Published : 18 Sep 2018 10:01 AM
Last Updated : 18 Sep 2018 10:01 AM

வசை, அவமதிப்பு, அவதூறுகள் அரசியல் தகுதி அல்ல ராஜா

மாற்றுக் கருத்து கொண்டவர்களை விமர்சிக்கவும் அவர்களோடு விவாதிக்கவும் ஆரோக்கியமான ஒரு சூழலைத் தமிழகத்தின் கடந்த கால அரசியல் தலைவர்கள் உருவாக்கி நம்மிடம் கையளித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பண்பட்ட நிலையை நம்மிடையே அரசியல் தலைவர்கள் என்ற பெயரில் உலவுபவர்கள் சீரழித்து சின்னாபின்னமாக்கிவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜாவின் பேச்சுகளும் அணுகுமுறையும் தமிழக அரசியலுக்கு ஒரு தலைக்குனிவு என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய சொந்தக் கட்சியின் சூழலையும் மாசாக்கி, ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாசாக்கிவருகிறார் ராஜா.

புதுக்கோட்டையில் ராஜா பேசியதாக சமூக வலைதளங்களில் உலாவரும் காணொளியில், நீதி, காவல் துறையைப் பற்றி அவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கின்றன. பொதுத் தளத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு உருவானதும், “அப்படிப் பேசவில்லை; அது திரிக்கப்பட்ட காணொளி” என்று கூறியிருக்கிறார் ராஜா. குறிப்பிட்ட இந்த சர்ச்சையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும்கூட, இப்படியான சர்ச்சைகளும், மறுதலிப்புகளும் ராஜாவுக்குப் புதிதல்ல; அது அவரது அரசியல் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே தொடர்கிறது. மாற்று இயக்கத் தலைவர்கள், மாற்றுக் கட்சிகள், மாற்று மதத்தினரைப் பற்றி எழுத்தில் கொண்டுவரவே கூடாத வசைகளை ராஜா பேசியதான குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. தன்னுடைய தவறுகளுக்கெல்லாம் ஒரு கேடயம்போல ‘இந்து’ என்பதை வார்த்தைக்கு வார்த்தை பயன்படுத்துவதன் மூலம், சமூக நல்லிணக்கத்தைப் பேணிவரும் பெரும்பான்மை மக்களையும் சேர்த்தே அவர் இழிவுபடுத்த முற்படுகிறார்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இரண்டாந்தரப் பேச்சுக்கு இதற்கு முன் இடம் இருந்ததில்லையா என்றால், நிச்சயம் இருந்திருக்கிறது. பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக கீழ்மட்டப் பேச்சாளர்களின் கொச்சைகளைக் கட்சிகள் ஊக்குவிக்கும் போக்கு இங்குள்ள பெரும்பாலான கட்சிகளில் கடந்த காலங்களில் இருந்திருக்கிறது. ஆனால், தலைவர்கள் கூடுமானவரை கண்ணியம் காப்பார்கள். தமிழக பாஜகவின் கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டாலேகூட கோவிந்தாசாரி, ஜனா கிருஷ்ணமூர்த்தி, கே.என்.லட்சுமணன், இல.கணேசன் என்று ராஜாவின் முன்னோடிகள் எவரும் இந்த மோசமான பேச்சுமுறையைக் கடைப்பிடித்தவர்கள் அல்ல. நாட்டை ஆளும் ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலர் என்பது எவ்வளவு கண்ணியத்துக்குரிய பதவி! இப்படியா நடந்துகொள்வது? ராஜா தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது பாஜக அவரைத் திருத்த முற்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளின் கடைசி நிலைத் தொண்டர்கள் செய்யும் தவறுக்கும் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் காலம் இது. எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல்வாதிகள் அதிகாரத்தையும் அகங்காரத்தையும் நிதானமின்மையையும் வெளிப்படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x