Published : 27 Sep 2018 09:56 AM
Last Updated : 27 Sep 2018 09:56 AM

காந்தி, படேல், அம்பேத்கர் இன்று இருந்திருந்தால் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்!: ஜிக்னேஷ் மேவானி பேட்டி

இளைய தலைமுறை அரசியல்வாதிகளில் அடுத்தகட்ட நம்பிக்கைகளில் ஒருவராகப் பார்க்கப்படும் ஜிக்னேஷ் மேவானி சமீபத்திய அரசியல் நகர்வுகள் தொடர்பில் பேசினார். பேட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்.

மனித உரிமை ஆர்வலர்கள் கைது அச்சமூட்டுகிறது. ஒருபுறம் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள்; இன்னொருபுறம் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது நான்கு முனைத் தாக்குதல். முதலாவது, பாஜக கூட்டணி அரசின் பல்வேறு தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கை இது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார் மோடி. அப்படி எதுவும் நடக்கவில்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றார். அதிலும் தோல்விதான். வெளியுறவுக் கொள்கையும் தோற்றுவிட்டது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே, மக்களுடைய கவனத்தைத் திசை திருப்ப கும்பலாகச் சேர்ந்து அப்பாவிகளை அடித்துக்கொல்லத் தொடங்கினார்கள். ஆர்வலர்கள் மற்றவர்கள் கைது அனைத்தும் அரசின் தோல்விகளிலிருந்து மக்களுடைய கவனத்தைத் திசைதிருப்பத்தான். நாட்டுக்கு ஆபத்து என்று செயற்கையாக அச்சமூட்டி, தொலைக்காட்சி விவாதங்களை இதைக் கொண்டு நிரப்புவது அவர்களுடைய திட்டம். இரண்டாவது, தலித் செயல்பாட்டாளர்களை மாவோயிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தி, சமூகச் செயல்பாடுகளிலிருந்து ஒதுக்குவது. மூன்றாவது, அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தும் சூழலை உருவாக்குவது. அதனால் யாரும் தலித்துகளுக்கு ஆதரவாகப் பேசக்கூட அஞ்சுவார்கள். நான்காவது, பழங்குடிகளின் நலன்களைக் குலைப்பதும் அவர்களுடைய நோக்கம். பழங்குடிகளுக்கு ஆதரவாக யாருமே பேசக் கூடாது. அப்படி இருந்தால்தான் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவானவர்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட முடியும்.

ஐந்து சமூகச் செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அரசால் அவர்களைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சமூகநீதி குறித்துப் பிரதமர் பேசுகிறார். ஆனால், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகத்தவர், பட்டியல் இனத்தவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் மறுக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள்கூட அந்த வீடுகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இது இன்று நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலைக்கான வெளிப்பாடுதான். காந்தி, படேல், அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்திருந்தால் கைது செய்யப்பட்டவர்களுக்காக வீதியில் இறங்கிக் குரல்கொடுப்பதுடன் வழக்கறிஞர்களாக நீதிமன்றங்களுக்கே சென்று வாதாடியிருப்பார்கள். இந்தக் கைதுகள்தான் பாஜகவின் படுதோல்விக்குக் காரணமாகப் போகின்றன.

பீமாகோரேகான் போர் வெற்றியைக் கொண்டாட ஜனவரி 1-ல் கூடியிருந்தபோது என்ன நடந்தது?

நான் அப்போது அங்கில்லை. அன்றைக்குப் பட்டியல் இனத்தவர்கள்தான் தாக்கப்பட்டனர். பட்டியல் இனத்தவர்கள் யாரையும் தாக்கவில்லை. சம்பாஜி பிடே என்னுடைய குரு, தபஸ்வி என்கிறார் மோடி. வன்முறையைத் தூண்டியதாக சம்பாஜி பிடே, மிலிந்த் ஏக்போதே மீது ஐபிசியின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சம்பாஜி பிடேவை ஏன் கைதுசெய்யவில்லை; கைது நடவடிக்கையில் இரட்டை அணுகுமுறை ஏன்? இது நிச்சயமாகப் பட்டியல் இனத்தவரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. பிராமணியச் செயல்திட்டத்தைத்தான் அரசு கடைப்பிடிக்கிறது. அரசின் கண்ணோட்டப்படி பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், சிறுபான்மையினர் அனைவரும் ‘இதரர்கள்’. பட்டியல் இனத்தவரையும் சிறுபான்மைச் சமூகத்தவரையும் நசுக்கவே அரசு விரும்புகிறது. அவற்றின் தலைவர்களைப் பேச முடியாமல் செய்யப் பார்க்கிறது. இயக்கத்தையே மதிப்பிழக்க வைக்க திட்டமிட்டு இதைச் செய்கின்றனர். இதுதான் ‘சதி’ என்று முதல் நாளிலிருந்தே நான் அஞ்சுகிறேன். பீமாகோரேகானில் நான் இல்லை என்றபோதிலும் எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் கைதுகளுக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்?

பெருந்தொழில் நிறுவனங்களின் நலனைக் காக்கவே அரசு விரும்புகிறது. ஆதிவாசிகள் தங்களுடைய நிலங்களையும் வன நிலங்களையும் பெருநிறுவனங்களிடமிருந்து காக்கப் போராடுகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் அவர்களுடைய முழுக் கலாச்சாரமும் வேரோடு பறிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள். அரசின் ஆதரவு பெற்ற பெருநிறுவனங்களுக்கு எதிராக அவர்களால் போராட முடியாது. இந்தச் சூழ்நிலையில்தான் சமூகச் செயல்பாட்டாளர்கள் அவர்களுக்காகக் குரல்கொடுக்கின்றனர். கற்பனையான குற்றச்சாட்டுகள் மூலம் அவர்களுடைய வாயை அடைப்பது அரசுக்கு எளிது. பழங்குடிகளுக்குப் பரிந்து பேசும் எவர் மீதும் மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி குற்றச்சாட்டுகளை அடுக்குவது எளிது.

சமூகச் செயல்பாட்டாளர்கள் சதி செய்ததற்கு ஆதாரங்கள் கடிதங்களாகவும் உரையாடல் பதிவுகளாகவும் இருப்பதாக காவல் துறை தெரிவிக்கிறதே?

அவையெல்லாம் ஜோடிக்கப்பட்டவை. யாராவது அப்படி ஆயுதங்களையும் குண்டுகளையும் வாங்கும்படி வெளிப்படையாகப் பேசுவார்களா? பிரதமரைக் கொல்ல இப்படி யாராவது முட்டாள்தனமாக வெளிப்படையான சதியில் ஈடுபடுவார்களா, எல்லாவற்றையும் கடிதத்தில் எழுதுவார்களா? நம்மையெல்லாம் கிண்டர்கார்டனில் படிக்கும் பிள்ளைகள் என்று நினைக்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.

அரசின் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை, சமத்துவ லட்சியத்தைக் குலைப்பவை என்றால் எதிர்க்கட்சிகள் ஏன் இதை எதிர்க்கவில்லை?

அவர்கள் எதிர்க்கிறார்கள், அவர்களுடைய வழியில் அதைச் செய்கிறார்கள்.

அது சுரத்தில்லாமல் இருக்கிறதே?

எதிர்க்கட்சிகளை மறந்துவிடுங்கள்; நாங்கள்தான் எதிர்க்கட்சிகள். சமூகச் செயல்பாட்டாளர்களின் குரலை நெரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதில் வெற்றி கிட்டாது. ஒவ்வொரு கட்டத்திலும் இந்நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய தீய வழிகளுக்கு எதிராக நிற்பார்கள். சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

ஜியா உஸ் சலாம்,

‘தி இந்து ’ ஆங்கிலம் தமிழில்: ஜூரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x