத்துக்கொள்வோம். அதன் பதவிக் காலம் கடந்த 2016, மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. முன்னதாக 2016, ஏப்ரல் 22-ம் தேதியே மனுத்தாக்கல் தொடங்கி மே மாதம் 19-ம் தேதி முடிவுகள் அறிவித்து, 22-ம் தேதிக்குள் முதல்வரும் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டார்கள் இல்லையா? இப்போது உள்ளாட்சிகளை அதிகாரிகள் கையில் கொடுத்ததைப் போல அப்போது சில மாதங்கள் மாநில அரசை கவர்னரிடம் கொடுத்திருந்தால், அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்குமா?

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் பொருந்துகின்ற இந்த விதிமுறைகள், அவற்றுக்கு இணையான சட்ட அங்கீகாரம் கொண்ட உள்ளாட்சிகளின் விஷயத்தில் மட்டும் புறக்கணிக்கப்படுவது ஏன்? இது இந்திய அரசியல் சாசன சட்டத் திருத்தம் 73-வது பிரிவை அவமதித்தது ஆகாதா?

ஜனநாயகமே நம் தேசத்தின் இதயம். அந்த இதயத்தின் துடிப்பு ஒருநிமிடம்கூட நின்றுவிடக் கூடாது!

- டி.எல்.சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x