Last Updated : 20 Sep, 2018 09:35 AM

 

Published : 20 Sep 2018 09:35 AM
Last Updated : 20 Sep 2018 09:35 AM

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ஆகஸ்ட் கடைசியில் வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி வேகமாக வலம்வந்தது. ‘செப்டம்பர் முதல் வாரத்தில் வரிசையாக வங்கி விடுமுறைகள் வருகின்றன; செப்டம்பர் 2 ஞாயிறு, 3 கிருஷ்ண ஜெயந்தி, 4-5 தேதிகளில் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்; ஏடிஎம் இயந்திரங்களில்கூடப் பணம் இல்லாமல் போகும்’ என்று அந்தச் செய்தி பீதியூட்டியது. அடுத்த நாள் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்தது: ‘செப்டம்பர் 3-ல் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை; 4-5 தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவது ரிசர்வ் வங்கி ஊழியர்கள்தாம், பொதுத்துறை வங்கிகள் வேலைசெய்யும்.’

இப்படியான விளக்கத்தை வெளியிட எல்லாச் சமயங்களிலும் அவகாசம் வாய்ப்பதில்லை. கடந்த ஆண்டின் கார்காலத்தில் மும்பையில் ஓர் அடைமழை நாளின் அதிகாலையில் நகரத்தின் பலருடைய செல்பேசிகள் ஒளிர்ந்தன. நகரைப் பியான் எனும் புயல் தாக்கப்போவதாக வந்த தகவல், உடன் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. உண்மையில், பியான் 2009-ல் இலங்கையைத் தாக்கிய புயலின் பெயர். மும்பைக்குப் புயல் அபாயம் ஏதுமில்லை என்று வானிலை மையம் அறிவிக்க நண்பகலானது. அதற்குள் பள்ளிகளுக்கும் பணியிடங்களுக்கும் போக வேண்டிய பலர் வீடுகளிலேயே தங்கிவிட்டனர்.

இதில் உச்சமாகச் சில வாட்ஸ்அப் வதந்திகளைத் தொடர்ந்து குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பல மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். அரசாங்கம் கும்பல் கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

யார் பொறுப்பு?

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வதந்திகள் பரவுவதைத் தடுப்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பு என்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தது. வாட்ஸ்அப் நிர்வாகமும் வதந்திகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வாக்களித்திருக்கிறது. அதே வேளையில், சில அறிவியலாளர்கள், வாட்ஸ்அப் ஒரு தொழில்நுட்பம், அது சூதுவாது அறியாதது, பயனர்கள்தான் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். இந்த அவலத்தை யார் கட்டுப்படுத்துவது? பயனர்களா? வாட்ஸ்அப் நிர்வாகமா?

சிலகாலம் முன்பு வரை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் மூலமாகவே செய்திகள் வெளியாகின. அவை ஒரு தலைப்பட்சமாகவோ ஊதிப் பெருக்கியதாகவோ இருக்கலாம். ஆனால், பொய்ச் செய்திகள் குறைவு. ஏனெனில், எழுதியவருக்கும் வெளியிடுபவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் 20 கோடிப் பேர் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். இன்று வாட்ஸ்அப் வெறும் வலைதளம் இல்லை. அதுவே ஊடகமாக வளர்ந்திருக்கிறது. இதற்குத் தளம் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் இப்படியான பொய்ச் செய்திகளோ அவதூறுகளோ வெளியானால், அந்தப் பதிவுகளை நிர்வாகத்தால் நீக்கவிட முடியும். ஆனால், வாட்ஸ்அப் மறையாக்கம் செய்யப்பட்டது. அதாவது, அனுப்புநரும் பெறுநரும்தான் தகவலைப் படிக்க முடியும், வாட்ஸ்அப்பின் சர்வர் அதைச் சேமித்து வைத்துக்கொள்வதில்லை.

ஒருவேளை பெறுநரின் அலைபேசி அந்தத் தகவலைப் பெற்றுக்கொள்வதில் சுணக்க மிருந்தால், சர்வர் அதை 30 நாட்கள் வரை வைத்திருந்துவிட்டுப் பின்னர் அழித்துவிடும். இந்த மறையாக்கத்தால் பயனர்கள் தகவல்களை அந்தரங்கமாகப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இதை நிலைநிறுத்திக்கொண்டே, உண்மைச் செய்திகளின் பரிமாற்றத்துக்கு வகைசெய்கிற சவால் வாட்ஸ்அப்புக்கு இருக்கிறது.

அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வாட்ஸ்அப் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சமீப காலமாக ஒரு தகவலை ஃபார்வேர்டு செய்தால், அது ஃபார்வேர்டு என்கிற அடையாளத்தோடுதான் பகிரப்படுகிறது. இப்போது ஒரு தகவலை ஒரு சமயத்தில் ஐந்து முறைக்கு மேல் பகிர முடியாது. வாட்ஸ்அப் திரையில் வலதுமூலையில் ஒளிரும் துரித ஃபார்வேர்டு விசை விரைவில் அகற்றப்படும். குழுமங்களில் யார் யார் பதிவேற்றலாம் என்று அட்மின் நிர்ணயிக்க முடியும். சமீபத்தில் நடந்த மெக்ஸிகோ தேர்தலின்போது பயனர்கள் வேண்டிக் கேட்டுக்கொண்ட தகவல்கள் மெய்தானா என்று ஒரு சமூகக் குழு பரிசோதித்தது. இந்த மாதிரியை 2019 பொதுத் தேர்தலின்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் வாட்ஸ்அப் ஆலோசித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பரீதியாக வாட்ஸ்அப்பால் இன்னும் அதிகம் செய்ய முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

வாட்ஸ்அப் வதந்திகள் சில முறை கும்பல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்கு இட்டுச்செல்கிறது. தனி நபராகச் செய்வதற்கு அஞ்சுகிற செயல்களைக் கும்பல் சேருகிறபோது சிலர் செய்யத் துணிகிறார்கள். ஏனெனில், கும்பலுக்கு முகம் இல்லை. முகவரி இல்லை. அதற்கு வழக்கும் விசாரணையும் தேவை இல்லை. தானே தீர்ப்பு எழுதித் தண்டனையையும் நிறைவேற்றத் துடிக்கிறது. கும்பலின் வன்முறையில் உயிரிழப்பதும் காயப்படுவதும் மனிதர்கள் மட்டுமில்லை சட்டத்தின் மாட்சிமையும்தான். அரசு இதை அனுமதிக்கலாகாது. உச்ச நீதிமன்றமும் இதையேதான் வலியுறுத்தியிருக்கிறது.

பயனரின் பொறுப்பு

இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர்கள் பலரும் முதல் முறையாக இணையத்தைத் துய்ப்பவர்கள். அவர்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவே செய்திகள் வருகின்றன. அவர்கள் எல்லாத் தகவல்களையும் உண்மை என்று நம்புகின்றனர். அவர்களுக்கு டிஜிட்டல் கல்வி அவசியம். இதை வாட்ஸ்அப் நிர்வாகமும் சமூகசேவை அமைப்புகளும் வழங்க முடியும்.

சில நாட்களுக்கு முன்னர், பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஆலோசனைகள் பலவும் பயன் தரக்கூடியவை. ஒரு தகவலை ‘ஃபார்வேர்டு’ செய்வதற்கு முன்னால் பரிசீலிக்க வேண்டும்.

குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என்று பிற இணையதளங்களில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான பொய்ச் செய்திகளில் தகவல் பிழையும் எழுத்துப் பிழையும் மலிந்திருக்கும். அதிகம் பகிரப்பட்ட தகவல் உண்மையாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

வாட்ஸ்அப், தகவல் பரிமாற்றத்துக்கு வராது வந்த மாமணி. அதைக் கூத்தாடி உடைத்துவிடக் கூடாது. அதன் களைகளை அகற்றுவதில் வாட்ஸ்அப் நிறுவனத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அரசாங்கமும் சட்டத்தின் மாட்சிமை பேணப்படுவதில் கண்ணாக இருக்க வேண்டும். கூடவே, பயனர்களும் பண்பட வேண்டும்!

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x