Last Updated : 31 Mar, 2017 09:21 AM

 

Published : 31 Mar 2017 09:21 AM
Last Updated : 31 Mar 2017 09:21 AM

வட கிழக்கு மாநிலங்களின் நேரப் பிரச்சினை!

இந்தியப் பொது நேரப்படி, வட கிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் (பிற பகுதிகளின்) விடியற்காலை 4 மணிக்கே நிகழ்ந்துவிடுகிறது. குளிர்காலங்களில் (பிற பகுதிகளின்) மாலை 4 மணிக்கே சூரியன் மறைந்துவிடுகிறது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் இந்தியப் பொது நேரப்படி திறக்கும்போது, பகல் பொழுதின் பாதி கழிந்துவிடுகிறது. குளிர்காலத்தில் இது மேலும் சில பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

வட கிழக்கு மாநிலங்களுக்கென்று தனி நேர மண்டலத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி ரீட்டா மஜும்தார் தாக்கல் செய்த பொதுநல மனு குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் இப்பிரச்சினை தொடர்பாக நியமித்த நிபுணர் குழு, ஒரே இந்திய நேர மண்டலம் காரணமாக வட கிழக்கு மாநில மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதாகக் கூறிவிட்டு, எப்படியிருந்தாலும் ஒரே நேர மண்டலத்தைத்தான் நாடு முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறிவிட்டதை தலைமை நீதிபதி அஜீத் சிங் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நேரம் சமமானதா?

இந்தியப் பொது நேரப்படி (ஐஎஸ்டி) தங்களுடைய வேலைகளைச் செய்ய நேர்வதால் ஏற்படும் இன்னல்களையும் இழப்புகளையும் பற்றி வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலமுறை முறையிட்டுள்ளனர். இந்திய நேர மண்டலம் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. இது இயற்கையாகவே ஏற்பட்டது என்றே நினைக்கிறோம். இதை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை சட்டம் உள்ளிட்டவை மறந்துவிட்டோம். இந்தியா என்ற நாட்டின் கீழுள்ள பகுதி அனைத்துக்கும் ஒரே நேர மண்டலத்தைக் கொண்டுவந்து காலத்தையும் இடத்தையும் வெற்றிகண்டுவிட்டதாகப் பெருமிதப்பட்டோம். உள்ளூரில் ஏற்படும் சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றுக்குப் பொருந்தும் வகையில் நேர மண்டலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதைப் புறந்தள்ளினோம். உள்ளூர் நேர மண்டலத்தைப் புறக்கணித்திருக்கக் கூடாது. இது மக்களுடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிப்பது.

இந்தியாவில் கிழக்குக் கோடியில் இருக்கும் ஊருக்கும், மேற்குக் கோடியில் இருக்கும் ஊருக்கும் இடையிலான இயற்கையான நேர வித்தியாசம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். நாட்டின் கிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் பிற பகுதிகளைவிட இரண்டு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ந்துவிடுகிறது. சூரியன் மறைவதும் அப்படியே. வட கிழக்கு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் நேர மண்டலமானது சமூக, பொருளாதார வேலைகளுக்கும் பொருத்தமானதாக இல்லை, பொதுப் புத்திப்படியும் சரியானதாக இல்லை என்கிறார் பத்திரிகையாளர், எழுத்தாளர், கல்வியாளரான சஞ்சய் ஹசாரிகா.

இந்தியப் பொது நேரப்படி, வட கிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் (பிற பகுதிகளின்) விடியற்காலை 4 மணிக்கே நிகழ்ந்துவிடுகிறது. குளிர்காலங்களில் (பிற பகுதிகளின்) மாலை 4 மணிக்கே சூரியன் மறைந்துவிடுகிறது. மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் இந்தியப் பொது நேரப்படி திறக்கும்போது, பகல் பொழுதின் பாதி கழிந்துவிடுகிறது. குளிர்காலத்தில் இது மேலும் சில பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

அரசின் தயக்கம்

இரு வேறு நேர மண்டலங்கள் இருப்பது சரிப்பட்டு வராது என்ற மனநிலையே ஆட்சியாளர்களிடம் நிலவுகிறது. வட கிழக்கு மாநிலத்தவருக்குத் தனி நேர மண்டலத்தை இப்போது அனுமதித்தால், நாளை அரசியல் ரீதியாக இதே போன்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து வரும் என்றே மத்திய ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். நாளடைவில் இது சுயாட்சி அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என்று அஞ்சுகின்றனர். இது குறுகிய கண்ணோட்டம்.

தங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விரக்தியில், “இனி அசாமில் தேயிலைத் தோட்ட வேலை நேரம்தான் (சாய் பகான்) கடைப்பிடிக்கப்படும்” என்று அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் அறிவித்தார். இந்தியப் பொது நேரத்தைவிட தேயிலைத் தோட்டங்களில் ஒரு மணி நேரம் முன்கூட்டி நேரத்தைக் கணித்து வேலையைத் தொடங்குவார்கள். தங்களுடைய வேலைக்காக வெவ்வேறு கால அளவை மக்கள் அந்தக் காலத்திலேயே கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதைத்தான் தேயிலைத்தோட்ட நேரம் காட்டுகிறது.

அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிர்ணய சபையில் நடந்த விவாதம் கூட இதற்கு சாட்சி. 28.12.1948-ல் உறுப்பினர் நசிருதீன் அகமது ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தார். அது பொது நேரம் பற்றியது. அவைத் தலைவரான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவரைப் பார்த்து உடனே கேட்டார், “எந்தப் பொது நேரத்தைக் கடைப்பிடிப்பது, கிரீன்விச் நேரமா, பம்பாய் நேரமா, கல்கத்தா நேரமா” என்று.

பம்பாய் நேரம், கல்கத்தா நேரம் என்று அம்பேத்கர் கேட்டது இந்தியப் பொது நேர நிர்ணய வரலாற்றில் உள்ள தோற்றப் பிழையை அம்பலப்படுத்துகிறது. 1905-ல் முதலில் பிரிட்டிஷாரால் இந்தியப் பொது நேரம் அமல்படுத்தப்பட்டது. பம்பாய் வர்த்தகர்கள் அந்த நேரத்துக்கேற்ப செயல்பட முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அப்போது பாலகங்காதர திலகருக்கு எதிராக தேசத்துரோக வழக்கையும் பிரிட்டிஷ் அரசு தொடுத்திருந்தது. இதை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். எனவே இந்தப் பொது நேர அமல் ஆட்சியாளர்களுக்குச் சவாலாகவே இருந்தது. 1955 வரையில் பம்பாய் நேரம் தான் அப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்டது. பம்பாய் நேரம் என்பது நாட்டின் பிற பகுதிகளைவிட 38 நிமிஷங்கள் முன்கூட்டியே கணிக்கப்படுவது.நேர மண்டலம் தொடர்பாகத் தீர்மானிக்க வேண்டிய அதிகாரம் நிர்வாகத் துறைக்குத்தான் என்பதால் நீதிமன்றம் மவுனம் சாதிக்க முடிவெடுத்திருக்கலாம். நீதிமன்றங்கள் பரிசீலிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு நழுவவிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும் இப்படி பகல்நேர வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள வசதியான நேர மண்டலம் பற்றிய வழக்குகள் நிறைய நடந்தன. கடைசியாக 1966-ல் தேசிய பொது நேரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகே அவை முடிவுக்கு வந்தன. சட்டத்தை உருவாக்குவதில், கண்ணுக்குப் புலப்படாத காலத்தின் பங்கு குறித்து டோட் டி. ரகோஃப் எழுதியிருக்கிறார்.

எல்லாம் நேரம்!

பல்வேறு சட்ட ஏற்பாடுகளுக்கு நேரம் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. நாம் எப்படி நேரத்தைக் கட்டமைக்கிறோம் என்பது, நாம் எப்படி சட்டத்தை உருவாக்குகிறோம் என்பதன் கண்ணாடி பிரதிபலிப்புதான் என்கிறார் ரகோஃப். இதை நேரத்தின் சட்டங்கள் என்கிறார். ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மணிக்குப் பணியைத் தொடங்கி, எத்தனை மணிக்குப் பணியை நிறைவு செய்ய வேண்டும், வார விடுமுறைகள் எத்தனை நாள், கோடை விடுமுறை போன்ற பருவகால விடுமுறைகள் எத்தனை நாளைக்கு, சமூகப் பணிகளுக்கான நேரம் எது என்ற சட்டங்கள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டவையே.

வட கிழக்கில் நேரத்தை மாற்றுவது தொடர்பாக வழக்கு தொடுத்த சஞ்சய் ஹசாரிகா, வளர்ச்சி அட்டவணை என்பது கிழக்கு மாநிலங்களுக்கு ஏன் சாதகமாக இல்லை என்று கேட்கிறார். இது அரசியல் சட்டம் அளிக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை பற்றிய பிரிவு 21-உடன் தொடர்புள்ளது. பொதுநல வழக்கில் குவாஹாட்டி உயர் நீதிமன்றம் ஆணை எதையும் பிறப்பிக்காவிட்டாலும், கிழக்குப் பகுதி மக்கள் மீது திணிக்கப்படும் இந்த நேர மண்டலத்தால் மக்களுடைய வாழ்வாதார உரிமைகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்று சட்ட ரீதியாக விசாரிப்பதற்காகவேனும் உத்தரவிட்டிருக்கலாம். வட கிழக்கு மாநிலங்களில் பயணம் செய்துபாருங்கள். அந்தப் பிராந்திய மக்களின் நேரப் பிரச்சினையை உணர்ந்துகொள்வீர்கள்!

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x