Last Updated : 03 Sep, 2016 10:39 AM

 

Published : 03 Sep 2016 10:39 AM
Last Updated : 03 Sep 2016 10:39 AM

நெடிய மரபின் தொடர்ச்சி இது!

துவைத்த துணிகளை ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக பெருநீளக் கயிறுகட்டி சலவைத்தொழிலாளிகள் காயப் போட்டிருப்பார்கள். வைகையைக் கடக்கும் யாருடைய கண்ணிலும் அக்காட்சி தென்படும். ஆடைகளுக்கு அழுக்கு நீக்கி, வண்ணம் கூட்டுகிறவர்கள் வாழும் பகுதியில் பண்பாட்டின் எச்சங்கள் குவிந்துகிடக்கும். ஆனால், பலநேரங்களில் எதிர்பார்ப்புக்கு மாறானவற்றையே காலம் பரிசளிக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு தொல்லியல் துறை அறிஞர் ஒருவரின் கண்ணில் இவ்விடம் பட்டுள்ளது. அவர் ஆற்றின் குறுக்கே அசைந்தாடும் துணிகளின் அழகைப் பார்க்கவில்லை. உவர் மண் போட்டு வெள்ளாவி வைப்பதற்காகக் கரையோரத்தில் இருக்கும் வட்டவடிவ அடுப்புகளை பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அவர் கண்களில் பட்டது வேறொன்று. ஆற்றோரத்தில் அடித்து சலவை செய்ய, சற்றே சாய்வுக் கோணத்தில் கரையெங்கும் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்கள். அதில் ஒரு கல்லருகே சென்று உற்றுப்பார்க்க, அந்த சலவைக் கல் முழுவதும் எழுத்துக்கள் தென்பட்டன. அவர் அதனை வாசிக்க ஆரம்பித்ததும் சலவைக் கல் மெல்ல, மெல்ல சரித்திரக் கல்லாக மாறத் தொடங்கியது. காலத்தின் கதவு திறந்து காட்சிகள் விரியத் தொடங்கின.

அதனைக் கண்டறிந்தவர் தொல்லியல் அறிஞர் கே.வி. இராமன். மத்திய அரசின் கல்வெட்டியல் துறைத் தலைவர் கே.ஜி. கிருஷ்ணன் எபிகிராபிகா இண்டிகாவில் இந்தக் கல்வெட்டைப் பதிப்பித்தார். அதுவே பிற்காலத்தில் புகழ்பெற்ற மெய்கீர்த்திகளுக்கு முன்மாதியானது என்று அறிஞர்கள் கூறத் தொடங்கினார்கள்.

அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கியபோது பல்வேறு விவாதங்களும் தொடங்கின. பல ஆண்டுகளாக அந்தக் கல்வெட்டின் எழுத்துக்களை வெவ் வேறு வழிமுறைகளில் ஆய்வாளர்கள் படித்துக்கொண்டே இருக்கின்றனர். அதில் உள்ளது ‘நடாவி’யா, ‘நடவா’?; ‘மற்றை’யா, ‘மாறனா’?; இக்கல்வெட்டு சேந்தனைப் பற்றியதா? அல்லது சேந்தனின் மகன் மாறனைப் பற்றியதா? என்று சர்ச்சைகள் நீடித்தன.

எத்தனை நூற்றாண்டுகளாக அடித்துத் துவைக்கப்பட்ட கல் அது. அழுக்குகளோடு எழுத்தின் முனைகளும் கரைந்து வைகைக்குள் போயிருக்கும். “அய்யோ இப்படி அடித்துக் கரைத்துவிட்டார்களே” என்று எண்ணம் தோன்றினால் மறு கணமே இன்னொரு உண்மையும் சேர்ந்து தோன்றும், சலவைத் தொழிலாளிகளின் கையில் கிடைத்ததால்தான் அந்தக் கல் இத்தனை நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வேறு யாரிடம் கிடைத்திருந்தாலும் அந்தக் கல்லின் துகள்கள்கூட மிஞ்சியிருக்காது.

அவ்வெழுத்துக்களை வாசித்த கே.ஜி. கிருஷ்ணன், கே.வி. இராமன் ஆர். நாகசாமி, முத்துக்கோனார் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் தங்கள் வாசிப்பின் வழியே வரலாற்றுக்குப் பங்களிப்பு செலுத்தினார்கள். எழுத்துக்கள் என்பவை காலத்தை நோக்கித் திறந்துவிடப்படும் புதிய சாலைகளைப் போன்றவை. அவற்றின் வழியே போய்க் கண்டுபிடிக்க எவ்வளவோ இருக்கின்றன. மதுரை, எழுத்துக்களின் நகரம். ஈராயிரம் ஆண்டுகளாய்த் தொடர்ந்து எழுதியும், தனது தெருவெங்கும் பட்டியக் கற்களைப் பரப்பியும் அழகுபார்த்த நகரம். சாலையெங்கும் பதிக்கப்பட்ட பட்டியக் கற்களுக்குப் பின்புறமாக எவ்வளவு ‘வரலாற்றுச் சாலை’களுக்கான திறப்புகள் இருக்கின்றனவோ, யார் அறிவார்?

மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடி மருதனில் தொடங்கி எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ள இளங்குமரனார் வரை எழுத்தெனும் பெரும் கொடையைத் தமிழுக்கு வழங்கியவர்கள்தான் எத்தனை? எத்தனை? எழுத்தாணிக்காரத் தெருவில் படியெடுக்கப்பட்ட ஏடுகளுக்குக் கணக்கேதும் உண்டா? வஜ்ரநந்தியில் தொடங்கி பாண்டித்துரை தேவர் வரை உருவாக்கிய சங்கங்களின் வழி தமிழ்த் தொண்டாற்றியவர்களை நினைவுகூரப் பக்கங்கள் போதுமா?

கீழடியில் சின்னஞ்சிறியதாய்த் தோண்டப்பட்டுள்ள குழிகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. மதுரையில் நிகழ்ந்ததாக சைவ இலக்கியங்கள் சொல்லும் திருவிளையாடலில் சிவனே எழுத்தாளனாக வருகிறான், எழுதியும் தருகிறான். அதுசார்ந்த விவாதத்தின்போது கடும் கோபம்கொண்டு பின்னர் பின்வாங்கவும் செய்கிறான். புராணங்களில் தொடங்கிப் புழுதியில் கிடக்கும் பானை ஓடுகள் வரை எழுத்துக்களின் அடையாளமே இந்நகரின் அடையாளமாக இருக்கிறது.

எழுத்தும் எழுத்தாளரும், வாசகரும் கூடிக் கொண்டாடும் இடமே கூடல் மாநகர். எழுத்துக்களை சங்கம் வைத்து இம்மாநகர் காக்கும்; அது முடியாதபோது சலவைக்கற்களாகவேனும் காக்கும். வைகை, எழுத்துக்கள் கரையும் இடமல்ல, காக்கப்படும் இடம். அதனால்தான் இது ‘தமிழ் வைகை’ என்றும் முன்னோர்களால் போற்றப்பட்டது. எழுத்தைப் போற்றும் மரபின் தொடர்ச்சியே, எழுத்துத் திருவிழாவான புத்தகத் திருவிழா. அதனை இம்மண்ணின் பெருவிழாவாக மாற்றுவோம்.

பதினோராம் ஆண்டு பெருவிழா இது. பல்லாயிரம் புத்தகங்களுக்கு இடையில் நடந்து போக கிடைக்கும் வாய்ப்பு வருடத்துக்கு ஒரு முறையே மதுரை மக்களுக்கு கிடைக் கிறது. இவ்வாய்ப்பைக் குடும்பத்துடன் வந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக் கான புத்தகங்கள் காத்திருக்கின்றன.

- சு.வெங்கடேசன்,

‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், தொடர்புக்கு: suvetpk.mdu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x