Last Updated : 26 Sep, 2018 08:59 AM

 

Published : 26 Sep 2018 08:59 AM
Last Updated : 26 Sep 2018 08:59 AM

சூறாவளிகளினூடே தொடரும் ‘தி இந்து’வின் வெற்றிப் பயணம்

மிகக் குறைந்த பிரதிகளுடன் 1878 முதல் வெளிவரத் தொடங்கிய ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், வெகு தொலைவு பயணப்பட்டுவிட்டது. புதிய சவால்களை எதிர்கொண்டு மேலும் முன்னேறிச் செல்லத் தயாராக இருக்கிறது. செய்திகளைத் தருவதில் உள்ள நேர்மையும், பொதுநலன் சார்ந்த லட்சியமும்தான் அதன் மூல பலங்கள்.

தீவிரமான தேசப்பற்று, புரட்சிகரமான சமூகச் சீர்திருத்தம் ஆகிய லட்சியங்களுடன் ஆறு சென்னை இளைஞர்கள் ஒரு ரூபாய், 12 அணா முதலீட்டுடன் 1878 செப்டம்பர் 20-ல் வெளிக்கொண்டு வந்ததுதான் ‘தி இந்து’. இந்தப் பத்திரிகைக்கு வாசகர்களிடம் வரவேற்பு இருக்குமா, தொடர்ந்து இதை நடத்திட முடியுமா, இதை நடத்துவதால் ஆறு பேருக்கும் என்ன கிடைக்கப்போகிறது என்று எதுவுமே தெரியாமல்தான் பத்திரிகையைத் தொடங்கினர்.

பத்திரிகையின் முதல் தலையங்கத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டுவது, பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறாத இந்திய மக்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்ப்பது, மதம் - மதம் சார்ந்த சமூகங்களின் செய்திகளில் கறாரான நடுநிலையை வகிப்பது போன்ற லட்சியங்களோடு பத்திரிகை தொடங்கப்பட்டது. அந்த வரலாற்று சகாப்தத்தின்போது தொடங்கப்பட்ட பத்திரிகைகளில் ‘தி இந்து’ மட்டுமே தொடர்ந்து வளர்ந்துவருகிறது. இந்த அளவுக்குச் செழித்து வளர்வதற்கு ஒரே காரணம், இப்பத்திரிகையை என்ன லட்சியங்களோடு தொடங்கினார்களோ அவை அப்படியே ஆசிரியக் குழாத்தின் அடிப்படை விழுமியங்களாகவும், தொழில் நெறிகளாகவும் கடைப்பிடிக்கப்படுவதுதான் என்று கருதுகிறேன்.

உலகம் முழுவதுமே செய்தி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக செய்தித் தாள்கள் நெருக்கடியில் ஆழ்ந்துகிடக்கின்றன. பத்திரிகைத் துறை நொறுங்குகிறது, உருகிக் கரைகிறது என்றெல்லாம்கூடப் பேசுகின்றனர். ‘தி கார்டியன்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர் ஒரு புத்தகத்தைச் சமீபத்தில் எழுதியிருக்கிறார். ‘எப்போதும் அலையடித்துக்கொண்டிருக்கும் தகவல் சமுத்திரத்தில், கழுத்தளவு ஆழத்தில் புதைந்துகொண்டு, கோபம் கொப்பளித்தாலும் ஏதும் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். இச்செய்திகளில் சில உண்மையாகவும் பல தவறாகவும் இருக்கின்றன. வெகு விரைவிலேயே சமூகத்தில் செய்திகள் இல்லாமலேயே போகலாம் அல்லது செய்திகள் இல்லாததால் கூறப்படுவனவற்றை எல்லாம் நம்பும் நிலைக்கு மக்கள் வரலாம்’ என்று எழுதியிருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இத்தொழில் வளர்முகத்தில் இருக்கிறது. அதனால் இதழியல் தொழில் நன்றாக இருக்கிறது என்று பொருள் அல்ல. கருத்துச் சுதந்திரம், அதன் ஒரு பகுதியான பத்திரிகைச் சுதந்திரம் நெருக்கடிக்கு, அழுத்தங்களுக்கு, தாக்குதல்களுக்கு – சிலர் சொல்வதைப் போல முற்றுகைக்கும் – ஆளாகியிருக்கிறது. 2018-ல் உலக பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டெண்ணில், மொத்தமுள்ள 180 நாடுகளில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் இடம் 138. ‘எல்லைகள் இல்லா நிருபர்கள்’ என்ற பாரீஸ் நகர அமைப்பு இதைத் தொகுத்திருக்கிறது.

உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பொய்ச் செய்திகளும் போலிச் செய்திகளும் உலவுகின்றன. இதில் பல ஜனநாயகத்துக்கும் சமூகத்தின் ஆரோக்கிய நிலைக்கும் ஆபத்தானவை. இத்தகைய அச்சமூட்டக்கூடிய, சவால்கள் நிரம்பிய சூழலில் இதழியலுக்குப் புத்துரு கொடுத்து, உண்மையை மிளிரச் செய்வது நாட்டுப்பற்றுள்ள உணர்வாளர்களின் முன்னுரிமைக் கடமை. கடந்த 140 ஆண்டுகளில் மாறிவிட்ட உலகில், விலைமதிக்க முடியாத சொத்தான மக்கள் நம்பிக்கை என்ற ஆதரவுடன் ‘தி இந்து’ அந்த லட்சியத்துக்குத் தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்கிறது.

- என்.ராம்,

‘தி இந்து’ குழும வெளியீடுகளின் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x