Published : 28 Jun 2019 09:23 AM
Last Updated : 28 Jun 2019 09:23 AM

360: 2022 தேர்தலுக்கு இப்போதே தயாராகும் மாயாவதி

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் கட்சிப் பணிகளில் மாயாவதி காட்டிவரும் தீவிர வேகத்தைப் பார்த்து உத்தர பிரதேசத்தின் ஏனைய கட்சிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கின்றன. 2014 தேர்தலைப் போல அல்லாமல் 2019 தேர்தலில் 10 தொகுதிகளில் அவருடைய கட்சி வென்றிருந்தாலும், வாக்கு வீதத்தில் ஒன்றும் முன்னேற்றம் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் பெற்றது 19.6%. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிகளுடன் மாயாவதி அமைத்த மகா கூட்டணிக்குப் பிறகு இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் பெற்ற வாக்குவீதம் 19.3% மட்டுமே. மாநிலத்தில் அசுர பலத்தில் பாஜக இருக்கும் நிலையில், தேர்தல் தோல்வியின் சூட்டோடு சூடாக சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை உடைத்தார் மாயாவதி. வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சி தனித்து நிற்கும் என்று அறிவித்தார்.

இது தொண்டர்களிடம் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. ‘கூட்டணிக் கணக்கிலேயே இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது’ என்றவர், கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி, வழக்கமாக தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் அமைக்கும் வாக்குச் சாவடிக் குழுக்களை இப்போதே மாநிலத்திலுள்ள அத்தனை தொகுதிகளிலும் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார். கன்சிராம் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோர் கூட்டு சக்தியாக வளர்ந்த கட்சி, இன்றைக்கு தலித்துகளில்கூட எல்லாப் பிரிவினரின் ஆதரவையும் பெற்ற கட்சியாக இல்லாமல், தேய்ந்துவிட்டிருக்கிறது. மாயாவதி சார்ந்த ஜாதவ் சமூகத்தின் கட்சியாக பகுஜன் சமாஜ் சுருங்கிவிட்டது என்ற பாஜகவின் பிரச்சாரத்திலுள்ள நியாயத்துக்கு  மாயாவதி முகங்கொடுக்கத் தயாராகிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துவருபவர், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதற்கான சமிக்ஞைகளையும் அனுப்பிவருகிறார். ‘2022 தேர்தல் வேலைகளை இப்போதே தொடங்குவானேன்?’ என்று கேட்டால், ‘இப்போதே நேரம் கடந்துவிட்டது’ என்று பதிலளிக்கிறார்!

நாசாவில் பணியாற்றுவோரில் இந்தியர்கள் எவ்வளவு பேர்?

சமூக வலைதளங்களில் யாராவது, எதையாவது கிளப்பிவிடுவதற்கு உண்மையான பதில் தேடி வாசகர்களுக்கு அதைச் சொல்வதும் இப்போதெல்லாம் ஊடகங்களுக்கு ஒரு கடமை ஆகிவிட்டது. ‘அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’வின் 58% ஊழியர்கள் இந்தியர்கள்’ என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் அடித்துவிட்டு அது வைரலாக, உள்ளபடி நாசாவில் வேலைசெய்வோரில் இந்தியர்கள் எவ்வளவு பேர் என்று ஒரு ஆய்வு நடந்திருக்கிறது. உண்மை என்னவென்றால், நாசாவில் வேலைசெய்வோரில் வெள்ளை இனத்தவர்தான் அதிகம்: 72%. ஆசியப் பிராந்தியத்திலிருந்து பணியாற்றுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 7% மட்டும்தான். அதில் இந்தியர்கள் எண்ணிக்கை மேலும் குறைவு!

எதிர்க்கட்சி வரிசையை அலங்கரித்த மஹுவா மொய்த்ரா

காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரிகள் சார்பில் போட்டியிட்ட பெருந்தலைவர்கள் பலர் தோல்வி அடைந்த நிலையில், பாஜக கூட்டணிக்குச் சவால் விடக்கூடிய எதிர்க்கட்சிப் பேச்சாளர்கள் யார் என்ற கேள்விக்கு முதல் அறிமுகக் கூட்டத்திலேயே விடை கிடைத்துவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வங்கத்திலிருந்து வந்துள்ள மஹுவா மொய்த்ரா தன் முதல் பேச்சிலேயே அசரடித்துவிட்டார். நாடாளுமன்றத்தின் நட்சத்திரப் பேச்சாளர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்களின் இடங்களை நிரப்பவிருக்கும் அடுத்த தலைமுறையின் முன் வரிசையில் நிற்கிறார் மஹுவா மொய்த்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x